ரவிச்சந்திரன் பரோல்  வழக்கில் புதிதாக மனுத் தாக்கல்  செய்ய  நீதி மன்றம் உத்தரவு

Rajiv case convic ரவிச்சந்திரன் பரோல்  வழக்கில் புதிதாக மனுத் தாக்கல்  செய்ய  நீதி மன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  ரவிச்சந்திரன் பரோல் கேட்டுள்ள வழக்கில் புதிதாக மனுத் தாக்கல்  செய்ய  உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை மத்தியச் சிறையில் உள்ளார்.

இவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும்  ரவிச்சந்திரன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

கொரோனா பரவல் காரணமாக ரவிச்சந்திரனுக்கு 3 மாதம் பரோல் வழங்கக்கோரி மனு அனுப்பினேன். ஆனால் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் பரோல் வழங்க முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதே காரணத்துக்காக ஏற்கெனவே ஒரு முறை பரோல் மறுக்கப்பட்டதை  உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

ரவிச்சந்திரன் 27 ஆண்டுக்கு மேலாக சிறையில் நன்னடத்தையுடன் உள்ளார். அவருக்கு 2 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்”.  கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனுதீதான விசாரணையில், ‘கொரோனா பரவலைக் காரணம் காட்டி இப்போது பரோல் விடுப்பு கேட்க முடியாது. சரியான விதிகளின் அடிப்படையில் புதிய மனு தாக்கல் செய்யலாம்” என்று உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

”ரவிச்சந்திரன் தாயாருக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தாயாரைக் கவனிப்பதற்காக பரோல் விடுப்புக் கேட்டு விண்ணப்பம் தரப்பட்டு நிலுவையில் உள்ளது” என்று  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து    விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துதுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021