இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார்

754 Views

இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்- மேஜர் மதன் குமார்

இந்திய இராணுவ அதிகாரியும், அரசியல், பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான மேஜர் மதன் குமார்  அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் ‘தாயகக் களம்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்

கேள்வி?

இந்தியாவிற்கான தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப் பட்டிருக்கின்றார். ஒரு சிரேஸ்ட அமைச்சராக இருந்தவர் அவர். இப்போது ஒரு தூதுவராக அனுப்பப் படுகின்றார். இந்த நியமனத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்!

மிலிந்த மொரகொடவிற்கு ஒரு வரலாறு உண்டு. பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு    நெருக்கமானவர் மிலிந்த மொரகொட. அவரின் அபிவிருத்தி திட்டம், அவரின் செயற்பாடுகள் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். இந்தியா இலங்கைக்கு இடையிலான வர்த்தகத்துறை, சுற்றுலாத்துறை, கலாச்சாரம் இவை பற்றி தூதராலயத்தில் பேசினார். இந்தியா இலங்கைக்கான உறவு அதள பாதாளத்தில் இருக்கும் இந்நிலையில், இவர் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு அரசியல்வாதி, வர்த்தகரும்கூட. இந்தியாவைப் பற்றி அதிக புரிதல் கொண்டவர். பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுகின்றார்.

இந்தியாவெளியுறவுக் கொள்கை மாற்ற வேண்டிய தருணம்அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை தூதுவராக நியமித்து, அவருக்கு அமைச்சு அதிகாரத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால், இலங்கை அதிபருக்கு நேரடியாகவே தகவல்களை வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. இந்த சமயத்தில் இலங்கை அரசாங்கம் இதை ஏன் செய்திருக்கின்றது என்றால், இலங்கை சீனாவுடன் உறவு வைத்து, கடந்த ஒன்றரை வருடங்களாக நெடுந்தூரம் பயணம் செய்து விட்டார்கள். அதற்கு இந்தியாவின் எதிர்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக துறைமுக நகரத் திட்டம். இதனால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள். இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான வாழ்வுரிமைப் பிரச்சினை.  சீனாவின் வழியில் சென்ற இலங்கை, தனது பெயரை தக்க வைப்பதற்காகவும், இலங்கை இந்திய உறவை வலுப்படுத்துவதற்காகவும், இந்தியாவை சாந்தப்படுத்துவதற்காகவும், மிலிந்த மொரகொடவை நியமித்திருப்பதாக நான் பார்க்கிறேன்.

கேள்வி?

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்ட யோசனை ஒன்றுடன் தான் மிலிந்த மொரகொட டெல்லிக்கு வரவிருக்கின்றார். முதலீடு, இருதரப்பு வர்த்தகம்,  உல்லாசப் பயணத்துறை என அவரது திட்டம் பல விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. இந்தத் திட்டம் எந்தளவிற்கு இந்தியா வினால் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக, வரவேற்கப்படக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

பதில்!

தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடன் இந்தியா பெரியளவிற்கு அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இதற்கான எதிர்ப்பு எதுவும் இந்தியா தெரிவிக்க வில்லை. இதனை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒருவகையில் வரவேற்பார் என்று நம்புகின்றேன். ஏனெனில், நரேந்திர மோடி அவர்களுக்கும் மிலிந்த மொரகொட விற்கும் ஏற்கனவே 15 வருடகாலத் தொடர்பு இருக்கின்றது. அவர் குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது, அதனால் இதை முன்னெடுத்துச் செல்வார் என்று தான் நினைக்கின்றேன்.

மிலிந்த மொரகொட இந்திய ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில், இந்தியா இலங்கையுடனான உறவு வர்த்தகத் தொடர்பு போலவே இருக்கின்றது. வர்த்தகத்தில் கொடுக்கல் வாங்கல்களை எப்படி மேற்கொள்கின்றோமோ அப்படித் தான் இருக்கின்றது. என்று குறிப்பிட்டுள்ளார். இதை முன்னேற்றுவதற்கான மூலோபாய உறவு நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் தனது கருத்தைத் தெரிவிக்கின்றார்.

இரண்டாவது இந்தியாவின் மிக முக்கியமான கோரிக்கையான மாகாணசபைத் தேர்தல், மாகாண சபைக்கு உரியதான சுயாட்சி தொடர்பில் தனது சொந்தக் கருத்தாக ஒன்றைத் தெரிவிக்கின்றார். இந்த மாகாண சபை என்பது பழைய நடை முறையாக உள்ளது. அது எந்தளவிற்கு சாத்தியமானது என்று தெரியவில்லை என்று தனது கருத்தைத் தெரிவிக்கின்றார். மாகாண சபைக்கு உடன்படாத ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைக்குப் பதிலாக அமெரிக்கா போன்ற நாடுகளைப் போன்றதான ஒரு செனட் அமைப்பைக் கொண்டு வந்து, அங்கே இருக்கும் மக்களுக்கான ஓரளவுக்கான சுயாட்சியை தரவேண்டும் என்ற ஒரு பார்வை அவருக்கு இருக்கின்றது. இதற்குப் பின்னர் இந்தியாவுடனான உறவு வர்த்தகத் (பரிமாற்றத்)  தொடர்பு என்ற நிலையில் இருந்து மூலோபாய உறவு நிலைக்கு கொண்டு வரும் என்று அவர்  நினைப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு ஒன்றும் புதுடில்லிக்கு வரவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

பதில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய வருகையை எதிர்பார்த் திருக்கின்றோம். இது கடந்த வருடம் நடந்திருக்க வேண்டியது. கொரோனா காரணமாக நடக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்த போது சந்தித்தார். அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது நடக்கிறது. இவர்கள் இங்கு வரும் போது, நிச்சயமாக பாரதப் பிரதமர் அவர்களையும், உள்துறை அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியாவின் பார்வை என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் ஒன்றாக இணைந்தாலும், இதற்கு மிக வலிமையான ஒரு அரசியல் தலைமை தேவைப்படுகின்றது. இந்த அரசியல் தலைமை இல்லாதபோது இந்தியா தன்னுடைய திட்டங்களையும், 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றால், இந்தியா யாரை ஆதரிக்கும் என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. TNA என்பது ஒரு கூட்டமைப்பு.

அதற்குள் ஒரு மிக முக்கியமான தலைவர் உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். அல்லது வெளியில் இருந்து வரலாம். அந்த மாதிரி ஒரு தலைவர் இருந்தால் தான், இந்தியா அவர்களுடன் கூட நின்று ஒரு அரசியல் தீர்வைக் காண முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. இதே விடயம் TNA இற்கு வலியுறுத்தப்படும் என்று நான் நம்புகின்றேன்.

பல கட்சிகள் உள்ளே இருந்தாலும், தங்களுடைய கொள்கை, தங்களுடைய வளர்ச்சி என்று பாரத்தாலும், அதைத் தாண்டி ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தலைவர் உருவாகி வருவது ஈழத் தமிழர்களுக்கு ஒரு மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும். மிகவும் நல்லதொரு தொடக்கமாக இருக்கும். 2009 ஈழப்போர் முடிந்து இன்று வரை காத்திருந்தும் அப்படிப்பட்ட ஒரு நிலைமை வரவில்லை. அதை முன்னெ டுப்பதற்கு TNAயை மோடி அவர்கள் வழிநடத்துவார் என்று நான் நம்புகின்றேன்.

இந்தியாவின் அணுகுமுறை என்ன?

கேள்வி?

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இவை குறித்து இந்தியாவின் அணுகுமுறை என்ன?

பதில்!

துறைமுக நகரத் திட்டத்தை பாராளுமன்றில் கொண்டு வரும் போது இந்தியா அதற்கு ஒரு எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்தியா மௌனம் சாதிக்கிறது. இன்றுவரை இந்தியா மௌனம் சாதித்துக் கொண்டிருப் பதற்கான காரணங்கள் இதுவரை இந்தியா இலங்கை உறவில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என்னவென்றால், IPKF என்று சொல்லப்படும் அமைதிப்படை அங்கு வந்தது. பின்னர் இந்தியா அதை பின்வாங்கிக்  கொண்டது. அன்று ஆட்சியில் இருந்த சிறீலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளதும் தலைவரதும் ஒருமித்த கருத்தால் அது பின்வாங்கப்பட்டது. அதற்குப் பின்னர் ராஜீவ் காந்தி அவர்களின் மரணம் நிகழ்ந்தது. அதற்குப் பின்னர விடுதலைப் புலிகளுடனான இந்திய அரசின் உறவு ஒரு வகையாக முடிந்து விட்டதே என்று நான் சொல்லுவேன். ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு உண்டான உறவும் ஒரு தேக்க நிலையை அடைந்து, அதற்கு மேல் முன்னேறவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2014 மோடி அவர்கள் அரசாங்கம் அமைக்கும் போது, இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து இறங்குகிறார். அதன் பின்னர் இந்த உறவு முறை ஒருவகையான வேகம் எடுக்கிறது. இதில் 3 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். ஒன்று இலங்கை அரசங்கம், மற்றையது இந்திய அரசாங்கம், மூன்றாவது ஈழத் தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த துறைமுக நகரம் கிழக்கு முனையம், இவ்வாறு சீனாவின் ஒரு காலனியமாகவே இலங்கை வெகு வேகமாக மாறியது குறிப்பாக கொரோனா வந்த பிறகு. இந்த சூழ்நிலையில் இதுவரை இருந்த உறவு, இதுவரை இருந்த வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கக்கூடிய தருணத்திற்கு இந்தியா வந்து விட்டது.

இந்த மாற்றம் இனிவரும் காலங்களில் இலங்கையை எப்படிக் கையாள்வது, இலங்கை அரசைக் குறிப்பாக எப்படிக் கையாள்வது, இலங்கை அரசு என்பதை விட ராஜபக்ஸ அரசு என்று குறிப்பாகக் கூறுவேன். இந்தக் குடும்ப அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்பதை விவாதித்து, இதற்கு உண்டான பின்புல  வேலை களையும் முடித்து விட்டு, இதற்கு உண்டான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என நான் எதிர்பார்க்கிறேன். இதற்கும் காலம் தாழ்ந்து விட்டது. இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான தாக்கத்தை உண்டாக்கியது. அந்த சூழ்நிலையில் இதைப் பண்ண முடியவில்லை.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

வரும் ஜனவரியில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச தேர்தல் வருகின்றது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, இது ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ நடவடிக்கைகளும் தொடங்கும் என நினைக்கிறேன். தேர்தல் வெற்றி இந்திய ஜனநாயக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும். இதை இவர்கள் தற்போது முக்கிய குறிக்கோளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஒருபுறம் நடந்தாலும், இதற்குப் பின்புறம் நடக்கும் வேலைகள், பல விடயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு, மூன்று தடவை அமெரிக்கா சென்று வந்திருக்கின்றார்.

அதன் பின்னர் இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்கூடாகக் காண்கின்றோம். பசில் ராஜபக்ச அவர்கள் ஒரு அமெரிக்கப் பிரஜை. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இலங்கையர். இலங்கை அரசமைப்பு முறைப்படி அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரை நிதியமைச்சராக ஆக்குவதற்காக சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கிறோம்.  அவர் அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்தவர். இவை அனைத்தையும் நீங்கள் கணிப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால், இதற்கான பின்புல வேலைகள் மிக வேகமாக நடந்திருக்கின்றது. இதற்கான பாதைகள் என்னவென்று இரண்டு மூன்று மாதங்களில் இந்த வருடக் கடைசியில் தெரிய வரும் என்பது எனது நம்பிக்கை.

ilakku-weekly-epaper-144-august-22-2021

1 COMMENT

Leave a Reply