மொழியாக்கம்: ஜெயந்திரன்
“ஆபிரிக்காவில் உள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணத்தினால், கோவிட்-19 பெருந்தொற்றுக்குரிய தடுப்பூசிப் பரிசோதனைகளை அந்த மக்கள் மீது மேற்கொள்ளலாம்” என்று கூறி, பிரெஞ்சு மருத்துவர் ஒருவர் கடந்த புதன்கிழமை ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
வெள்ளிக்கிழமையளவில் அந்த மருத்துவர் வெளிப்படுத்திய கூற்று ‘இனவாதம் மிக்கது’ என்ற என்ற கருத்து மிகப் பலமாக எழவே, “தான் கவனமில்லாமல் வெளியிட்ட கருத்துக்காக” அந்த மருத்துவர் மன்னிப்புக் கோரியிருந்தார்.
ஆனால் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்ட சிந்தனைப்போக்கு ஒன்றும் புதிய விடயமல்ல என்பது கவனிக்கப்பட வேண்டும். அது அந்த மருத்துவருக்கு மட்டுமே பிரத்தியேகமான கருத்து என்றும் கொள்ள முடியாது. தாம் மற்றையவர்களை விட ‘உயர்ந்தவர்கள்’ என்ற உளவியற் சிக்கலைக் கொண்டவர்கள் ஏனையோரை அவமானப்படுத்துவது என்பது பல்வேறு தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் ஒரு விடயமாகும்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வளைவில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பின் பின்னர், ஆபிரிக்க நாடுகளில் இந்த தொற்று அதிகரிப்பு ஏன் ஏற்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறாக எழுப்பப்பட்ட வினாக்களின் தொனியைப் பார்க்கும் போது, ஏதோ ஒரு வகையில் ஆபிரிக்க மக்கள் மரபணு ரீதியாக இந்த வைரசை எதிர்க்கும் தன்மை உடையவர்களா என்ற கேள்வி எழுப்பப்படுவதை உணரக்கூடியதாக இருந்தது.
உயிரியல் ரீதியாக அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்றால் இப்படிப்பட்ட வினாக்கள் எதற்காகத் தொடுக்கப்படவேண்டும் என சிந்திக்கத் தோன்றுகின்றது.
பூகோளத்தின் தென்பகுதியில் வாழ்பவர்கள் ‘மனிதத் தன்மையற்றவர்கள்’ என்ற சிந்தனையே அடிமை வாணிபத்துக்கும் காலனீயத்துக்கும் காரணமாக அமைந்தது. ஒரு மனிதர் மற்றவர்களை விட தாழ்நிலையில் இருக்கிறார் என்று சிந்திக்காமல் எப்படி மனிதர்களை வைத்து வாணிபம் செய்ய முடியும்?
ஆபிரிக்காவில் தான் சந்தித்த மக்கள் உண்மையிலேயே மனிதத் தன்மை உடையவர்களா என்ற கேள்வி ‘இருளின் இதயம்’ (Heart of Darkness) என்ற தனது புத்தகத்தை எழுதிய ஜோசவ் கொன்றாட்டின் (Joseph Konrad) மனதைக் குடைந்து கொண்டிருந்தது. “அவர்கள் மனிதத் தன்மையற்றவர்கள் அல்ல. அவர்கள் மனிதத் தன்மை உள்ளவர்களா இல்லையா என்ற என்ற சந்தேகம் மோசமானது” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான வினாக்களை மிகச் சாமான்யமாக எழுப்புவது, இப்படிப்பட்ட எண்ணங்கள் சமூகத்தில் பலமடைவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. இரண்டாந்தர மனிதர்கள் என்ற இந்தச் சிந்தனையே மனித வாணிபத்துக்கு அடித்தளமாக அமைவதைப் புரிந்து கொள்ளமுடியும்.
உயிரோடு இருந்த போது அவமானம். இறந்த போது காட்சிப்பொருள்
சாரா பாட்மன் (Sarah Bartman) தற்போது தென் ஆபிரிக்கா என அழைக்கப்படும் நாட்டிலே பிறந்த கொய்க்கோய் (Khoikhoi) இனத்தைச் சேர்ந்த ஒரு பெண். 1810ம் ஆண்டு அவர் கடத்தப்பட்டு, ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் அமைப்பின் காரணமாக குறிப்பாக அவரது அசாதாரணமான பின்புறத்தின் காரணமாக ஐரோப்பிய மக்களுக்கான ஒரு காட்சிப் பொருளாக்கப்பட்டார்.
அவர் மனிதர் அல்ல என்று எண்ணியதாலேயே பலர் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர் இறந்த போது, அவரது உடலை வெட்டிப் பகுப்பாய்வு செய்த பிரெஞ்சு மருத்துவர் ஒருவர், குரங்கை ஒத்த தோற்றத்தை அவர் கொண்டிருந்தார் என்று முடிவு செய்தார்.
2002ம் ஆண்டில் தென் ஆபிரிக்க அரசு இறுதியாக பிரெஞ்சு தேசிய அருங்காட்சியகத்திலிருந்து அவரது உடலை மீளப்பெற்றுக்கொண்டது. இந்த அருங்காட்சியகத்தில் அவரது உடல் 150 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பு இனத்தவருக்கும் இடையே உயிரியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன என்ற ஒரு விஞ்ஞானக் கோட்பாட்டின் காரணமாக, உயிரோடு இருக்கும் போது பாட்மன் அவமானப்படுத்தப்பட்டார். இறந்த போதோ அவர் காட்சிப் பொருளாக்கப்பட்டார்.
பாட்மன் இறந்து இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட இக்காலப் பகுதியில், சில இனங்களைச் சார்ந்த மக்களைக் காட்சிப்பொருளாக்கும் செயற்பாடு முன்னரைப் போலப் பகிரங்கமாக நடைபெறுவதில்லை. ஆனால் வேறு சிலரின் நன்மைக்காக ஒரு சிலரது உடல்களைப் பயன்படுத்தும் செயற்பாடு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மேற்கு ஆபிரிக்காவில் 2014ம் ஆண்டு எபோலா (Ebola) நோய் பரவிய போது, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆய்வுகூடங்களால் 250,000 இரத்த மாதிரிகள் அங்கிருந்து எடுக்கப்பட்டன. நோயாளிகள் குறிப்பிட்ட நோயின் காரணமாகச் சோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்ட போது, அவர்களது எந்த விதமான சம்மதமும் பெற்றுக் கொள்ளப்படாமல், புதிய தடுப்பூசிகளையும் மருந்துகளையும் உருவாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்பவர்களின் நோக்கங்களுக்காக இந்த இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன.
தேசிய பாதுகாப்பைக் காரணங்காட்டி, தற்போது தங்களிடம் இவ்வாறான இரத்த மாதிரிகள் எத்தனை இருக்கின்றன என்பதை வெளிப்படுத்த தென் ஆபிரிக்க, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகிறார்கள். ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதனூடாக மில்லியன் கணக்கிலான டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளவுமே அந்த இரத்த மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன. “ஆனால் அவர்கள் உருவாக்கும் மருந்து எதுவுமே இலவசமாக வழங்கப்படமாட்டாது. அது விற்பனைக்கு மாத்திரமே விடப்படும்” என்று ஒரு நோயாளி கூறினார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஏழை எளியவர்களாக இருப்பதன் காரணமாகவும், அவ்வாறான ஆய்வுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் அறிவை அவர்கள் கொண்டிராததன் காரணத்தாலும், அவர்களுக்கு தெரியாமலேலே அவர்களது இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமது சிகிச்சைக்கான பணம் செலுத்துபவர்களுக்கு மருந்து தயாரிக்க விரும்பியவாறு பயன்படுத்தப்படுகிறது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட மருத்துவரீதியிலான வழக்குகள்
1996ம் ஆண்டு, நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தை (Kano State) மையமாகக் கொண்டு, ஒரு பெரும் மூளைக்காய்ச்சல் (Meningitis) தொற்று ஏற்பட்டது. உலகத்திலேயுள்ள மருந்து தயாரிக்கும் பெருநிறுவனங்களில் ஒன்றான பைஸர் (Pfizer) நிறுவனம் தாம் உருவாக்கிக் கொண்டிருந்த ஒரு மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்துச் சோதித்து பார்க்க முடிவுசெய்தது.
நோயாளிகளின் பெற்றோரிடமிருந்து உரிய சம்மதத்தைப் பெறுவதற்கு அந்நேரத்தில் பைஸர் நிறுவனம் தவறியிருந்தது. அதே வேளையில் இந்நோய்த் தொற்றின் காரணமாக நோயாளர்களின் பெற்றோரும் இதுபற்றி விழிப்பாக இருக்கவில்லை. பல வருடங்கள் கழிந்த பின்னர், 2009 ஆம் ஆண்டிலேயே, பைஸர் நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே எட்டப்பட்ட ஓர் உடன்பாட்டைத் தொடர்ந்து, கானோ மாநில அரசுக்கு, 75 மில்லியன் டொலர்கள் நட்ட ஈட்டையும் அந்தத் தொற்றின் போதும் அக்காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது இறந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோருக்கு 175,000 டொலர்களையும் நட்ட ஈடாகச் செலுத்தியது.
அந்த மூளைக்காய்ச்சல் நோயின் காரணமாகவே குறிப்பிட்ட அந்த நான்கு பிள்ளைகளும் இறந்ததாகவும் அவர்களது இறப்புக்கு தமது மருந்து காரணம் அல்ல என்றும் பைஸர் நிறுவனம் அப்போது வாதிட்டது. ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே உடன்பாடு எட்டப்பட்டதன் காரணத்தால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மருத்துவ உண்மைகளை உள்ளடக்கிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள ஊடகவியலாளர் களால் முடியவில்லை.
1994ம் ஆண்டு, ஏசற்ரி (AZT) என்ற அழைக்கப்பட்ட ஒரு மருந்து தொடர்பாக இவ்வாறான மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிடிசி (CDC) மற்றும் என்ஐஎச் (NIH) போன்ற நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டங்கள் நோயாளிகளுக்குப் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. நமீபியாவில் 1900ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஜேர்மானிய மருத்துவர்களால் ஹெரேரோ (Herero) பெண்கள் மீது கர்ப்பத்தடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இனங்களுக்கிடையிலான கலப்புத் திருமணங்களைத் தடுப்பதற்கான விஞ்ஞான விளக்கத்தைக் கொடுப்பது அவர்களது நோக்கமாக இருந்தது.
பூகோளத்தின் வடக்கிலுள்ள நாடுகளில் இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்வது எவ்வளவு தூரம் கடினமானது என்பதையும் அதற்கான உரிய அனுமதியைப் பெறுவதற்கு எவ்வளவு தடைகளைக் கடக்க வேண்டும் என்பதையும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் பூகோளத்தின் தென் பகுதியிலுள்ள நாடுகளிலோ குறிப்பிட்ட அரச அதிகாரிகளுக்கு இலஞ்சத்தைக் கொடுத்து இவ்வாறான விடயங்கள் மிக இலகுவாகச் சாதிக்கப் படுகின்றன.
இப் பெரும் நிறுவனங்கள் இவ்வாறான ஆய்வுகள் மூலம் பாரிய இலாபங்களை ஈட்டும் அதே நேரம் இவ்விடயங்கள் பற்றி அதிகம் அறியாத நோயாளர்களின் நலன்கள் எவ்விதத்திலும் கருத்திலெடுக்கப்படுவதில்லை. ‘தாம் இரக்க குணம் படைத்தவர்கள் என்றும் மக்களுக்கு நன்மை செய்கின்றோம்’ என்றும் வெளியில் பாசாங்கு செய்யும் இவ்வாறான ஆய்வாளர்களின் வேலை, அவர்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது என்பதைப் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
காசநோய், மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களின் காரணமாக மில்லியன் கணக்கிலான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்ற நிலையுடன், கோவிட்-19 மற்றும் எபோலா போன்ற தொற்றுநோய்களை முற்றிலும் இல்லாமற் செய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதிருப்பதை அவதானிக்கலாம்.
நோய்களைப் பொறுத்த வரையில் அவை யாரைப் பாதிக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
உறுதிப்படுத்தப்படும் சந்தேகம்
2011ம் ஆண்டில், ஒசாமா பின் லாடனைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், ஒரு பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தின் பெயரில், சிஐஏ (CIA) ஒரு போலித் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் நாட்டில் டிஎன்ஏ (DNA) மாதிரிகளைப் பெற்றிருந்தது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே பாதிப்புக்கு ள்ளாகியிருந்த இருதரப்பு உறவில் இம் முயற்சி மேலும் விரிசல்களை ஏற்படுத்தியது. பூகோளத்தின் வடமுனையில் உள்ள நாடுகள் மருத்துவ சேவைகளை வழங்க முன்வரும் போது, அவர்களுக்கு வெளியில் சொல்லப்படாத நோக்கங்கள் இருக்கின்றன என்று சந்தேகித்தவர்களின் சந்தேகங்களை இந்த முயற்சி உறுதிப் படுத்தியது.
கொரோனாப் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் மிகவும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஏற்கனவே சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கின்ற மருத்துவத் துறையினருக்கு இன்னொரு உடன் மருத்துவரி டமிருந்து வரும் இவ்வாறான கவனமற்ற கருத்துகள் எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் ஆபிரிக்காவும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஒரு பிரெஞ்சு மருத்துவர் கருத்து வெளியிடும் நேரத்தில் சந்தேகங்களும் கோப உணர்வுகளும் வெளிப்படுவதைக் கண்டு எவ்விதத்திலும் ஆச்சரியப்பட முடியாது. முக்கியமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஆபிரிக்காவில் மிகக் குறைந்தளவானவர்களே இப்பெருந் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நோக்கப்பட வேண்டும்.
ஆபிரிக்காவின் மருத்துவக் காலனீயம் தொடர்பான வரலாற்றையும் கோவிட்-19 பெருந்தொற்றின் தற்போதைய நிலைமையையும் எடுத்துப் பார்க்கும் போது, ஒரு சில மனிதர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுகின்ற இனவாதம் நிறைந்த, மனிதத்தன்மையற்ற அணுகுமுறைகளின் தொடர்ச்சியாகவே இவ்வாறான கூற்றுக்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
வடபூகோளத்தின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடன் மீண்டும் ஒரு தடவை தாம் கினிப்பன்றிகளாகப் பயன்படுத்தப்படும் சூழல் இருப்பது கண்டு எவ்வாறு ஆபிரிக்க மக்கள் ஆத்திரம் அடையாது இருக்க முடியும்? மனித உயிர்களைக் காக்கும் ஆற்றலைக் கொண்ட, இவ்வாறான மிக விலையுயர்ந்த மருந்துகளை வழங்கக்கூடிய ஆற்றலை மிக அதிக நிதி வழங்கலைப் பெற்றுக்கொள்கின்ற அவர்களது சுகாதாரக் கட்டமைப்புகள் கொண்டிருக்கும் அதே வேளை, இதே மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாது ஆபிரிக்க மக்கள் அன்றாடம் இறக்கின்ற நிலை என்பது மனித சமூகத்தை மிகவும் வெட்கத்துக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு விடயமாகும்.
நன்றி: அல்ஜசீரா