இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்

151 Views

இயற்கையை நாம் அழித்தால்பொ.ஐங்கரநேசன்

நாம் அழித்தால்3 இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம் 1 இன் முக்கிய பகுதிகள் இங்கே தரப்படுகின்றது.

கேள்வி:
தாங்கள் தாவரவியல் ஆசிரியராக இருப்பதுடன், சூழலியல் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றீர்கள். இந்த சூழலியல் விழிப்புணர்வு பற்றி எங்களுக்கு கூற முடியுமா?

பதில்:
அடிப்படையில் நான் ஒரு தாவரவியல் ஆசிரியன். ஆனால் தாவரவியல் என்ற தனி ஒரு சிறு அலகிற்கும் அப்பால், சூழலியல் விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றேன். சூழலியல் என்பது ஒட்டுமொத்த இயற்கையையும் உள்ளடக்கிய பரந்த ஒரு விடயம். மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிரினங்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலாக சூழல் மாசடைதல் என்னும் பிரச்சினை நிலவி வருகின்றது. தற்போது எவரிடமும் உலகை அச்சுறுத்தும் விடயம் என்னவென்று கேட்டால், கொடிய கொரோனா என்னும் கொள்ளை நோயைத் தான் சொல்வார்கள்.  இன்றைய அளவில் நாற்பத்தைந்து இலட்சத்திற்கும் அதிகமானோரைப் பலிகொண்டு, அதைவிட பன்மடங்கானோரில் தொற்றுதலை ஏற்படுத்திய கொரோனா இயற்கைக்கு ஒரு சவாலாக உள்ளது.

இதைவிட பெரியதொரு சவாலை நாங்கள் சத்தமில்லாது எதிர்கொண்டு வருகின்றோம். அதாவது காபனீரொட்சைட்டால் வளிமண்டலத்தை நிரப்பிக் கொண்டிருப்பதால், பூமி சூடாகிக் கொண்டிருக்கின்றது. Global warming என்று சொல்வார்கள். இதனால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தான் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது. எனவே இது தொடர்பாக நாங்கள் கூடியளவு அக்கறை செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த ஓகஸ்ட் மாத முதல் வாரத்தில் நாடுகளிடையேயான காலநிலை தொடர்பான அறிக்கையைப் பார்த்தோமானால், பூமி சூடாகின்றது என்பதை உறுதிப்படுத்தியதோடு, பூமியின் மத்திய ரேகையில் ஒரு வெப்பநிலை இருக்கும். துருவப் பகுதியில் ஒரு வெப்பநிலை இருக்கும்.

பூமியின் சராசரி வெப்பநிலையாக 15 பாகை செல்சியஸ்  என்று சொல்லப்படுகின்றது.  இந்த வெப்பநிலை 1.5 பாகை செல்சியசினால் அதிகரிக்குமாக இருந்தால், உலகில் கரையோரப்பகுதிகளில் பல நாடுகளில் கடலுக்குள் கபளீகரம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே 1.1 பாகை செல்சியஸ் உயர்ந்து விட்டது. இன்னும் .4 செல்சியஸ் தான் இருக்கப் போகின்றது. வெப்பநிலையை மேலும் அதிகரிக்க விடாது தடுப்பதன் மூலம் கரையோரப் பகுதிகள் மூழ்கின்ற விடயத்தை தடுக்கலாம்.

கடந்த வாரம் ஆட்டிக் பகுதியில் கிறீன்லாந்திற்கு மேல் தொடர்ச்சியாக பலமணி நேரங்களுக்கு மேல் மழை பொழிந்திருக்கின்றது. இது வழமையான ஒரு நிகழ்வு அல்ல. இந்த மழையின் போது பனி உருகுவதற்கு தேவையான வெப்ப நிலையிலும் அதிகமான வெப்பநிலை உயர்ந்து பனிப்பாளங்கள் உருகத் தொடங்கியிருக்கின்றது. துருவப்பகுதிப் பனித்தொப்பிகள், இமயமலை பனி போன்றவை உருகத் தொடங்கினால் கடல் மட்டம் உயரத் தொடங்கும். இது ஐ.நா வினால் ஸ்தாபிக்கப்பட்ட நாடுகளுக்கிடையேயான காலநிலை மாற்றத்திற்கான குழு அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இது பல்வேறு நாடுகளினதும் கரையோரப் பகுதிகளை மூழ்கடிக்கப் போகின்றது.

எங்களின் பிரச்சினை என்னவென்றால், இலங்கையில் நாங்கள் வாழும் யாழ்.குடாநாடு,  கடல் மட்டத்திலிருந்து சில அடிகள் உயரத்திலேயே இருக்கின்றது.  சமதரை. இந்த யாழ்.குடாநாடு பல கடல்நீரேரிகளினால் பிரிக்கப்படுகின்றது. யாழ். கடல்நீரேரி, ஆனையிறவுக் கடல்நீரேரி, தொண்டமனாறு கடல்நீரேரி.  கடல் எங்கள் பகுதிக்குள் நுழைகின்ற இடங்கள் தான் இந்தக் கடல்நீரேரிகள். காலநிலை மாற்றத்தினால், பூமியின் வெப்பநிலை உயர்வினால் பனிக்கட்டிகள் உருகுகின்றதனால், கடல் மட்டம் உயருகின்ற போது, ஆசிய நாடுகளில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கையும், பாதிக்கப்படக்கூடிய பகுதியாக யாழ்.குடாநாடும் இருக்கப் போகின்றது என்பது விஞ்ஞான ரீதியான உண்மை. இந்த ஆபத்து எங்கு இருக்கும் என்றால், ஆனையிறவுப் பகுதியில் குடாநாடு நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து பிரிந்து ஒரு தனித்தீவாக குடாநாடு மாறுவதற்கான அபாயம் இருப்பதாகத்தான் சூழலியல் விஞ்ஞானிகளின் எச்சரிக்கையாக இருக்கின்றது.

இந்தக் கடல் மட்டம் எங்களின் பகுதிக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு இயற்கை எங்களிடம் கொடுத்த ஒரு அரண் தான் கடலோரக் கண்டல் காடுகள். தமிழ்நாட்டில் இதை அலையாத்திக் காடுகள் என்று சொல்வார்கள். அலையின் வேத்தினை தணிப்பதனால், இதை அலையாத்திக் காடுகள் என்று சொல்வார்கள். இலங்கையில் புத்தளத்தில் அதிகளவான கண்டல் காடுகள் இருக்கின்றன. அடுத்து யாழ்ப்பாணத்திலும் உள்ளன. இந்தக் கண்டல் காடுகளுக்கு நிறைய பயன் உள்ளன. கடலோர மண்ணரிப்பைத் தடுப்பது தொடங்கி, கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கு உதவுவதற்கான ஒரு சூழலை வழங்குவதுடன் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பாரிய பங்களிப்பும் இருக்கின்றது. இதற்கு உதாரணமாக அம்பாந்தோட்டையில் இரண்டு கிராமங்கள் ஐ.நா.சபையின் சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் பதியப்பட்டுள்ளன.

ஹப்புவன்வெல, வாண்டுருப்பா என்கின்ற கரையோரக் கிராமங்களில் கண்டல் மரங்கள் இருந்தன. ஆனால் வாண்டுருப்பா கிராமத்தில் எல்லாக் கண்டல் மரங்களையும் அவர்கள் வெட்டி விட்டார்கள். ஹப்புவன்வெல கிராமத்தில் கண்டல் காடுகள் அழிக்கப்படாது இன்றும் உள்ளன. இந்த ஆழிப்பேரலையின் போது இந்தக் கிராமத்தில் இரண்டு உயிர்கள் தான் பறிக்கப்பட்டன. ஆனால் வாண்டுருப்பா கிராமத்தில் ஆறாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இயற்கையை நாங்கள் அழித்தால், இயற்கையால் நாங்கள் அழிவோம் என்பதை இயற்கை எங்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. கண்டல் காடுகள் அலையின் வேகத்தைத் மட்டுப்படுத்தி, கடல் அலையின் வேகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றியிருக்கின்றது.

எனவே இலங்கையில் கண்டல்மரக் காடுகள் வளரக்கூடிய சூழலில் கண்டல் மரங்களை மீள நாங்கள் நடுகை செய்ய வேண்டும். தற்போதைய இளைய சமுதாயத்தினர் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் கண்டல் மரங்களை நாட்டுவதற்குரிய ஒரு சமூக இயக்கமாக அதனை ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க அம்சம்.

பொது மக்களிடையே நாங்கள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமாக, தனித்த உறுப்பினர்களாக விழிப்புணர்வு பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றோம். காபன் வெளியேற்றத்தை இயன்றளவு குறைக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிள் வைத்துள்ளோம். இவற்றின் பாவனைகளைக் குறைக்கலாம். அல்லது பலர் பயணிக்கக்கூடியவாறு ஏற்பாடு செய்யலாம். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.  காற்று மின்னாலைகளை பளையில் அமைத்துள்ளோம்.  வேறு பகுதிகளிலும் காற்று மின்னாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. காற்று மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து பெறும் மின்சாரம் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியை  பயன்படுத்துவதும் அபாயங்களிலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள்.

கேள்வி:
சூழலியல் தொடர்பான விழிப்புணர்வுப் பணி தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகின்றதா? அல்லது உங்களின் தனிப்பட்ட ஒரு சமூக அக்கறை தொடர்பாக நடந்து வருகின்றதா?

பதில்:
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன சுற்றச்சூழல்  தொடர்பாக அக்கறை கொண்டவராக இருந்தார் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். அஸ்பெஸ்டர் கூரைத் தகடுகளின் பாவனையை மேற்குலக நாடுகள் தடை விதித்திருக்கின்றன. இலங்கையில் பாவிக்கப்படும் அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளின் பாவனையை நீக்கப் போவதாக கூறி கால எல்லையையும் நிர்ணயித்திருந்தார். ஆனால் இந்த அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடு உற்பத்தியில் முன்னணியில் நிற்கக்கூடிய ஒரு நாடு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலைக்கு தடை விதித்தது. தேயிலையில் இரசாயனங்கள் இருக்கின்றன. நுகர்விற்கு ஏற்றது அல்ல என்று சொல்லி தடை விதித்தது. இதனால் ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ அஸ்பெஸ்டஸ் மீதான தடையை விலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிற்பாடு அந்த நாடு தேயிலையை இறக்குமதி செய்தது.

சேதன இரசாயனங்கள் அல்லது இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மும்முரமாக இருக்கின்றார். கோட்பாட்டு ரீதியில் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். தமிழ் மக்களுக்கு இயற்கை வழி இரசாயனம் அல்லது இயற்கை விவசாயம் புதியது அல்ல.  யுத்த காலங்களில் தென்னிலங்கையிலிருந்து யுரியா போன்ற உரங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவற்றிலிருந்து தாயகத்தில் வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற அச்சத்தினால் அரசாங்கம் தடை விதித்திருந்தது. ஆனால் போரின் போது யாரும் பஞ்சம், பசி, பட்டினியால் சாகவுமில்லை.  எங்களிடம் இயற்கை இரசாயன முறை இருந்தது. அந்த வகையில், சூழலை மாசுபடுத்தாத, எங்களுக்கு நோயை ஏற்படுத்தாத இயற்கை முறை விவசாயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் அந்த முயற்சியில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றோம். வடக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றோம். இயற்கை முறையில் வீட்டுத் தோட்டப் போட்டிகளை நடத்தியிருக்கின்றோம். இந்த அரசாங்கம் இயற்கை உரங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்போவதாக அமைச்சரவையில் பேசப்பட்டதாக சொல்லப்பட்டதை நாங்கள் பரிபுரணமாக நிராகரிக்கின்றோம். எந்த ஒரு நாட்டிலிருந்தும் இயற்கை உரங்களை, இயற்கைப் பசளைகளை நாங்கள் இறக்குமதி செய்ய முடியாது.

தமிழர் தாயகப் பகுதியில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களின் உணவுத் தேவைக்காகக் கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகளுடனும், கடுகு விதைகளுடனும் தற்செயலாக சேர்ந்து பரவிய பார்த்தீனியம் இன்றும் ஒரு களையாக எங்கள் வேளாண் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதை ஒரு பச்சைப் புற்றுநோய் என்று தான் நான் எப்போதும் சொல்லுவேன்.

இலங்கை அரசாங்கத்திற்கு முன்னர் போர் ஒருபுறம், தற்போது கொரோனா நெருக்கடி. இவை போன்ற காரணங்களினால் சூழலியல் தொடர்பான அக்கறை செலுத்துவது தொடர்பான மனோ நிலையில் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் நாங்கள் அப்படியிருக்க முடியாது. யுத்தம் என்பது வெறும் மண்ணுக்கானது அல்ல. வளமான மண்ணிற்கானது. வளமான மண் என்பது எமது மக்கள் தொடர்ந்தும் இந்த மண்ணில் வாழ்வதற்கு இயற்கை வளங்கள் அழிக்கப்படாத ஒரு நிலமாகத் தான் அந்த நிலம் இருக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் மக்களிடம் பரப்புரை செய்து வருகின்றோம்.

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அடுத்த வாரம் பசுமை அமைப்பு விருதுகளை அவர்களுக்கு விநியோகிப்பதற்காக ஒரு போட்டியொன்றை அறிவிக்க இருக்கின்றோம். இளைய தலைமுறை மிகவும் உசாரான தலைமுறை என்பது தான் என்னுடைய கருத்து. அவர்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பிலிருந்து நாங்கள் விலகுவோமாக இருந்தால், அவர்களும் வேறு பாதைகளை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகளும் தான் அதிகம்.

ஆகவே அடுத்த தலைமுறையினரிடம் இந்த உணர்வை நாங்கள் தொற்ற வைப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் மண்ணும், ஒட்டுமொத்த இலங்கையும் சூழல் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

 

3 COMMENTS

  1. […] இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை  […]

Leave a Reply