“மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” – ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்

153 Views

இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை “மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” - ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை1 “மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” - ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்வலையில் சிக்கிய மீனின் நிலையிலேயே  இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தொடர்கின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல கட்ட பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் நடைபெற்று தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையிலும் கடற்படை நடந்துகொள்கின்றது.  தற்போதும் இந் நடவடிக்கையை கடற்படை விடுவதாக இல்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையோ, கொல்லப்படுவதையோ ஒரு போதும் இலங்கைத் தமிழ் மீனவர்கள் விரும்பியது இல்லை. அத்துடன் இலங்கை மீனவர்களும் இந்தியக் கடற் பரப்புக்குள் சென்றுவிடுவதும் தொடர்கின்றன.

இந்தச் சூழலில் அண்மைக் காலங்களில் இரு நாட்டு மீனவர்களும் தமக்குள் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இலங்கை அரசைப் பொறுத்தவரையில், இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் மோதவிட்டு இனப்பகைமையாக மாற்றி வேடிக்கை பார்க்கத் திட்டமிட்டுள்ளது போலும்.

அதே நேரம், தமிழர் தாயகப்பகுதியில் உள்ள மீனவ பிரதேசங்களில் அத்துமீறி பெரும்பான்மை இனத்து மீனவர்கள் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அபகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பெரும்பான்மையினத்து மீனவர்களாலும், தமிழக மீனவர்களின் எல்லை மீறல் செயற்பாடுகளாலும் தற்போது இலங்கை தமிழ் மீனவர்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை2 “மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” - ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து, தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம், அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ், இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியைத் தருகின்றோம்.

கேள்வி:
தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால்  கடல் எல்லையை மீறினார்கள் என்று கொல்லப்படுவது தொடர்கதையாகிறது. இதனை சிறிலங்கா அரசின் தமிழர் பகைமை உணர்வின் வெளிப்படாகக் கருதலாமா?

பதில்:
இந்தியா இலங்கை ஒரு நட்பு நாடு. இந்தியா இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டு கச்சதீவை கொடுத்தார்கள். அப்போதைய இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மற்றும் இலங்கை பிரதமர் மாண்புமிகு பண்டார நாயக்க அவர்கள் இருவரும் சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் கச்சதீவு பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கவும், கச்சதீவில் தங்கி ஓய்வு எடுக்கவும், மீன் கருவாடுகளை காய வைக்கவும், கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்க்கு எந்த வித ஆவணங்களும் இன்றி இந்தியாவில் இருந்து சென்று திருவிழா கொண்டாடலாம்.

கச்சதீவில் இந்தியாவோ, இலங்கையோ ராணுவத் தளம் அமைக்க கூடாது என்றும் உள்ளது. ஆனால் தற்போது இலங்கை கடற்படைத் தளம் கச்சதீவில் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து மீன் பிடிக்க வரும் மீனவர்களை கைது பண்ணுவதும், சுட்டு கொலை செய்வதும், படகுகளை முட்டி மூழ்கடிப்பதும் மற்றும் இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இலங்கையில் யுத்த காலத்தில் இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும், இந்திய மீனவர்கள் உதவி செய்கிறார்கள் என்ற நோக்கத்தில் இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக இந்திய மீனவர்களை சுட்டு இதுவரைக்கும் 400 க்கும் மேற்பட்ட மீனவர்களை கொலை செய்துள்ளனர் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை உடல் ஊனமாக்கி உள்ளார்கள்.

தற்போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதாக போராட்டம் செய்து இலங்கை கடற்படையை ஏவி விடுவதால் இந்திய படகுகளை முட்டி மூழ்கடித்து மீனவர்களை கொலை செய்கிறார்கள். உலக நாட்டிலே எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக சுட்டு கொலை செய்வது இலங்கை கடற்படை மட்டுமே. ஆகையால் தமிழ் மீனவர்களாக இருப்பதனாலே இந்த கொலை சம்பவங்கள் நடை பெறுவதாக கருதுகிறோம்.

கேள்வி:
அப்படியானால்  தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இந்திய மத்திய அரசு இதனைத் தொடர்ந்து அலட்சிய ம் செய்வதேன்?

பதில்:
இந்திய நாட்டில் தமிழர்கள் யாரும் பிரதமராக இருந்ததில்லை. எல்லோருமே சாதி, மதம், இனம், மொழி என்று பிரித்து பார்ப்பதினால் இந்த சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. தமிழ் மக்களை வெறும் ஓட்டு வங்கிகளாவே பார்க்கிறார்கள்.

தமிழ் மீனவர்களால் பல லட்சம் கோடி அன்னிய செலாவணி ஆண்டுக்கு வருமானமாக கிடைக்கிறது. மேலும் மீனவர்கள் பயன்படுத்தும் டீசலால் பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் வேலை வாய்ப்பும் நாட்டில் பெருகியுள்ளது. இந்திய கடலோர பகுதிகளில் அந்நியர்கள் யாரும் நுழைந்து விடாமல் கடலோரங்களை சம்பளம் வாங்காத காவலாளியாக பாதுகாத்து வருகிறோம். இந்திய அரசு இலங்கைக்கு பல ஆயிரம் கோடி கடனாக வழங்குகிறார்கள்.

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு உழைக்கும் தமிழ் மீனவ மக்களை மத்திய அரசு கண்டு கொள்ளாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் அரசுகள் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி விடுகிறார்கள். கடலில் இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் போதும் இயற்கை சீற்றங்களிளாலும், கடல் நீரோட்டத்தாலும் எல்லை தாண்டக் கூடிய நிலை ஏற்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக கொலை தண்டனை என்பது மிக கொடுமையான செயல்.

இது எந்த நாட்டிலும் இல்லாத கொடிய செயல். இதற்கு மத்திய அரசாங்கம் நினைத்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும். எங்கள் மீனவர்களை தமிழர் என்று பார்க்காமல் இந்தியர் என்று பார்த்து, கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் மேலும் மீனவ மக்களின் உயிரையும், உடைமைகளையும் இனி வரும் காலங்களில் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி:
தமிழக ரோலர்கள் ஈழ மீனவர்களின் மீன்வளப்பகுதிகலில் மீன்பிடிப்பதால் ஈழத்தவர் வாழ்வாதாரம் இழக்கப்பட்டு அவர்கள் விரித்து வைத்த வலைகள் கூட ரோலர்களால் கிழித்து அள்ளப்படுகிறது. இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகலாம்?

பதில்:
இலங்கை தமிழர்கள் யுத்த காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறி தஞ்சம் அடைய தமிழகம் வந்த பொழுது அவர்களை பாதுகாத்து, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, இலங்கை அரசுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்து எங்கள் தமிழ் மக்களை கொன்று குவிக்காதே என்று எதிர்ப்பு தெரிவித்து ஆதரவு கொடுத்தவர்கள் இந்திய தமிழ் மீனவர்கள். ஆதரவு கொடுத்த தமிழ் மீனவர்கள் ஒரு போதும் இலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்க மாட்டோம்.

1983 ஆம் ஆண்டு இனகலவரத்துக்கு முன்பு இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்கள் என்று கடலில் மீன் பிடிப்பது கிடையாது. ஒரு தாய் மக்களாக தொப்புள் கோடி உறவாக கடலில் உணவுகளை பரிமாறிக்கொண்டு ஒற்றுமையாக, சந்தோசமாக மீன் பிடித்து வந்தோம். இலங்கை மீனவர்கள் இந்திய தமிழக கடற்கரை கிராமங்களிலும், இந்திய தமிழக மீனவர்கள் இலங்கயில் உள்ள தீவு பகுதிகளிலும் தங்கி மீன் பிடித்தனர்.

இனகலவரத்துக்கு பிறகு இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்கள் என்று பிரிக்கப்பட்டு இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பன்னாட்டு கடல் சட்டத்தின் படி ஒரு நாட்டில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் அடுத்த நாட்டின் எல்லை குறிக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய இலங்கை கடற்பரப்பு குருகிய பகுதியாக இருப்பதால் ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய இலங்கை பாடர் (Boundary) பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்பரப்பிற்குள்ளே இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கும் நிலை உள்ளது. ராமேஸ்வரத்தில் கரையில் இருந்து 6 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு கடலில் பாறைகள் நிறைந்திருப்பதால் இந்த பகுதியில் மீன் பிடிக்க முடியாது. மீதம் உள்ள பகுதிகளில் (ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம்) ஆகிய ஊர்களில் 2000-க்கும் மேற்பட்ட விசை படகுகள் வைத்து பாரம் பரியமாக மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த தொழிலை நம்பி பல்லாயிரக் கணக்கான மீனவ குடும்பங்கள் தன்னுடைய வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறார்கள்.

இந்தியாவில் தமிழ் மீனவர்கள் இழு வலை, வளி வலை  வைத்தும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். வாரத்தில் 7 நாட்களில்    (4 நாட்கள் வளி வலை வைத்து சிறிய படகுக்காரர்கள் மீன் பிடி தொழில் செய்வார்கள், 3 நாட்கள் இழு வலை வைத்து விசை படகுக்காரர்கள் மீன் பிடி தொழில் செய்வார்கள்). இந்த 3 நாட்களில் மீன்படி தொழில் செய்யும் பொழுது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்வதும், மீனவர்களை படுகொலை செய்வதும், படகுகளை முட்டி மூழ்கடிப்பதும் தொடர் வாடிக்கை நிகழ்வாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் போது தெரியாமல் இலங்கை மீனவர்களின் வலைகள் சேதப்படுகிறது. இதனால் இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாமல் இருப்பதற்கு 2004 ஆம் ஆண்டு இந்திய இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதில் இந்திய மீனவர் குழு 10 நபரும், இலங்கை மீனவர் குழு 10 நபரும் மற்றும் இந்திய இலங்கை அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முதல் கட்ட பேச்சு வார்த்தையில் இந்திய மீனவர் குழு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை வருடத்தில் 365 நாட்களில் பாரம்பரிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 85 நாட்கள் மட்டும் மீன் பிடிப்பதென்றும் மீதமுள்ள 280 நாட்கள் இலங்கை மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதென்றும் முடிவு செய்தோம்.

ஆனால் இலங்கை மீனவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2010, 2012 இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது. இதன் காரணம் என்னவென்றால் இந்திய தரப்பில் வந்த மீனவர் குழு மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கும் அதே 10 நபரும் கலந்து கொண்டார்கள்.

ஆனால் இலங்கை தரப்பில் வந்த குழு 10 நபரும் மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கும் வெவ்வேறு நபர்கள் கலந்து கொண்டதால் இந்த பேச்சுவார்த்தை மூன்று முறையும் தோல்வியடைந்தது. இனிவரும் காலங்களில் இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழ் இனம் அழியக்கூடாது என்றும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து பாரம் பாரிய இடத்தில் பிரச்சனையின்றி மீன் பிடிக்கவும், இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் இரு நாட்டு அரசுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை துவக்கி இரு நாட்டு மீனவர்களின் வாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டுகிறோம். பேச்சுவார்த்தை மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வாகும்.

3 COMMENTS

  1. […] இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல கட்ட பேச்சுவார்த்தைகள்  […]

Leave a Reply