நாமலின் இந்திய விஜயமும், இலங்கையின் இராஜதந்திரமும் – அகிலன்

178 Views

இராஜதந்திர முனையில் பனிப்போர்இராஜதந்திர முனையில் பனிப்போர்.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு 1 நாமலின் இந்திய விஜயமும், இலங்கையின் இராஜதந்திரமும் - அகிலன்இலங்கையும் இந்தியாவும் என்னதான் நட்புறவு நாடுகள் எனக் காட்டிக்கொண்டாலும், இராஜதந்திர முனையில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பனிப்போரில் புதுடில்லியின் நகர்வுகள் பெரும்பாலும், பின்னடைவைத்தான் சந்திப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

தற்போது தீவிர நிலையை அடைந்திருக்கும் மீனவர் பிரச்சினை உட்பட பெரும்பாலான விடயங்களில் இந்தியாவின் வியூகங்களை முறியடிப்பதில் கொழும்பு வெற்றி பெறுவதாகவே தெரிகின்றது. அதுபோலத்தான் கடந்த வாரம் இடம்பெற்ற மற்றொரு சம்பவம் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.

இராஜதந்திர முனையில் பனிப்போர்அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தலைமையில் சுமார் பெருமளவு பிக்குகள் உட்பட 100 பேரைக் கொண்ட ஒரு குழுவினர் இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவின் குஷி நகருக்குச் சென்று வந்திருக்கும் நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணியில் இடம்பெற்ற மீனவர் பிரச்சினை ஒன்று குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு புதுடில்லி மேற்கொள்ளக்கூடிய  இராஜதந்திர நகர்வுகள் அனைத்தையும் மௌனமாக முறியடிப்பதில் தமது திறமையை கொழும்பு மீண்டும் ஒருதடவை இந்த குஷி நகருக்கான விஜயத்தின் போது நிரூபித்திருக்கின்றது என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.

இராஜதந்திர முனையில் பனிப்போர்கொழும்புக்கு அண்மையில் வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் இரண்டு விடயங்கள் தொடர்பில் ராஜபக்சக்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். ஒன்று – 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. இரண்டாவது மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை மீதான தமது பிடியை வைத்துக்கொள்வதற்கு அதற்குள்ள ஒரேயொரு விவகாரம் 13 ஆவது திருத்தம்தான். இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலமாக இது உருவாக்கப்பட்டது என்பதால், அது தொடர்பில் அழுத்தம் கொடுப்தற்கு தமக்கு உரிமை இருப்பதாக இந்தியா கருதுகின்றது. அதேபோல மாகாண சபைகள் செயற்படுவதும் இலங்கை மீதான தமது பிடியை வைத்திருப்பதற்கு அவசியம் என புதுடில்லி கருதுகின்றது. அதனால்தான், அந்த இரண்டு விடயங்கள் குறித்தும் ஹர்ஷ் வர்தன் தனது இலங்கை விஜயத்தின் போது அதிகளவு கவனத்தைச் செலுத்தியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்டது போல மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அரச தரப்பிலிருந்து வெளிவரும் தகவல்கள் அதற்கு முரணானவையாகவே உள்ளன.

இராஜதந்திர முனையில் பனிப்போர்தேர்தல் முறை மாற்றம், புதிய அரசியலமைப்பு என்பன குறித்து முக்கியமாகப் பேசப்படுகின்றது. கடந்த வாரம் அநுராதபுரத்தில் இராணுவத்தின் ஆண்டுவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவும், “தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவில் கொண்டுவருவோம்” எனக் கூறியிருக்கின்றார். புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். ஜனாதிபதி தனது உரையில் சொன்ன தகவல்கள் ஒருவகையில் இந்தியாவுக்கான பதிலாகவும் உள்ளது.

தேர்தல் முறையையும் அரசியலமைப்பையும் ஜனவரியில் கொண்டுவருவதற்குத் திட்டமிடும் அரசு மார்ச் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆனால், இவ்விடயத்தில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பது என்ற அணுகுமுறையுடன்தான் புதுடில்லி செயற்படுகின்றது.

குஷி நகர் நிகழ்வுகள் கூட இதன் தொடர்ச்சியாக புதுடில்லியால் திட்டமிடப்பட்ட ஒன்று என்றே இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த விடயத்திலும் புதுடில்லியின் திட்டத்தை கொழும்பு முறியடித்துவிட்டது என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷி நகரில்தான் கெளதம புத்தர் இயற்கை எய்தி மகாபரிநிர்வாணம் அடைந்தார். ஆக, இது இலங்கைக்கு உணர்வுபூர்வமான ஒன்று. இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த மக்களைப் பொறுத்தவரையில் புத்தகாயா போல குஷியும் முக்கியமான ஒரு புனித இடம். இலங்கையிலிருந்து பெருமளவு பௌத்தர்கள் எதிர்காலத்தில் குஷி நகருக்குச் செல்வதற்கு வசதியாகவே இங்கு சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு கொழும்பிலிருந்து நேரடி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர முனையில் பனிப்போர்அங்குள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்ற போது அந்த நிகழ்வில், இலங்கையிலிருந்து சுமார் 100 பிக்குமாரை உள்ளடக்கிய குழுவுடன் சென்று நாமல் ராஜபக்ச கலந்து கொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து மும்மொழியில் பதிப்பிக்கப்பட்ட “பகவத் கீதை”யை அவருக்கு நினைவுப் பரிசிலாக வழங்கினார்.

உண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவுக்குத்தான் இந்த நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மோடி வரும் நிலையில், அவருக்கு சமநிலையில் உள்ள ஒருவரைத்தான் இந்தியா விரும்பியிருக்கும். ஆனால், உடல் சுகவீனத்தைக் காட்டி மஹிந்த அந்தப் பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார் என்று கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச இத்தாலிக்குச் சென்று வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, குஷி விஜயத்தை மஹிந்த தவிர்த்துக்கொண்டமைக்கு உடல்நிலைதான் காரணமா, அல்லது வேறு இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என இப்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.

இலங்கைப் பிரதமருக்குப் பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டால் என்ன என்று ஒரு யோசனை பின்னர் முன்வைக்கப்பட்டதாம். இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொடவும் அதை விரும்பினார் என்று கூறப்படுகின்றது. நலிவுற்றிருக்கும் இலங்கை – இந்திய உறவை இத்தகைய மகிழ்ச்சியான ஒரு நிகழ்வின் போது இடம்பெறும் பரஸ்பரம் பரிந்துணர்வுடன் கூடிய சந்திப்பு மூலம் மேம்படுத்தலாம் என்பது மிலிந்த மொறகொடவின் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.

இந்தியாவின் பிரதான செய்தி நிறுவனங்களும் ஜனாதிபதி கோட்டாபய வருகின்றார் என்றே கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், அத்தகைய சந்திப்பைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சில தரப்புகள் ஆலோசனை கூறியமையை அடுத்தே, நாமல் ராஜபக்‌சவை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்தும்படியும், அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மூலம் பகிரப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு முழு அளவில் வழங்கும்படியும் இந்திய அரசு தொடர்ந்து கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவது தெரிந்ததே. இந்த அழுத்தம் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் அண்மையில் கொழும்பு வந்தபோது காணமுடிந்தது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தத் தயாராவதாக ராஜபக்‌சக்கள் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அதற்கான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது – மாகாண சபை முறையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட ஒருவரல்ல. இரண்டு – அரசுக்கான ஆதரவுத் தளம் இப்போது வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்த நிலையில் தேர்தல் ஒன்றை நடத்த அரசு விரும்பாது. அதனால், தேர்தல் முறை மாற்றம், புதிய அரசியலமைப்பு என்பவைகளைப் பயன்படுத்தி காலத்தை கடத்துவது அரசின் உபாயம்.

ஆனால், குஷி நகரில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தால், இரண்டு விடயங்களில் புதுடில்லி அழுத்தம் கொடுக்கும் என ராஜபக்‌சக்கள் எதிர்பார்த்தார்கள். ஒன்று 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது. இரண்டு – மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைந்து நடத்துவது. இவ்விரு விடயங்களிலும் கால வரையறை ஒன்றை மோடி கேட்கலாம் என கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் கருதின. இது குறித்து ராஜபக்‌சக்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாம். அதனைத் தொடர்ந்தே பிரதரும், ஜனாதிபதியும் இந்தப் பயணத்தைத் தவிர்த்துக்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.

குஷி நகருக்கு நாமல் ராஜபக்‌ச சென்று வந்ததன் பின்னணியில் நடைபெற்ற இராஜதந்திர நகர்வுகள் இவைதான். நாமல் ராஜபக்‌ச அவர்களுடைய குழும்பத்தில் அடுத்த வாரிசாக இருந்தாலும், முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து அவருடன் பேச முடியாது. ஆக, புதுடில்லி விரித்த மற்றொரு வலையிலிருந்து கொழும்பு தப்பித்துக்கொண்டது எனக் கூறுகின்றார்கள் இராஜதந்திர வட்டாரத்தினர்.

3 COMMENTS

  1. […] இலங்கையும் இந்தியாவும் என்னதான் நட்புறவு நாடுகள் எனக் காட்டிக்கொண்டாலும், இராஜதந்திர முனையில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பனிப்போரில்  […]

Leave a Reply