மன்னாா் காற்றாலைத் திட்டத்துக்கு இடமளிக்கப்போவதில்லை – மன்னார் பிரஜைகள் குழு

07 மன்னாா் காற்றாலைத் திட்டத்துக்கு இடமளிக்கப்போவதில்லை - மன்னார் பிரஜைகள் குழுமன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் தீவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டத்தினால் எமக்கு வரவுள்ள அழிவுகள் குறித்து நாங்கள் பல வருடங்களாக கூறி வருகிறோம். குறித்த திட்டத்தினால் எமது வாழ்விடம் திட்டமிட்டு பறிக்கப்படவுள்ளது. எமது பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடுகள் அழிக்கப்பட போகின்றது.மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படப் போகிறது” என்று குறிப்பிட்டாா்.

மேலும் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார், “எமது வளமான மண் அழிக்கப்பட்டு, எதுவும் அற்ற ஒரு நிலைக்கு தள்ளப்படும். எனவே எமது மக்களை ஒன்று கூட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது முடிவை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம்.

மன்னார் தீவில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி நல்லதொரு தீர்வை வழங்குவாராக இருந்தால் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்படும். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். மன்னார் தீவில் இருந்து ஒரு துண்டு நிலத்தை கூட நாங்கள் இத் திட்டங்களுக்கு வழங்க மாட்டோம்” என்றும் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்தாா்.