போா்க் குற்றவாளிகளைப் பாதுகாக்க ஒரு செயலணியா? கஜேந்திரன் கடும் சீற்றம்

இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் அவர்களுடன் துணைக் குழுக்களாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி, பிள்ளையான்குழு, கருணா குழு உள்ளிட்ட துணைக் குழுக்களையும் இவர்களுக்குக் கட்டளையிட்ட கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களையும் முற்று முழுதாகப் பாதுகாக்கும் நோக்கில் மீண்டும் ஒரு நல்லிணக்கச் செயலணிசட்ட மூலத்திற்கான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் பேசுகையில் கூறியவை வருமாறு-

“சர்வதேசத் தலையீடுகளைத் தடுக்கும் நோக்கிலும் பொறுப்புக்கூறல் தொடர்பான தமது கடப்பாடுகளை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளுதல் என்று கூறி இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் அவர்களுடன் துணைக் குழுக்களாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி., பிள்ளையான் குழு, கருணா குழு உள்ளிட்ட துணைக் குழுக்களையும் இவர்களுக்குக் கட்டளையிட்ட கோத்தபாய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களையும் முற்றுமுழுதாகப் பாதுகாக்கும் நோக்கில் மீண்டும் ஒரு நல்லிணக்கச் செயலணி ஒன்று இலங்கையில் உண்மை ஒற்றுமை
நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு உருவாக்குவதற்கான சட்ட மூலத்திற்கான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கட்சித் தலைவர்களது கூட்டத்தில் எமது கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அறிவுறுத்தலின்படி நான் கலந்து கொண்டு முன்வைத்த கருத்துக்களை இந்த சபையில் பதிவு செய்கின்றேன்.

பொறுப்புக்கூறல் மற்றும் இனநல்லிணக்கத்திற்காகவென இந்த ஆணைக்குழுவை உருவாக்குவது தொடர்பான அறிமுகத்தின்போது நீங்கள் “பயங்கரவாதம்” காரணமாக 1983ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை இடம்பெற்ற போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காகவும் சர்வதேச தலையீடுகள் இன்றிய பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்காகவும் இந்த ஆணைக்குழுவை உருவாக்குவதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.

எனினும் 1983ஆம் ஆண்டிற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தனது பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகள் ஊடாக வடக்கு கிழக்கில் கிராமம் கிராமமாக மேற்கொண்ட படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் கொள்ளையடிப்புக்களே அயுதப் போராட்டம் உருவாகுவதற்கான காரணமாகும். ஆயதப் போராட்டம் உருவாகுவதற்கான அடிப்படைக் காரணங்கள் அனைத்தையும் மூடிமறைத்துவிட்டு 83 இல் இருந்து 2009 வரை பயங்கரவாதம் காரணமாக நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இங்கு நீங்கள் பயங்கரவாதம் என்று குறிப்பிட்டமைக்காக எனது ஆட்சேபனையைப் பதிவு செய்கின்றேன்” என்று தெரிவித்தாா்.