விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்

210 Views

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலை

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் பலர் விசாரணை என்னும் பெயரில்  கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்து  இன்று பன்னிரண்டு வருடங்களைக் கடந்த போதும், இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின்  நிலை என்ன என்பது பரியாத புதிராகவே உள்ளது.

அகிம்சை ரீதியாக எத்தனை போராட்டங்களை நடாத்தியிருப்பார்கள், ஒவ்வொரு ஆணைக்குழுவிடமும் எவ்வளவு  கடிதத்தினை சமர்ப்பித்திருப்பார்கள். உள்நாட்டு யுத்தம் முடிந்தாலும், உள்ளக ரீதியில் உறவுகளைத் தேடிய  போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைகடந்த யுத்தத்தின் பின் தனது கணவரை விசாரணைக்காக இராணுவத்தினரிடம் நேரடியாக ஒப்படைத்த  மனைவி ஒருவரின்  எதிர்பார்ப்பையும், தந்தையை சிறுவயதிலேயே தொலைத்த பிள்ளைகளின் ஏக்கங்களையும்  இங்கு தருகிறேன். கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்த ரத்தீஸ்வரன் சபிதா என்பவர் தனது துயரைப் பகிர்ந்து கொள்கிறார்.

எனது பெயர்  ரத்தீஸ்வரன் சபிதா  நான் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வசித்து வருகின்றேன். எனது கணவர் வைரமுத்து ரத்தீஸ்வரன் . எனக்கு இரண்டு பிள்ளைகள்.  யுத்தத்தின் பின்னர் எனது கணவரை விசாரணைக்காக 2009.05.18ஆம் திகதி இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். ஆனால் இதுவரை என் கணவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இறுதி யுத்த நேரம் முல்லைத்தீவு வட்டுவாகலில் இருந்து இடம்பெயர்ந்து  செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமுக்கு  போனாங்கள். 2009.05.18  ஆம் திகதி எனது கணவரை விசாரணைக்காக ஒப்படைத்த கண் கண்ட சாட்சியமாக நான் இருக்கின்றேன். எனது கணவருடன் சேர்த்து 150 பேரை பேருந்தில் விசாரணைக்காக ஏற்றிக்கொண்டு போனவர்கள்.  அப்போது என்ரை பிள்ளைகள் சின்னப் பிள்ளைகள். ஆனாலும் அவர்களுக்கும் விபரம் தெரியும். நானும் பிள்ளையளும் ஓமந்தைக்கு அருகே இருக்கின்ற  பாடசாலை ஒன்றில் சிறிதுகாலம் இருந்தனாங்கள். அதன் பின்னரே 2009.11.11 அன்று பருத்தித்துறைக்கு வசிப்பதற்காகப் போனாங்கள். பருத்தித்துறையை விட்டு வெளியேற முடியாமல் நிறைய வருடம்  இருந்தோம். ஏனெனில், எனது வீட்டுக்கு  விசாரணைக்கு அடிக்கடி பொலிஸ்,  இராணுவம், கடற்படை என சொல்லிக்கொண்டு சிவில் உடையுடன்  வருவார்கள். பருத்தித்துறையிலிருந்து 2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவிற்கு மீள வந்து குடியேறினாங்கள்.  2009 தொடக்கம்  2016 வரை  எனக்கு நிறைய அச்சுறுத்தல் வந்தது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைவிசாரணைக்காக வீட்டுக்கு வந்தவர்களிடம்,  என் கணவரை இராணுவத்தினரிடம் விசாரணைக்காக ஒப்படைச்சிட்டு  என் கணவரைப் பற்றித் தகவல் எதுவும் தெரியாமல் இருக்கிறேன் என்று நான் சொன்னேன். இனி நீங்கள் விசாரணை என்னும் பெயரில் வீட்டுக்கு வருகில், என் கணவர்  இருக்கிறாரா இல்லையா?  எங்கிருக்கிறார்? நான்  கணவரை சந்திக்கலாமா?  என்பது பற்றிய தகவலுடன் மட்டும் தான் வரவேண்டும். இல்லையேல் எனது வீட்டுக்கு வரவேண்டாம். யாரையும் பற்றி எனக்குத் தெரியாது  என சொல்லி அனுப்பி விட்டேன்.

நான் எங்கு போனாலும் ஒரே விசாரணை தான். நாங்கள் போராட்டத்திற்கு போனால் தினமும் விசாரணைக்கு வந்திடுவார்கள்.

எனது கணவனைக் காணவில்லை என்ற முறைப்பாட்டினை ஜனாதிபதி ஆணைக்குழு, ஐ.சி.ஆர்.சி, மனித உரிமை ஆணைக்குழு, வவுனியா ஜோசப் முகாம்  பருத்தித்துறை பொலிஸ் என எல்லா இடமும் செய்தனான். UN இலும் முறைப்பாடு செய்திருக்கிறேன்.  ஆனால் எந்தத் தகவலுமே எனக்குக் கிடைக்கவில்லை. மனித உரிமை ஆணையாளரிடம் நேரடியாகக் கடிதம் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் என் கணவர் பற்றி இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

கணவரை  ஒப்படைத்த நாளில் இருந்து  இன்றுவரை பல வழிகளிலும் போராடிக்கெண்டு தான் இருக்கிறேன். முகாம்களில் இருக்கும் போதே பல புனர்வாழ்வு முகாம்களுக்குக் கடிதம் கொடுத்துத் தேடினான்.  ஆனாலும் எனக்குத் தகவல் கிடைக்கவேயில்லை.

காணாமலாக்கப்பட்டவர்களுக்காக  நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் இங்கிருந்து கொழும்புவரை போய் வந்திருக்கின்றேன். கிளிநொச்சியில் இடம்பெற்ற தீச்சட்டிப் போராட்டத்திற்கும் போயிருந்தேன்.  இன்றுவரை மனம் தளராமல் என் கணவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.  ஏனெனில் இராணுவத்தினரின் கையில் நேரடியாக ஒப்படைக்கும் போது, விசாரணை முடிந்ததும் உங்கள் கணவரை விடுதலை செய்வோம் எனக் கூறியதன் பின்னரே  ஒப்படைத்திருக்கின்றேன்.

என்ரை இரண்டு பிள்ளைகளும் இன்று வரை அப்பா வருவார் என்று சொல்லி எதிர்பார்த்துக் கொண்டிருக்கினம். யாரும் அப்பா எங்கே எனக் கேட்டால், எனது இளைய மகன்  அப்பா புனர்வாழ்வு முகாமில் இருக்கிறார் எனச் சொல்லி  அவர் வேகமாக எங்களிட்ட வருவார் எண்டு சொல்லுவார். என்ரை கணவர் வருவார் என்ற  நம்பிக்கையில் தான் நானும் எனது பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

பொதுவாகவே எமது காணாமலாக்கப்பட்ட உறவுகளின்  கோரிக்கைகள் ஒன்றுதான். ஆதலால்  இறுதித் தீர்மானமாக இலங்கை அரசை சர்வதேசப் போர்க் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். எம் உறவுகளை மீட்டுத்தர வேண்டும்.” என்று தன் துயரத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார் ரத்தீஸ்வரன் சபிதா.

தனது கணவரைத் தொலைத்த  சோகத்தில் மனைவியும், தன் அப்பா இன்று வருவார் நாளை வருவார் என தந்தையின் வருகைக்காய் தவமிருக்கும் அந்த பிள்ளைகளின் ஏக்கத்திற்கும் யார் விடை கொடுப்பார்கள். இப்படி எத்தனையோ பேர் தம் உறவுகளைத் தொலைத்துவிட்டு  அவர்களின் வரவுக்காய் காத்திருக்கின்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் நிறைவேறுமா?

1 COMMENT

  1. […] பன்னிரண்டு வருடங்களைக் கடந்த போதும், இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது பரியாத புதிராகவே உள்ளது.  […]

Leave a Reply