சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.
அதற்கமைய ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக்கூட்டம் பி.ப 3.30 மணியளவில் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்றது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளடங்கலாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்றப் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் மாங்குளம் பஸ் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்றதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி உறுப்பினர்கள் உரையாற்றியதுடன், 10 முக்கிய வலியுறுத்தல்களை உள்ளடக்கிய பிரகடனமும் வெளியிடப்பட்டது.



