Home Blog Page 5

கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்

கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் அமைதிக்கு உச்சபட்ச ஆதரவை வழங்க தயார் – ஜனாதிபதி

மத்திய கிழக்கின் நிலைமை அமைதியை நோக்கி நகரும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூரிடம் உறுதியளித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் ஏற்றுமதிப் பங்கில் தனி நாடாக மிகப் பெரிய பங்கை அமெரிக்கா கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த வர்த்தக ஒத்துழைப்பை இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவு செய்வது குறித்தும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை நிலையான அமைதியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவூட்டியதுடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

நீதிமன்ற உத்தரவால் மீள ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, எட்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று (22) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் முதலாவது அமர்வில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாகச் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்குக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

எனினும், குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையிலும், சபை மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதற்கமைய, எட்டு மாதங்களாக முடங்கியிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, இன்றைய அமர்வு முதல்வர் காண்டீபன் தலைமையில் கூடியது.

அமர்வு ஆரம்பமானதும், முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதால் அவரது தலைமையில் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதல்வர் பதவி விலக வேண்டும் அல்லது பதில் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கோரிய அவர்கள், மாநகரசபையின் அடிப்படை கட்டளைச் சட்டங்கள் மீறப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

அத்துடன் இன்றைய கூட்டத்தை ஒரு குழுநிலை விவாதமாக மாற்றுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், முதல்வர் மீதான விசாரணை அறிக்கை இன்னும் சட்டரீதியாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர்.

முதல்வர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தால் அவரது பதவியை ஆளுநர் இடைநிறுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு எதுவும் நடக்காத பட்சத்தில் விசாரணை அறிக்கை வெளியாகும் வரை சபையைக் குழப்ப வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலைியல், இரு தரப்பிற்குமிடையே ஏற்பட்ட இந்த அடுக்கடுக்கான மோதல்கள் மற்றும் கடுமையான வாக்குவாதங்கள் காரணமாகச் சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சித்திரவதைத் தடுப்பு துணைக்குழு இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக்குழுவின் நான்கு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நாளை மறுதினம் (24) நிறைவு செய்கிறது.

2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக கடந்த 15 ஆம் திகதி இந்த குழுவினர் இலங்கை வந்தடைந்திருந்தனர்.

இந்த குழுவினர் நாட்டின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டதுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறைத்துறை அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சித்திரவதை விவகாரங்கள் குறித்து ஐ.நா குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், 2024ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் விதிகளுக்கு இணங்க, இந்த குழுவினர் தங்களது முதற்கட்ட அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தயாரிக்கப்படும் இறுதிப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையும் இரகசியமாகவே பேணப்படும்.

இலங்கை அரசு அனுமதித்தால் மட்டுமே இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு இந்த குழுவினர் மேற்கொண்ட பயணத்தின் அறிக்கையும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகயீனத்தை காரணம் காட்டி விசாரணைகளில் முன்னிலையாவதை தவிர்க்கும் வசந்த கரண்ணாகொட!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, உடல்நலக் குறைபாடு காரணமாக இன்றைய தினம் (22) இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் கடற்படை நியமனம் மற்றும் பயிற்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்கவே இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

யோஷித ராஜபக்ஷவின் தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, எவ்வாறு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறித்தும், அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரித்தானிய றோயல் கடற்படைக் கல்லூரியில் அவர் எவ்வாறு பயிற்சி பெற்றார் என்பது குறித்தும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

முன்னதாக, கடந்த 16 ஆம் திகதியன்றும் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு வசந்த கரண்ணாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனக்கு அதற்கான கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் அன்றைய தினம் முன்னிலையாகியிருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்தே இன்றைய தினம் சமுகமளிக்குமாறு மீண்டும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 17 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு தமிழரசுக்கட்சி, அரசியல் துரோகம் இழைப்பதாக சுகாஸ் சாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் வரலாற்றில் இந்த ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்புமிக்க ஆண்டாகும். ஏனெனில், வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படும் ‘தமிழீழப் பிரகடனம்’ நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஆனால், இந்த 50ஆவது ஆண்டை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அந்த வரலாற்றுப் பிரகடனத்தை முன்னின்று வழிநடத்திய தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சி, இன்று அதற்கு முற்றிலும் மாறான ஒரு அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்து நிறைவேற்றத் தயாராகிவரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முதன்மைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரால் எழுதப்பட்ட, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இந்த ‘ஏக்கிய ராச்சிய’ வரைவைத் தமிழர்களின் அரசியல் தீர்வாக திணிப்பதற்கு தமிழரசுக் கட்சி மிகத் தீவிரமாக முனைப்புக்காட்டி வருகின்றது.

இத்தகைய செயற்பாடானது, 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முற்றிலும் எதிரான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பிரகடனப்படுத்திய தந்தை செல்வா வழிவந்த தமிழரசுக் கட்சி, இன்று ஒற்றையாட்சிக்கும் ஏக்கிய ராச்சிய வரைவுக்கும் முட்டுக்கொடுத்து அதற்குள் முடங்கிக் கிடப்பது, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கும் அதனைத் தலைமை தாங்கி நடத்திய தந்தை செல்வாவிற்கும் இழைக்கப்படும் அப்பட்டமான அரசியல் துரோகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தும் மனுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாரஆளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்து தள்ளுபடி செய்தது.

“பாராளுமன்றத் தேர்தலின்போது ஆனந்த விஜேபாலவிடம் இத்தகைய தகைமையீனம் இருக்கவில்லை.

தேர்தல் முடிந்த பின்னரே அவர் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். எனவே, தேர்தலின்போது இருந்த தகுதியை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தீர்மானிக்க முடியும்” எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்புக்கு எதிராகவே, ரேணுக பெரேரா தரப்பால் உயர் நீதிமன்றத்தில்இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை பரிசீலித்த உயர் நீதிமன்றம், தற்போது இந்த விவகாரத்தை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் தொடர்பில் கலந்துரையாடல்

IMG 20260622 WA0013 வடக்கு மாகாணத்தில் எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (22) காலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்நிறுவனங்களின் அர்ப்பணிப்பான பணிகள் மிகப்பெரிய உதவியாக அமைந்திருந்ததை அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் கலந்துகொண்டார்.

அத்துடன், மக் நிறுவனத்தின் சார்பில் அதன் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் அண்டி கிரம்ப், வாழ்வாதார நிபுணர் ஹரிஷா, திறன் அபிவிருத்தி நிபுணர் செந்தூரன் ஆகியோரும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஹன்னா பிக்டன், செயற்பாட்டு முகாமையாளர் விதுசன் அந்தோனி, சமூகத் தொடர்பு முகாமையாளர் ஏ.அருள்குணசீலன் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மீனவர்கள் போராட்டம்!

தமக்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இன்றும் நாளையும் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000-க்கும் அதிகமான மீனவர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எப்போதும் நடுநிலையாக செயல்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர், வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்களுக்காகவும் அரசாங்கத்தின் நன்றியினை அவர் தெரிவித்துக்கொண்டார்.