சஹ்ரானுடன் ஷங்கிரிலாவில் தங்கியிருந்தவா்கள் யாா்? தகவல்கள் மறைக்கப்படுவதாகக் கூறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி

ஈஸ்டர் தாக்குதலுக்கு முதல்நாள் ஷங்கிரிலா ஹோட்டலில் சஹ்ரான் ஹாசிம் தங்கியிருந்தார். அதேநேரம், 616, 623 ஆம் இலக்க அறைகளில் தங்கியிருந்தோரின் விவரங்களை உயர் நீதிமன்றுக்கு தெரிவிக்காமல் ஹோட்டல் நிர்வாகம் மறைத்துள்ளது என்று இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான்  ஹாசிமும் அவரின் சகா இலாம் அஹமட்டும் 20ஆம் திகதி அதே ஹோட்டலில் சந்தித்த நபர்களின் விவரம் மறைக்கப்பட்டுள்ளது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.

இந்த விடயம் குறித்து முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான இரண்டு வாரங்களில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் உயர்நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 616, ஆம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களின் பெயர் விவரங்களை ஹோட்டல் நிர்வாகம் வழங்கவில்லை.

அத்துடன், ஹோட்டலின் 6ஆவது மாடியில் 623ஆம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களின் விவரமும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் தங்கியிருந்தவர்களும் சஹ்ரான் ஹாசிம் குழுவினருடன் தொடர்புபட்டவர்கள் போல் தோன்றுகின்றது” என்றும் அவா் தெரிவித்தாா்.