23 சதுர கி. மீ. பரப்பிலேயே இன்னும் மிதிவெடி அகற்றப்பட வேண்டும் – சர்வதேச மாநாட்டில் இலங்கை தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் இன்னமும் 23 சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று சர்வதேச கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் இலங்கை தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட் டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயல்பாட்டுக்கு பாராட்டும் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வ தேச மையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ. எஸ். சத்யானந்த, பிரதிப் பணிப்பாளர் வி.பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த, 3 வருடங்களில் இலங்கையை மிதிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இன்னும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை பிரதிநிதிகள் மாநாட்டில் தெரிவித்திருந்தனர்.