இலங்கை வந்த சீன அமைச்சர் ஜே.வி.பி. தலைவர்களுடன் முக்கிய பேச்சு

anura haiyan 5231792 இலங்கை வந்த சீன அமைச்சர் ஜே.வி.பி. தலைவர்களுடன் முக்கிய பேச்சுசீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இன்று நாட்டை வந்தடைந்தார்.

சர்வதேச அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே சீன கம்யூனிஸ்ட் கட்சியின்  பிரதான மத்திய குழுவிற்கு நேரடியாக பொறுப்புக்கூறும் சர்வதேசப் பிரிவின் முக்கிய பொறுப்பாகும்.

2023 ஆம் ஆண்டில் இந்த பிரிவின் துணை அமைச்சராக பதவியேற்ற சன் ஹையன், இதற்கு முன்னர் சிங்கப்பூருக்கான சீனத் தூதுவராக கடமையாற்றினார்.

இன்று முற்பகல் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் சன் ஹையனுடன்,  இலங்கைக்கான சீன தூதரகத்தின் கன்சியூலர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பணிப்பாளர் தற்றும் பிரதி பணிப்பாளர், இலங்கைக்கான சீன தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில், கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான விஜித்த ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பிற்கு முன்னர்,  சீன பிரதிநிதிகள் கட்சியின் பிரதேச தலைவர்களுடன் மஹரகமவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.