Home Blog Page 2275

ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்கலாம் – ஈரான் ஜெனரல்

ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை எனவே அது உலகத்தின் எரிபொருள் வழங்கல்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஈரானின் மூத்த படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமது பிராந்தியத்தில் அமெரிக்காவே பதற்றத்தை தோற்றுவித்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை (17) ஈரான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இது ஒரு மோதலுக்கு வழிவகுக்கலாம் என மேற்குலக புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். போர் ஏற்பட்டால் அது உலகின் எரிபொருள் வினியோகத்தை பாதிக்கும் என ஈரானின் இராணுவ ஜெனரல் சாலேஷ் ஜேகர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அணு ஒப்பந்தத்தில் இருந்து தன்னிட்சையாக விலகியதும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் போரின் விழிம்பில் உள்ளன என ஈரானின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குசேன் சலாமி கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். இஸ்லாமியப் புரட்சியில் இது ஒரு முக்கியமான தருணம் ஏனெனில் எதிரி தனது முழு பலத்துடன் மோதலுக்கு தயாராக வந்துள்ளான்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடை எமக்கு மிக அதிக பாதிப்புக்களை கொடுத்துள்ளது. பிராந்திய ஆதிக்கத்தில் இருந்து நாம் புறந்தள்ளப்படுகின்றோம். ஈரான் – ஈராக் போருக்கு பின்னர் நாம் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே .அண்மையில் ஈராக்குக்கு பயணம் மேற்கொண்ட ஈரான் படை அதிகாரி அங்குள்ள குழுக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் நாளேடு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள தமது படையினரை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானியயா தெரிவித்திருந்தது.

கடந்த வாரம் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணைத்தாங்கி கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்கள் ஐக்கிய  அரபு இராட்சிய கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததைத் தொடர்ந்து மேலும் பதற்றங்கள் அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதலின் பின்னனியில் ஈரான் உள்ளதாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் கருதுகின்றன. இந்த தாக்குதலின் பின்னர் யேமன் பகுதியில் உள்ள ஈரான் சார்பு குழு ஒன்று சவுதி அரேபியாவின் இரண்டு என்ணை குழாய்களை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்கியழிக்க முற்பட்டிருந்தது.

தனது எண்ணைக் கப்பல்களை தாக்கியதற்கு பதிலடி கொடுப்பதற்கு சவுதி திட்டமிட்ருந்ததாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கான அனுமதியை சவுதி அமெரிக்காவிடம் கேட்டிருந்தது.

கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவும் ஈரானும் ஒரு நேரடியற்ற மோதல்களில் ஈராக்கில் ஈடுபட்டிருந்தன. ஈராக்கில் உள்ள பெரும்பான்மை சியா முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த குழுக்களை ஈரானே வழிநடத்தியிருந்தது. அமெரிக்கப் படைகள் சந்தித்த இழப்புக்களில் 25 விகிதமானவை இந்த குழுக்களால் ஏற்பட்டவை.

ஆனால் ஐ.எஸ்.ஜ.எஸ் உடனான மோதல்களில் ஈரானுடன் இணைந்தே அமெரிக்கா மோதல்களில் ஈடுபட்டிருந்தது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய பின்னர் ஈரான் அந்த பகுதிகளில் தன்னைப் பலப்படுததியிருந்தது.

சிரியாவில் இடம்பெற்ற போரும் ஈரானின் பலப்படுத்தல்களுக்கு காலத்தை வழங்கியிருந்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. சிரியாவின் மேற்குப் பகுதியில் ஈரான் தனது ஆதிக்கத்தை செலுத்தியதே டொனால் ரம்ப் அரசை சீற்றமடைய வைத்திருந்தது.

ஈரான் பலமடைந்து வருவதை அமெரிக்காவின் நட்பு நாடுகளான அபுதாபி மற்றும் சவுதி ஆகியவை விரும்பவில்லை. அது சுனி மக்களைக் கொண்ட அரபு உலகத்திற்கு அச்சுறுத்தலானது என அவை கருதுகின்றன.
.
.

தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்

சிறீலங்கா அரசினால் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களாலும், அரசியல் கட்சிகளினாலும் நினைவுகூரப்பட்டன.

நாம் தமிழர் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் கலந்து கொண்டிருந்தார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சுடர் வணக்கம், வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

THANUS kodi தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்அதேசமயம் தமிழர் கடற்கரையான தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் அதிகாலை 6 மணியளவில் ஈழத்தை நோக்கிய திசையில் தீபங்கள் ஏற்றப்பட்டு நினைவு தினம் நடத்தப்பட்டது.

இதனிடையே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வை கோபலசாமி அவர்களின் தலைமையில் எழும்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் நினைவுதினம் இடம்பெற்றது.

vaiko தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்
இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கழக அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செங்குட்டுவான், வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன் மற்றும் கழக உறுப்பினர்கள், மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய வைகே அவர்கள் தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும்  உலகம் எங்கும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவேண்டும், அது ஒன்று போதும் தமிழீழம் ஏன் வேண்டும் என்பதற்கான பதிலும் , அடையும் வழிமுறையும் உண்டு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.

மேலும் வட்டுக்கோடடை தீர்மானத்தைப்போல் இந்த உலகத்தில் எந்த சட்ட வரைபும்  இல்லை, ஈழத்தமிழர்கள் எவ்வளவுக்கு அறிவானவர்களும் ஆற்றலானவர்கள் என்பதும் புலப்படும். அந்த தீர்மானத்தின் வழியிலேயே வந்தவர்தான் தலைவர் பிரபாகரன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

nedu தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

இலங்கை இறுதிப் போரின் போது காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் நிலை?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதும், அந்தப் போரில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக் கணக்கானோர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்தக் கட்டுரையில் காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

போரின் இறுதி நாள் அன்று, தமிழரான கத்தோலிக்க மதபோதகர் ஒருவர் தலைமையிலான குழுவினர், விடுதலைப் புலிகள், பொது மக்கள் உள்ளிட்ட 360 பேரை சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்குச் சொந்தமான பேருந்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் எவருக்கும் கிடைக்கவில்லை. அவர்களை எவரும் பார்க்கவில்லை.

தமிழர்களுக்கு தனிநாடு கோரும் போரில் பாதிரியார் பிரான்ஸிஸ் அவர்கள் என்றுமே ஆயுதம் தூக்கியதில்லை. தனது வார்த்தைகளையே ஆயுதமாக்கி போராடி வந்திருந்தார்.

போர் முடிவடைவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர், வத்திக்கானிடம் உதவி கேட்டு மூன்று பக்க கடிதத்தை பதுங்கு குழி ஒன்றிலிருந்து அவர் எழுதினார். அந்த பதுங்கு குழி தற்போது தமிழர்களின் மரணத்தைக் குறிக்கும் நினைவிடமாக உள்ளது. பாதிரியார் எழுதிய கடிதம் பற்றி வத்திக்கானை BBC யினர் தொடர்பு கொண்ட போதும் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இந்தக் கடிதம் எழுதிய சில நாட்களிலேயே போர் நிறைவு பெற்று பாதிரியார் பிரான்ஸிஸ் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வட்டுவாகல் ஊடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனர். அப்போது வட்டுவாகல் பாலத்தின் நீர்நிலை முழுவதும் இரத்தம், மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களால் நிரம்பியிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நாள் வரை இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிலையை அறிவிக்கக் கோரி வடக்கு மாகாணம் முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.

போர் முடிவடைந்த சில மாதங்களில் 40,000 பொது மக்கள் உயிரிழந்ததாகவும் பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட போதும், அதில் காற்பங்கிற்கும் குறைந்தோரே உயிரிழந்ததாக அரசு தெரிவிக்கின்றது. தங்களிடம் சரணடைந்தவர்களை தாம் கொல்லவில்லை என அரசு கூறிய போதும், தனிப்பட்ட புகார்கள் தொடர்பாக அரசு விளக்கமளிக்கவில்லை.

பாதிரியாரின் நெருங்கிய உறவினரான மோசஸ் என்பவர் பாதிரியாரைக் கண்டுபிடித்து தருமாறு சிறிலங்கா நீதிமன்றிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் மனு கொடுத்திருந்த போதும் இன்னும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண புனித பற்றிக் கல்லூரியில் கல்வி கற்ற பாதிரியார் பிரான்ஸிஸ் பின்பு கத்தோலிக்க மதகுருவாக ஆன பின்னரும் அதே இடத்திலுள்ள பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியராகவும், பின்பு அதிபராகவும் கடமையாற்றினார். இவரின் வாழ்க்கை தேவாலய பணிகள், பாடசாலை கிரிக்கெட் அணி போட்டிகளை ஊக்குவிப்பதிலேயே கழிந்தது. தனது மாணவர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருந்தார் என்று முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையின் போது பாதிரியார் பிரான்ஸிஸ் இருக்கும் இடத்தை காட்டுமாறு கடவுளிடம் வேண்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாதிரியார் பிரான்ஸிஸூடன் ராணுவத்தினருக்குச் சொந்தமான பேருந்தில் ஏறியவரும், விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் மனைவியுமான ஜெயக்குமாரி கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்ட போது, தனது கணவர் ஏறிய பின்னர் ஏனையோர் ஏறியதாகவும், இறுதியாக பாதிரியார் பிரான்ஸிஸ் ஏறியதாகவும், அவர் பேருந்தில் ஏறிய அனைவரது பெயர்களையும் எழுதியதாகவும் அவர் கூறினார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கு அனைவரும் பயந்த போதும், பாதிரியார் உடனிருந்ததால், தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என அவர்கள் எண்ணியதாகவும் அவர் கூறினார்.

இதுவே அதிக மக்கள் ஒரே சமயத்தில் காணாமல் போன சம்பவமாகக் கருதப்படுவதாக ஐ.நா. சபை அமைத்த குழுவில் உறுப்பினராக இருந்த யாஸ்மின் சோக்கா தெரிவித்தார். நீதிமன்றங்களை நாடிய போதும் எவ்வித முன்னேற்றமும் கிட்டவில்லை என்று காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனோர் திரும்பி வருவார்கள் என்று உறவினர்கள் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சிறிலங்கா உள்நாட்டுப் போரின் ஆறாத ரணம் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை குறித்து BBC செய்தியாளர்

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட BBC செய்தியாளர் தனது அனுபவத்தை இங்கு தெரிவித்துள்ளார் 2009 இறுதிக்கட்ட போர் நடந்த சமயம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இப்போரின் போது இப்பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த பிரதேசங்களில் மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். இவ்வாறு தங்கியிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 10 ஆண்டுகளாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள BBC தமிழ் பயணம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மரணமடைந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபி ஒன்றை அங்கே பார்க்க முடிந்தது. இந்த நினைவு தூபியை தவிர்த்து வேறு எதையும் அங்கு பார்க்க முடியவில்லை.

வரண்ட நிலம், இலையுதிர்ந்த மரங்கள் என மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாக முள்ளிவாய்க்கால் காணப்படுகின்றது. எனினும் இந்த நினைவு தூபிக்கு அருகில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டி அங்கு மக்கள் குடியேறிய போதிலும் அங்குள்ள மக்கள்,  சிறிலங்கா படையினரின் ஒருவித அச்சுறுத்தலுடனே இருப்பதாக கூறுகின்றனர்.

அங்கு சென்ற நாம் தற்போதைய வாழ்க்கை முறை பற்றி அறிவதற்காக அங்குள்ள மக்களிடம் பேச முயற்சித்தோம். இருந்தும் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருப்பவர்கள் ஊடகங்களுடன் பேச அச்சப்படுகின்றனர். இச்சூழ்நிலையில் மே 18ஆம் திகதி இந்த நினைவு தூபியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்று BBC யின் செய்தியாளர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இனவழிப்பின் இரத்த சாட்சியான சிறுமியொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பித்து. தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் தனது தாய் உள்ளிட்ட உறவுகளை பறிகொடுத்ததோடு தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வு பார்ப்போர் மனங்களை உருகச் செய்வதாகவிருந்தது.

தமிழர்களின் தனித்துவமான இறையாண்மை ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாதது – முள்ளிவாய்க்கால் பிரகடனம்

தமிழினப் படுகொலை நினைவேந்தல்10 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றன. இதில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) அமைப்பினரால் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டது.  இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் , சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்கபடவேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.

தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப்போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது.   முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள்,  வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். தமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்த தேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது. இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள். நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.

சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும், தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்க வைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசத்தின் கலை-கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமையாகும். சமூக கட்டுமானத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் சிங்கள தேசத்தில் இருந்தும் தனித்துவமாக வேறுபடுத்திப்பார்க்கக் கூடிய தனி சிறப்பியல்பான அம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

சிங்களவருக்கு இருப்பது போன்று அதைவிட தொன்மையானதும் செழிப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும், சிங்கள மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மிகத்தொன்மையான மொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களை தன்னகத்தே உள்ளீர்த்து தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்கு பகுதியை தமிழ் தாயகமாகக் கொண்டு வரலாற்றுப்பூர்வ குடிகளாக வாழ்வதாலும், சிங்கள அரசானது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கான எத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும். சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள்  தள்ளப்பட்டுள்ளோம். அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்வோம்.

 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து

 தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க கோருகிறோம்.

தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள      இனப்படுகொலையைத் தடுக்க, தமிழர் சமூக அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க, மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதிபூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.

மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழிச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சியின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் முகநூல் ஊடாக விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

தமிழ் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தினரின் செயற்பாடுகளுக்கு பல்லின மக்களிடமும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.CETR 2 7 அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

கடந்த ஐந்து நாட்களில் மூன்று மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களை சென்றடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது 1000 இற்கு மேற்பட்ட நபர்களில் விருப்புத்தளத்தில் உருவாங்கப்பட்டுள்ளது.

இது இந்த பரப்புரைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். எனினும் இந்த அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட பல காணொளிகளை முகப்புத்தக நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது நிறுத்தியும் வைத்துள்ளனர்.எனினும் ஈழத்தமிழ் மக்களின் துயரம் அனைத்துலக சமூகத்தை சென்றடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் அதிக சிரமங்களுடன் இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.CETR 2 1 அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளதுCETR 2 5 அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது