சிறிலங்கா உள்நாட்டுப் போரின் ஆறாத ரணம் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை குறித்து BBC செய்தியாளர்

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட BBC செய்தியாளர் தனது அனுபவத்தை இங்கு தெரிவித்துள்ளார் 2009 இறுதிக்கட்ட போர் நடந்த சமயம் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இப்போரின் போது இப்பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த பிரதேசங்களில் மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். இவ்வாறு தங்கியிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 10 ஆண்டுகளாக பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள BBC தமிழ் பயணம் மேற்கொண்டது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மரணமடைந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபி ஒன்றை அங்கே பார்க்க முடிந்தது. இந்த நினைவு தூபியை தவிர்த்து வேறு எதையும் அங்கு பார்க்க முடியவில்லை.

வரண்ட நிலம், இலையுதிர்ந்த மரங்கள் என மிகவும் வெப்பம் மிகுந்த பகுதியாக முள்ளிவாய்க்கால் காணப்படுகின்றது. எனினும் இந்த நினைவு தூபிக்கு அருகில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டி அங்கு மக்கள் குடியேறிய போதிலும் அங்குள்ள மக்கள்,  சிறிலங்கா படையினரின் ஒருவித அச்சுறுத்தலுடனே இருப்பதாக கூறுகின்றனர்.

அங்கு சென்ற நாம் தற்போதைய வாழ்க்கை முறை பற்றி அறிவதற்காக அங்குள்ள மக்களிடம் பேச முயற்சித்தோம். இருந்தும் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கிருப்பவர்கள் ஊடகங்களுடன் பேச அச்சப்படுகின்றனர். இச்சூழ்நிலையில் மே 18ஆம் திகதி இந்த நினைவு தூபியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்று BBC யின் செய்தியாளர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.