இலங்கை இறுதிப் போரின் போது காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் நிலை?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதும், அந்தப் போரில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக் கணக்கானோர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்தக் கட்டுரையில் காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

போரின் இறுதி நாள் அன்று, தமிழரான கத்தோலிக்க மதபோதகர் ஒருவர் தலைமையிலான குழுவினர், விடுதலைப் புலிகள், பொது மக்கள் உள்ளிட்ட 360 பேரை சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்குச் சொந்தமான பேருந்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் எவருக்கும் கிடைக்கவில்லை. அவர்களை எவரும் பார்க்கவில்லை.

தமிழர்களுக்கு தனிநாடு கோரும் போரில் பாதிரியார் பிரான்ஸிஸ் அவர்கள் என்றுமே ஆயுதம் தூக்கியதில்லை. தனது வார்த்தைகளையே ஆயுதமாக்கி போராடி வந்திருந்தார்.

போர் முடிவடைவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர், வத்திக்கானிடம் உதவி கேட்டு மூன்று பக்க கடிதத்தை பதுங்கு குழி ஒன்றிலிருந்து அவர் எழுதினார். அந்த பதுங்கு குழி தற்போது தமிழர்களின் மரணத்தைக் குறிக்கும் நினைவிடமாக உள்ளது. பாதிரியார் எழுதிய கடிதம் பற்றி வத்திக்கானை BBC யினர் தொடர்பு கொண்ட போதும் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இந்தக் கடிதம் எழுதிய சில நாட்களிலேயே போர் நிறைவு பெற்று பாதிரியார் பிரான்ஸிஸ் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வட்டுவாகல் ஊடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனர். அப்போது வட்டுவாகல் பாலத்தின் நீர்நிலை முழுவதும் இரத்தம், மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களால் நிரம்பியிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நாள் வரை இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிலையை அறிவிக்கக் கோரி வடக்கு மாகாணம் முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.

போர் முடிவடைந்த சில மாதங்களில் 40,000 பொது மக்கள் உயிரிழந்ததாகவும் பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட போதும், அதில் காற்பங்கிற்கும் குறைந்தோரே உயிரிழந்ததாக அரசு தெரிவிக்கின்றது. தங்களிடம் சரணடைந்தவர்களை தாம் கொல்லவில்லை என அரசு கூறிய போதும், தனிப்பட்ட புகார்கள் தொடர்பாக அரசு விளக்கமளிக்கவில்லை.

பாதிரியாரின் நெருங்கிய உறவினரான மோசஸ் என்பவர் பாதிரியாரைக் கண்டுபிடித்து தருமாறு சிறிலங்கா நீதிமன்றிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் மனு கொடுத்திருந்த போதும் இன்னும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண புனித பற்றிக் கல்லூரியில் கல்வி கற்ற பாதிரியார் பிரான்ஸிஸ் பின்பு கத்தோலிக்க மதகுருவாக ஆன பின்னரும் அதே இடத்திலுள்ள பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியராகவும், பின்பு அதிபராகவும் கடமையாற்றினார். இவரின் வாழ்க்கை தேவாலய பணிகள், பாடசாலை கிரிக்கெட் அணி போட்டிகளை ஊக்குவிப்பதிலேயே கழிந்தது. தனது மாணவர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருந்தார் என்று முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையின் போது பாதிரியார் பிரான்ஸிஸ் இருக்கும் இடத்தை காட்டுமாறு கடவுளிடம் வேண்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாதிரியார் பிரான்ஸிஸூடன் ராணுவத்தினருக்குச் சொந்தமான பேருந்தில் ஏறியவரும், விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் மனைவியுமான ஜெயக்குமாரி கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்ட போது, தனது கணவர் ஏறிய பின்னர் ஏனையோர் ஏறியதாகவும், இறுதியாக பாதிரியார் பிரான்ஸிஸ் ஏறியதாகவும், அவர் பேருந்தில் ஏறிய அனைவரது பெயர்களையும் எழுதியதாகவும் அவர் கூறினார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கு அனைவரும் பயந்த போதும், பாதிரியார் உடனிருந்ததால், தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என அவர்கள் எண்ணியதாகவும் அவர் கூறினார்.

இதுவே அதிக மக்கள் ஒரே சமயத்தில் காணாமல் போன சம்பவமாகக் கருதப்படுவதாக ஐ.நா. சபை அமைத்த குழுவில் உறுப்பினராக இருந்த யாஸ்மின் சோக்கா தெரிவித்தார். நீதிமன்றங்களை நாடிய போதும் எவ்வித முன்னேற்றமும் கிட்டவில்லை என்று காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனோர் திரும்பி வருவார்கள் என்று உறவினர்கள் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.