Home Blog Page 6

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மீனவர்கள் போராட்டம்!

தமக்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இன்றும் நாளையும் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000-க்கும் அதிகமான மீனவர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எப்போதும் நடுநிலையாக செயல்படும் – அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டும் செயல்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எஸ். போல் கபூர், வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கு அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவிய யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்களுக்காகவும் அரசாங்கத்தின் நன்றியினை அவர் தெரிவித்துக்கொண்டார்.

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜே.வி.பி பொதுச் செயலாளர் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong), ஜே.வி.பி பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் யான்வெய் சு (Yanwei Chu) மற்றும் சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் மெய் ஜிங் (Mei Jing) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவு விழா குறித்து சீனத் தூதுவர், ஜே.வி.பி பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்ததுடன், ஆண்டுவிழாவை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்படவுள்ள உத்தியோகபூர்வ விழாவில் கலந்துகொள்ளுமாறு டில்வின் சில்வாவுக்கு அழைப்பு விடுத்தார்.

 மேலும், சீனாவில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள கல்வித் திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பு வேளையில் கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்தீரத்தன்மையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவிப்பினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது.

ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும்.

உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது சிரேஷ்ட அரச மற்றும் வர்த்தக தலைவர்ளுடனான அவரது சந்திப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டை வளர்ப்பதிலும், கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரு நாடுகளிலும் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கும், செழிப்பிற்கும் உதவி செய்யும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பானதாகவும், திறந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 400!

செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் (21) 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே இந்த என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இந்தப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 405 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 377 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை : கடற்றொழில் அமைச்சர் கருத்து

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணியாளர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக பாராட்டிய அமைச்சர், காணாமல் போனவர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகால மனவேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 2,452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் வரை காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துயரத்தில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

“உடல் காயங்களுக்கு மருந்து வழங்க முடியும். ஆனால் மனக் காயங்களுக்கு உண்மையான மருந்து அன்பும் நீதியும் மட்டுமே.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது” என்றும் கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், தென் இலங்கையிலும் 1987–1989 காலப்பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதாக நினைவூட்டிய அவர், வடக்கும் தெற்கும் ஒரே விதமான துயரத்தை பகிர்ந்து கொள்கின்றன என்று தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் இந்த மனவேதனைக்கு உரிய தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் மக்கள் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதுடன், மீள்குடியேறிய மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.

அதேநேரம் இன வேறுபாடுகளைத் கடந்து அனைவரும் ஒரே நாட்டின் மக்களாக வாழக்கூடிய உண்மையான நல்லிணக்கச் சமூகத்தை உருவாக்குவதே இலக்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் அமெரிக்காவின் தோல்வி உலக நெருக்கடியின் முடிவல்ல – தமிழில்: ஆர்தீகன்

அமெரிக்க – ஈரான் போரின் முடிவுவாக இடைக்கால உடன்பாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம் பும், ஈரனின் அதிபர் மசூட் பெஸஸ்கியானும் கடந்த புதன்கிழமை(17) கையெழுத்திட்டனர். 60 நாட்கள் இடைக் கால போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும், அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படும். ஈரான் ஹார்மூஸ் நீரி ணையை 60 நாட்களுக்கு கட்டணங்கள் இன்றி திறக் கும். உலகின் பொருளாதாரம் மூச்சுவிட இது ஒரு கால அவகாசத்தை வழங்கும்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் அந்த பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையை மாற்றி யமைத்துள்ளதுடன், இந்த போரில் ஈரானே வெற்றிபெற்ற தாக பல ஆய்வாளர்களும் தெரிவித்துவரும் நிலையில்  விக்கிபீடியாவும் அதனை தான் பதிவு செய்துள்ளது.  பெரும் அழிவுகளுக்கும் இராஜதந்திர நாடகங்களுக்கும் பிறகு, கிட்டத்தட்ட எதையும் மாற்றாத பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான ஆயுத மோதலின் ஒரு அரிய உதாரணமாக அது அமைந்துள்ளது.
டெஹ்ரானும் வாஷிங்டனும், தத்தமது பாணியில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான முற்றுகையை நீக்குவதாக அறிவித்தவுடன், நிலைமை போருக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்பியது. இரண்டு மாத கால பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்ட மற்ற அனைத்து முக்கிய விஷயங்களிலும், இரு தரப்பினரும் பிப்ரவரி 28-க்கு முன்பு இருந்த அதே நிலைக்கு ஏறக்குறைய வந்துள்ளனர்.
இன்னும் கூறப்போனால் ஈரான் பெரும் அழிவைச் சந்தித்தாலும் போர் தொடங்க முன்னர் இருந்த நிலையை விட அதிகாரச் சமநிலையில் மிகப்பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளது.அதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த மோதலில் ஈடுபட்ட தரப்புகளில் ஒன்று, இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தது. ஈரான் மீதான தாக்குதல், அமெரிக்காவின் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு வலிமையான செயல் விளக்கமான நோக்கத்தை கொண்டிருந்தது, ஆனால் அதற் குப் பதிலாக, அந்த சக்தியின் வரம்புகளை உலக நாடுகள் காண அது வழிவகுத்தது.
போருக்கான பெரும் செலவினம், கிட்டத்தட்ட 115 பில்லியன் டொலர்கள், இராணுவ உள்கட்டமைப்பைத் திரட்டுதல், மற்றும் குடிமைத்துறையின் கணிசமான பகுதியை மூலோபாய இலக்குகளுக்குக் கீழ்ப்படுத்துதல் ஆகியவை, வாஷிங்டன் எதிர்பார்தத்ததை விட மிகவும் குறைவான தாக்கத்தையே விளைவித்தன. அமெரிக்கா விடம், தேவையான ஆயுதங்கள் மற்றும் பணம் இருந்த போதிலும், தடுத்து நிறுத்த முடியாத ஒரு மேலாதிக்க சக்தியைப் போலத் தோன்றாமல், ஒரு காகிதப் புலியைப் போலவே காட்சியளித்தது; அமெரிக்கா பலவீனமான நாடு களுக்கு ஆபத்தானதாகவும், ஆனால் எதிர்க்கத் தயாரான நாடுகளுக்கு எதிரான போரில் பலவீனமாகவும் இருந்தது.
ஒருநாள் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள் ளக்கூடிய அரசாங்கங்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். இப்போது அவர்கள் முன் இரண்டு உதாரணங்கள் உள்ளன: வெனிசுலா செய்தது போல எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதும், ஈரான் செய்தது போல எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலின் உடனடி நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அது ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது அல்லது சர்வதேச விவகாரங்களில் இஸ்லாமியக் குடியரசை ஒரு ஒருங்கி ணைந்த பங்கேற்பாளராக இல்லாமல்அழிப்பது என்பதாக இருந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்கள் படுதோல்வி அடைந்த னர், இப்போது நாம் தோல்வியை வெற்றியாகக் காட்ட அவர்கள் கூறும்சாக்குப்போக்குகளையும் முயற்சிகளையும் கேட்கிறோம், ஆனால் மைய உண்மை அப்படியே உள்ளது.
இந்தப் போர் ஒரு முழு அளவிலான தரை, கடல் மற்றும் வான்வழிப் போர்த் தாக்குதலாக அமையவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. 2003-ல் ஈராக்கிற்கு எதிராகப் பயன்படுத்திய வளங்களைப் போன்றவற்றை 2026-ல் அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தவில்லை என்றால், அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதே அதன் பொருள். அதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை; அவை உள்நாட்டு அரசியல், சர்வதேசக் கட்டுப்பாடுகள், பொருளாதார வரம்புகள் அல்லது ஆயுதப் படைகளின் பொருள்சார் நிலை ஆகியவையாகஇருக்கலாம், ஆனால் விளைவு ஒன்றுதான். வாஷிங்டன் தனது முழு பலத்தையும் கட்டவிழ்த்துவிடவில்லை, இழப்புகளைச் சந்தித்தது, மேலும் தனது முக்கிய நோக்கத்தை அடைவதில் தோல்வியடைந்தது.
இதற்கு மாறாக, ஈரான் எந்தவொரு குறிப்பிட்ட ஆயுத அமைப்பையும் விட மிக முக்கியமான ஒன்றை வெளிப்படுத்தியது. உக்ரைனைப் போல, அது வெளிநாடு களிலிருந்து பெரிய அளவிலான இராணுவ உதவியைப் பெறவில்லை, ஆயினும், தெளிவான ஒரு தேச அடையாள உணர்வால் பிணைக்கப்பட்ட ஒரு மக்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீள்திறனை அது காட்டியது. இந்த அடையாளம் வெறும் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக உலகில் நாட்டின் இடம் குறித்த தார்மீக மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்களைச் சார்ந்துள்ளது.
அமெரிக்க வரலாற்றாசிரியர் எட்வர்ட் லுட்வாக் ஒருமுறை குறிப்பிட்டது போல, ஆயுதங்களின் அளவு அல்லது நுட்பத்தை விட இந்தக் குணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும். இந்த விஷயத்தில், பொரு ளாதார மற்றும் தொழில்நுட்ப மேலாதிக்கம் அரசியல் வெற்றியாக மாறாததால், இது தீர்க்கமானதாக அமைந்தது.
ஈரான் தாக்குதல்களைத் தாங்கி தப்பிப்பிழைத்து, வாஷிங்டனையே மண்டியிட வைத்துள்ளது என்று Ynet இணையதளம் எழுதியுள்ளது. “ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தாங்கி, தனது எஞ்சிய பலத்தை நம்பி, அமெரிக்காவை மண்டியிடச் செய்துள்ளது,” “பிரச்சினை அமெரிக்காவிடம்தான் உள்ளது. அவர்கள் தங்கள் பல வீனத்தைக் காட்டியுள்ளனர்: அவர்களின் சொல் இனி சொல்லாக இருக்காது, அவர்களின் சக்தி இனி சக்தியாக இருக்காது, மேலும் அவர்களின் முற்றுகை இனி ஒரு முற்றுகையாக இருக்காது.” “ஒரு உலக வல்லரசாக அமெரிக் காவின் பொற்காலமாக இவை இருந்திருக்க வேண்டும்,” ஆனால் “ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் மாபெ ரும் பெயர்களான – அமெரிக்காவின் ‘காவிய சீற்றம்’ மற்றும் இஸ்ரேலின் ‘கர்ஜிக்கும் சிங்கம்’ – ஆகியவை துண்டு துண்டாக நொறுக்கப்பட்டுள்ளன,” என்று Ynet இணைய தளம் மேலும் கூறுகிறது.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம், இஸ்ரேலுக்கு ஒரு “மூலோபாயத் தோல்வி” என்றும், அமெரிக்கா மற்றும் பிராந்தி யத்தில் உள்ள மிதவாத சுன்னி நாடுகளுக்கு ஒரு “தோல்வி” என்றும் இடதுசாரிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் இடையே சமூகத்தில் இத்தகைய ஒருமித்த கருத்தை இஸ்ரேல் நீண்ட காலமாக கண்டதில்லை. “டிரம்ப் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் உறுதியாக இருக்கிறார். ஒரு வல்லரசின் தலைவர் இதற்கு முன் ஒருபோதும் இத்தகைய தீவிரத்தைக் காட்டியதில்லை, இது பலவீனத்தின் அறிகுறி யாகும்,” என்று Ynet நம்புகிறது.
மேலும், “தற்போது தனது அதிகாரப் பிரயோகம் கூட, தன்னை ஒரு உலகளாவிய சூப்பர்மேனாகச் சித்தரிக் கும் டிரம்பின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய காணொ ளிகளாகச் சுருங்கிவிட்டது” என்றும் அது குறிப்பிடுகிறது. “இதை நம்புவது கடினம், ஆனால் அதுதான் உண்மை: கடுமையான தோல்வியைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட ஒரு நாட்டிடம், இவ்வளவு சக்திவாய்ந்த ஒரு நாடு இதற்கு முன் ஒருபோதும் இத்தகைய பயங்கரமான பலவீனத்தைக் காட்டியதில்லை,” என்று அந்த இணையதளம் கூறுகிறது.
அதனால்தான், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையி லான ஒப்பந்தம், போருக்கான காரணங்களாக முறையாக முன்வைக்கப்பட்ட எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க வில்லை. அணுசக்திப் பிரச்சினை, ஏவுகணைத் திட்டம் மற்றும் பிற வழக்கமான புகார்கள் இரண்டாம் பட்சமானவை. உண்மையான பிரச்சினை, இஸ்லாமியக் குடியரசு அதன் தற்போதைய வடிவத்தில் நிலைத்திருப்பதுதான்.
மையப் பிரச்சினையில் தோல்வியடைந்ததால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது சிறிய விஷயங்கள் முக்கியமானவை என்று பாசாங்கு செய்யலாம், ஆனால் அவை அப்படியல்ல. ஏவுகணைகள் இருந்தாலும் இல்லா விட்டாலும், அணுசக்தித் திட்டம் இருந்தாலும் இல்லா விட்டாலும், ஒரு சுதந்திர ஈரான் என்பது வாஷிங்டன், மேற்கு ஜெருசலேம் மற்றும் பலருக்கு ஒரு அடிப்படைப் பிரச்சினையாகவே உள்ளது. அவர்களால் அதைத் தீர்க்க முடியவில்லை என்பதை இந்தப் போர் காட்டியுள்ளது.