15 க்கு முன்னா் பாராளுமன்றத்தைக் கலையுங்கள் – ரணிலுக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்

ranil 15 க்கு முன்னா் பாராளுமன்றத்தைக் கலையுங்கள் - ரணிலுக்கு மொட்டு கட்சி கடும் அழுத்தம்இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவினர் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் ஜுன் இறுதியில் அல்லது ஜுலை ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று பொதுஜன பெரமுனவில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மையில் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதும், கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பில் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும், ஆனால் ஜனாதிபதி தரப்பில் இதற்கு இதுவரையில் இணக்கம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பொதுஜன பெரமுனவினர், ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஜனாதிபதி மறுத்தால் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியுமா? என்பது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து வருவதாககவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே அமைச்சரவையில் அனுமதிபெற்றுள்ள உத்தேச மின்சார சபை சட்டமூலம் உள்ளிட்ட சில முக்கிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதால் அது வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சட்டமூலங்களை விரைவில் நிறைவேற்ற உதவி செய்து, பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியை இணங்கச் செய்வதற்கு பொதுஜன பெரமுனவுக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.