பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால் ஸ்திரமற்ற அரசாங்கமே உருவாகும் – உதய கம்மன்பில

கம்மன்பில பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால் ஸ்திரமற்ற அரசாங்கமே உருவாகும் - உதய கம்மன்பிலஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் ஸ்திரமற்ற பாராளுமன்றம் உருவாகி நாடு மேலும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் அது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால், ஜனாதிபதி தெரிவான தரப்பினருக்கே பொதுத் தேர்தலில் வெற்றிக்கிடைக்கும். அவ்வாறு அன்றி முதலில் பொதுத் தேர்தல் நடக்கும் போது எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை கிடைக்காது போகும் என்பதுடன் ஸ்தீரமற்ற பாராளுமன்றமே உருவாகும்” என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “அவ்வாறு இடம்பெற்றால் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு இரண்டரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது போகும். அதனால் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்காத பாராளுமன்றமும் உருவாகலாம். அப்படி நடந்தால் ஜனாதிபதிக்கு தனது பதவிக் காலத்தில் 50 வீதமான நாட்களை வேலையெதுவும் செய்ய முடியாது இருக்க நேரிடும்” என்றும் சுட்டிக்காட்டினாா்.

“ஆகவே முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை நெருக்கடிக்குள் கொண்டு செல்லச் செய்யும் செயற்பாடாகவே அமையும். ஆஜர்டினாவை போன்ற நெருக்கடி நிலைக்குள்ளும் இலங்கை தள்ளப்படலாம்” என்றும் உதய கம்மன்பில எச்சரித்தாா்.