சர்வதேச அரசியலிலும் புவிசார் இராஜதந்திரத்திலும் சிறிய தீவு நாடுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், அவற்றின் உள்நாட்டுப் பொருளாதார அமைப்பிலும் உலக ளாவிய நம்பகத்தன்மையிலும் எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமகால அமெரிக்க – இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான விரிசலே மிகச் சிறந்த உதாரணமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோரின் திடீர் இலங்கை விஜயம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை உற்றுநோக்கியமை, அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய கடலோர காவற்படைக் கப்பல் ஒப்படைப்பு விழாவில் அவரது முகம் காணப்படாமை என்பன வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
மாறாக, உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் புவிசார் அரசியல் சதுரங் கத்தில், கொழும்பு எடுத்த முதிர்ச்சியற்ற இராஜதந்திர நிலைப்பாடும், அதன் விளைவாக வொஷிங்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக வெளிப்பட்ட கடுமையான கோபமுமே இதன் பின்னணியில் உள்ளன.
இந்த இராஜதந்திர முரண்பாடு, வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போதைய அநுர அரசாங்கம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கையின் தெளிவின்மை யையும், மூலோபாயத் தடுமாற்றத்தையும் சர்வதேச அரங் கில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தப் பாரிய இராஜதந்திரப் பூசலின் அடிநாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் பொதுச் சபையி லும் அரங்கேறிய சர்வதேச அரசியல் நகர்வுகளோடு பிணைந்துள்ளது. ஈரானால் ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக முடக்கப்பட்டதை அடுத்து, உலகளாவிய கப்பல் போக்கு வரத்தை வழமைக்குக் கொண்டுவர அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் ஒரு விசேட தீர்மானத்தைக் கொண்டு வந்தது. எனினும், அமெரிக்காவின் புவிசார் அரசியல் எதிரிக ளான சீனாவும் ரஷ்யாவும் தங்களின் ‘வீட்டோ’ அதிகாரத் தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தைத் தோற்கடித்தன. பாது காப்புச் சபையில் முறியடிக்கப்பட்ட தீர்மானத்தை சர்வதேச சட்டங்களின்படி ஐ.நா. பொதுச்சபைக்குக் கொண்டு சென்று, அங்குள்ள உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக முயன்றது.
இதற்கமைய தயாரிக்கப்பட்ட உடன்படிக்கையில், தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான பங்காளியான இந்தியா முதலாவதாகக் கையெழுத்திட்டது டன், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் வொஷிங்டனின் அழுத்தங்களுக்குப் பணிந்து உடன்படிக் கையை அங்கீகரித்தன. பாகிஸ்தான் தான் அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுவதைக் காரணம்காட்டி, இராஜதந்திரத் தந்திரோபாயத்துடன் இதிலிருந்து விலகிய நிலையில், இலங்கை இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் அதன் இராஜதந்திர அறியாமையையே வெளிப்படுத்தியது.
ஆரம்பத்தில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமும், ஐ.நா.கொழும்பு அலுவலகமும் இந்தத் தீர் மானத்தில் கையெழுத்திடுமாறு விடுத்த தொடர் நினை வூட்டல்களுக்குப் பதிலளிக்காது மௌனம் காத்த இலங்கை அரசாங்கம், இறுதியாக எழுத்துபூர்வமாக விடுக்கப்பட்ட அழுத்தங்களின் பின்னர், ‘ஈரான் தரப்பு உள்ளடக்கப்படாமல் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இத்தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளதால் இதில் கையெழுத்திட முடியாது’ என்று திட்ட வட்டமாக அறிவித்தது.
பாகிஸ்தான் தனது விலகலுக்குப் பின்னால் நியாயமான மூலோபாயக் காரணத்தைக்காட்டி அமெரிக்கா வின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொண்ட வேளையில், இலங்கை எவ்வித சர்வதேச அரசியல் பின்புலமும் இன்றி, ஈரானுக்காக வாதாடி அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக்கொண்டமையானது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இதன் நேரடி இராஜதந்திர சமிக்ஞையாகவே, தான் கலந்துகொள்ளப் போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்த கடலோர காவல்படைக் கப்பல் ஒப்படைப்பு விழாவை செர்ஜியோ கோர் முற்றாகப் புறக்கணித்தார்.
அமெரிக்கா வழங்கிய கப்பல் மற்றும் ஹெலிகொப் டர்களைப் பெற்றுக்கொள்ளும் பிரம்மாண்ட விழாவில், அக்கொடையின் பின்னணியில் இருந்த சிறப்புத் தூதுவரே வராமல் தவிர்த்தமையானது, புதிய அரசாங்கத்திற்கு வொஷிங்டன் விடுத்த பகிரங்கமான இராஜதந்திர எச்சரிக் கையாகும்.
இந்த இராஜதந்திரக் கோபத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது மேலும் 12.5சதவீதம் கூடுதல் சுங்கவரியை விதிக்கப் பரிந்துரைத்துள்ளமையானது இலங் கையின் பொருளாதார முதுகெலும்பைக் தட்டிப்பார்க்கும் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
‘கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகச் சந்தைக்கு வருவதைத் தடுக்கத் தவறியமை’ என்ற குற்றச்சாட்டின் கீழ், இலங்கை உள்ளிட்ட 45நாடுகளுக்கு இந்த வரிவிதிப்பு உத்தேசிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் ஆடைத்தொழிற்துறையானது தமக்கான மூலப்பொருட்களில் பெரும்பகுதியை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இந்தச் சீன, ரஷ்ய மூலப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஆடைகளின் பிரதான ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்காவே விளங்கும் பின்னணியில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள 20சதவீத சுங்கவரியுடன் இந்த 12.5சதவீத கூடுதல் வரியும் இணையும் போது, அமெரிக்கக் கொள்வனவாளர்கள் இலங்கைப் பொருட்களுக்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறை தனது போட்டித்தன்மையை முற்றாக இழந்து, பாரிய வேலைவாய்ப்புப் பறிப்புகளையும், நாட்டின் பிரதான வெளிநாட்டு வருமான வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா எடுத்த இந்த அதிரடிப் பொருளாதார நகர்வு, இராஜதந்திர ரீதியாகத் தடம்மாறும் சிறிய நாடுகளை அமெரிக்கா எவ்வாறு பொருளாதாரக் காரணி மூலம் பணிய வைக்க முற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மறுபுறம், இலங்கைக்கு மிக அருகில், காலிக்குத் தெற்கே சர்வதேச கப்பல் பாதையில் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் சிறப்புப் படையினர் நடத்திய வான்வழி அதிரடித் தாக்குதலும், ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்திய ‘லெனோரே’ (எம்.ரி.டவினா) கப்பலைக் கைப்பற்றியமையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கை கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அமெரிக்காவின் இராணுவக் கண்காணிப்பு மற்றும் தன்னிச்சையான தலையீடுகள் எந்தளவிற்கு அதிகரித்துள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றன. உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும், நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் இந்த முக்கியமான கப்பல் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமெரிக்கா முயல்கிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததும், உலகச் சந்தை யில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 20 டொலர்கள் வரை சரிவடைந்தது. இந்த உலகளாவிய இராஜதந்திர மாற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக வரவேற்று, ‘பேச்சுவார்த்தைகளே மனிதகுலத்தின் பலம்’ எனப்பதிவிட்ட வேளையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் உடனடியாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாது மௌனம் காத்தமையானது அதன் கடுமையான மூலோபாயத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.
இந்த அமைதி உடன்படிக்கையும் உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் பாரிய இராஜதந்திர மற்றும் அரசியல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், அரசாங்கம் பதவியேற்று மாதங்கள் பல கடந்தும், ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத் தன்மையைத் தாண்டி, எந்தவொரு புதிய பொருளாதார முன்னேற்றத்தையும் எட்டவில்லை.
மாறாக, அண்மைய நாட்களாக இலங்கையின் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி நகர்வதையும், பணவீக்கம் அதிகரிப்பதையும் அரசாங்கம் உள்நாட்டில் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மெதுமெதுவாக வீழ்ச்சி யடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் எச்சரித்திருந்த பின்னணியில், இந்த உள்நாட்டுப் பொரு ளாதாரப் பின்னடைவு மற்றும் தளர்வு நிலைகளுக்கு தங்களின் தவறான கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத தற்போதைய அரசாங்கம், ‘மத்திய கிழக்கின் போர்ச்சூழல் தான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம்’ என்ற ஒற்றைக் காரணியை மக்கள் மத்தியில் தங்களின் இராஜதந்திரப் போர்வையாகவும், தற்காப்புக் கேடயமாகவும் பயன்படுத்தி வந்தது.
முன்னதாக, கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியேற்றவுடன் எடுத்த முதிர்ச்சியற்ற வரிவிலக்குகள் மற்றும் தன்னிச்சையான இரசாயன உரத் தடை போன்ற தவறான தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் அடிமட்டமாகச் சரிவடைந்த போது, அதே காலகட்டத்தில் பரவிய ‘கொவிட் பெருந்தொற்று’ சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதார வீழ்ச்சியின் முழுப் பழியையும் கோவிட் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க முயன்ற வரலாற்றுத் தவறை தற்போதைய அரசாங்கமும் ‘காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த’ கதையாக மத்திய கிழக்குப் போரின் மீது போட்டுத் தப்பிக்க முயன்றது. ஆனால், தற்போது அமெரிக்கா – ஈரான் அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டுப் பொருளாதாரப் பின்னடைவுக்கு இனிமேலும் வெளிப்புறக் காரணிகளைக் காட்டி அரசாங்கம் தப்பிக்க முடியாது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயரும் போது, பேரலுக்கு ஒரு டொலர் உயர்ந்தால் லீற்றருக்கு இரண்டு ரூபா அதிகரிக்க வேண்டும் என்று மிகத்துல்லியமாகக் கணக்குக் காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது உலகச் சந்தையில் பரலுக்கு 20 டொலர்கள் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ள போது, அந்தப் பலனை உள்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு எத்தகைய கணக்கைக் காட்டப் போகிறார் என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்ட பொருளா தாரப் பின்னடைவுகள் உடனடியாகச் சீராகாது என்பது உண்மை என்றாலும், போர் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், சந்தை வழமைக்குத் திரும்பிய பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் மேல்நோக்கி வளர்ச்சி பெறத் தவறினால், அரசாங்கம் இவ்வளவு காலமும் கூறிவந்த காரணங்கள் யாவும் வெறும் அரசியல் சாக்குப்போக்குகள் என்பதும், அவர்களிடம் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லை என்பதும் மக்கள் மத்தியில் அம்பலமாகிவிடும்.
இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழல் உருவாகுவது அரசாங்கத்தின் நாடித்துடிப்பிற்கே பேராபத் தாக முடியும் என்பதால் தான், இந்த உலகளாவிய அமைதி உடன்படிக்கையை அரசாங்கத் தரப்பு உடனடியாக வரவேற் காது மௌனம் காத்தது. அமெரிக்காவுடனான இந்த இராஜதந்திர விரிசலும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இலங்கை எடுத்த பிடிவாதமான போக்கும், வல்லரசு நாடுகளின் மூலோபாய நலன்கள் மோதிக்கொள்ளும் இந்தியப் பெருங்கடல் பிராந் தியத்தில் இலங்கை எவ்வளவு பலவீனமான இராஜதந்திரக் கயிற்றில் நடக்கிறது என்பதைத் துல்லியமாக உணர்த்து கின்றது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் ஆதிக் கம் சவாலுக்குட்படுத்தப்படும் இக்காலகட்டத்திலும், இலங்கை யின் பிரதான ஏற்றுமதிச் சந்தையாகவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பின்னணியாகவும் அமெரிக்காவே விளங்குவதை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டுச் செயற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராஜதந்திரக் கோபத்தால் விதிக் கப்படவுள்ள சுங்கவரி நெருக்கடிகளை எதிர்கொள் வதா, அல்லது மத்திய கிழக்கு அமைதியினால் ஏற்படும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப உள் நாட்டுக் கொள்கைகளைச் சீரமைப்பதா என்ற இருமுனைத் தாக்குதலுக்குள் தற்போதைய இலங்கை அரசாங்கம் சிக்கு ண்டு, தெளிவான திசையின்றிக் தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்பது தெளிவாகிறது.