Home Blog Page 8

பயங்கரவாத த​டைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்!

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த புதிய சட்டமூலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்படுகிறதே தவிர, தனிநபர்களையோ அல்லது வேறு தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்ல என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த இடத்திற்கு வந்தபோதும் காணாமல் போனோர் தொடர்பாகவே பேச வேண்டியிருந்தது. அப்போது காணாமல் போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்திருந்தது.

ஒரு வருட காலத்திற்குள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்குத் தேவையான நியமனங்களை வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தோம். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் கடந்தகால அரசாங்கங்கள் தொடர்பில் உங்களுக்குப் பலத்த வேதனைகள் இருந்தன.

அக்காலப்பகுதியில் நிலவிய அரசியல் சூழல், அந்த நிறுவனங்களை இயக்கிய விதம் ஆகியவையே இதற்கு காரணமாக அமைந்தன. கடந்த அரசாங்கங்களுக்கு அரசியல் ரீதியான தேவை இருந்திருந்தால் இவற்றைச் செய்திருக்க முடியும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன என்றால், கடந்த அரசாங்கங்களுக்கு இந்த விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வரும் தேவை இருந்திருக்கவில்லை. முப்பது வருட யுத்தத்தினால் வடக்கும் தெற்கும் தாராளமாக இரத்தமும் கண்ணீரும் சிந்தியுள்ளன. மீண்டும் அப்படியானதொரு நிலைமை ஏற்படக்கூடாது.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்றால் நல்லிணக்கமும் நட்புறவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த விசாரணைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு பலத்த தேவைப்பாடு உள்ளது.

தற்போது வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இனிமேலும் தமிழ் மக்கள் தங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நினைப்பதற்கு இடமளிக்க முடியாது. வட பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இனவாதம், மதவாதம், மதவெறி ஆகியவற்றால் நஞ்சூட்டப்பட்டுள்ள ஒரு நிலத்தை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.” என்றார்.

விலைவாசி உயர்வை கண்டித்து பண்டாரவளை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) வியாழக்கிழமை  பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், தற்போதைய விலைவாசி உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக தெரிவித்து, பல்வேறு கோஷங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை இரத்து

அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகவிருந்தது.

சுவிட்சர்லாந்தில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த பயணத்திலிருந்து அமெரிக்கத் உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் பின்வாங்கியுள்ளதாக வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நேற்றிரவு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான்…

திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள ‘Gun Site’ எனப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 60 பேரை தடுத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட பல பாரிய குற்றச் செயல்களுக்கு குறித்த பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சிறை வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விசாரணையின்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார். மேலும், விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தின் காணொளிப் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதினொரு இளைஞர்களைக் கடத்திக் காணாமல் ஆக்கியமை மற்றும் பலரைக் கடத்திச் சித்திரவதை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே, நீதிபதி இந்த கள விசாரணையை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை (18) அன்று முதல் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மேலதிக விசாரணைகளில் திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் கெவோர்க் சர்க்ஸியன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும், துறைமுகம், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் எதிர்கால நிதி மாதிரிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தனியார் துறை பங்களிப்பு குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணைந்து விசேட ஆய்வு ஒன்றை முன்னெடுத்து வருவதாக திரு. கெவோர்க் சர்க்ஸியன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒரு தனி நிறுவனமாக அபிவிருத்தி செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்றங்களின் போது தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன், ஊழியர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் வணிக ரீதியான நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டமைப்பு அவசியம் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும், இது தொடர்பாக சர்வதேச நிதி நிறுவனத்துடன் முன்னெடுக்கப்படும் பேச்சுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் விமானத் துறை சந்திக்கும் சவால்களும் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலத் தீர்மானங்கள் சரியான நிதி மாதிரிகள் மற்றும் வலுவான அரச – தனியார் பங்களிப்புடன், மிகவும் வெளிப்படையான முறையில் அமையும் என அமைச்சர் அனுர கருணாதிலக்க இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய இறக்குமதி ஒழுங்குமுறை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவுகள் இன்று (19) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுப்பனவுக்கும் வங்கிகள் மூலம் சிறப்புப் பரிவர்த்தனை எண் ஒன்று வழங்கப்பட வேண்டும்.  அத்துடன், அந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் பற்றிய விபரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவுத் திகதி, தற்காலிக விலைப்பட்டியல் எண் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கிகள் மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

மேலும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளராகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு, வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதை முறையாகக் கண்காணிக்கவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (18) அழைக்கப்பட்டபோது, அது குறித்த மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு நேற்று (17) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது, வழக்கின் உண்மைகளைச் சரிபார்ப்பதற்காக இம்மனுவை இன்றைய தினம் மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது

பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம், மசசூசெட்ஸில் (massachusetts) உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றிய 32 வயதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குவான மஹாயாயே வினீத தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“பாலியல் தொழிலை வணிக ரீதியில் பெற்றுக்கொள்பவர்களை இலக்குவைத்து பொஸ்டன் (Boston) பொலிஸார் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின்போது அவர் கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் 6 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனனர்

மஹாயாயே வினீத தேரர் கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் குறித்த பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றி வந்ததுடன், மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கி வந்தார்

இந்நிலையில் பொஸ்டனில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஃபீபா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழில் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பொஸ்டன் காவல்துறையினரால் ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை மூலமே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

பாலியல் தொழிலாளிகளாக நடித்த காவல்துறை அதிகாரிகளால் இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு மஹாயாயே வினீத தேரர் பதிலளித்ததாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி பாலியல் ரீதியான பல்வேறு செயல்களில் ஈடுபடுமாறு அவர் கோரியதாகவும், அதற்காக 125 – 400 அமெரிக்க டொலர்கள் வரை செலுத்துவதாகக் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பொஸ்டனில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து குறித்த தேரர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மஹாயாயே வினீத தேரர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணையை சுட்டிக்காட்டி ஐ.தே.க அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முழுமையான விசாரணைத் தரவுகளை தற்போதைய இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா? என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறுகிய காலப்பகுதிக்குள், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைக் கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நினைவூட்டியுள்ளது.

இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்குச் சில தொழில்நுட்ப நிபுணத்துவம் பற்றாக்குறையாக இருந்தமையினாலேயே இந்த உதவி கோரப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு உறுதி அளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) முகவர்கள், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவப் புலனாய்வுத் துறை மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விசாரணைகளின் முடிவுகளை எப்.பி.ஐ பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், உள்ளூர் அதிகாரிகளாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணைகளின் அடிப்படையில் 2020 நவம்பர் 12 அன்று எப்.பி.ஐ விசேட முகவரால் அமெரிக்க நீதிமன்றத்தில் விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2020 டிசம்பரில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், இலங்கையில் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மீனவர் விவகாரம் : கடற்றொழில் அமைச்சர் இந்தியா பயணம்…

இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 06 மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகைகள் குறைவடைந்திருந்த போதிலும், எதிர்காலத்தில் மீண்டும் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற எல்லை தாண்டிய நுழைவுகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படை மூலம் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட, முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திரைப்படங்களில் நீதிக்காகப் போராடும் ஒரு போராளியாகச் சித்தரிக்கப்பட்டதன் வெளிப்பாடாகவே விஜய் தற்போது முதலமைச்சராக வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திரைப்படங்களில் காட்டிய அதேநேர்மையை அவர் அரசியலிலும் வெளிப்படுத்துவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களின் நிலைத்தன்மையையும் கருத்திற் கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்ட முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதும், கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையுமாயின், நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை – தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டுவதற்கான முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.