சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் கெவோர்க் சர்க்ஸியன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும், துறைமுகம், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் எதிர்கால நிதி மாதிரிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தனியார் துறை பங்களிப்பு குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணைந்து விசேட ஆய்வு ஒன்றை முன்னெடுத்து வருவதாக திரு. கெவோர்க் சர்க்ஸியன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒரு தனி நிறுவனமாக அபிவிருத்தி செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்றங்களின் போது தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன், ஊழியர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் வணிக ரீதியான நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டமைப்பு அவசியம் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தற்போது சர்வதேச கவனம் கொழும்பு துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளதாக உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும், இது தொடர்பாக சர்வதேச நிதி நிறுவனத்துடன் முன்னெடுக்கப்படும் பேச்சுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் விமானத் துறை சந்திக்கும் சவால்களும் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்காலத் தீர்மானங்கள் சரியான நிதி மாதிரிகள் மற்றும் வலுவான அரச – தனியார் பங்களிப்புடன், மிகவும் வெளிப்படையான முறையில் அமையும் என அமைச்சர் அனுர கருணாதிலக்க இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.