மீனவர் விவகாரம் : கடற்றொழில் அமைச்சர் இந்தியா பயணம்…

இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 06 மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகைகள் குறைவடைந்திருந்த போதிலும், எதிர்காலத்தில் மீண்டும் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற எல்லை தாண்டிய நுழைவுகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படை மூலம் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட, முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

திரைப்படங்களில் நீதிக்காகப் போராடும் ஒரு போராளியாகச் சித்தரிக்கப்பட்டதன் வெளிப்பாடாகவே விஜய் தற்போது முதலமைச்சராக வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திரைப்படங்களில் காட்டிய அதேநேர்மையை அவர் அரசியலிலும் வெளிப்படுத்துவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களின் நிலைத்தன்மையையும் கருத்திற் கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்ட முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதும், கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமையுமாயின், நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை – தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டுவதற்கான முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.