Home Blog Page 9

15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் வியாழக்கிழமை ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.

இத்தகையதொரு நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் இடம்பிடித்துள்ளது.

இந்தத் தீர்மானம் காரணமாக, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்வதுடன், அந்தத் தளங்களின் முழுமையான அம்சங்களை அவர்கள் அணுகுவதையும் கட்டுப்படுத்துகிறது.

இலங்கை EXPO – 2027 : இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் விஜித்த விளக்கம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை எக்ஸ்போ – 2027 குறித்த இராஜதந்திர விளக்கக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூதரகப் பணியகங்களின் தலைவர்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அணியின் பிரதிநிதிகள், புதுடில்லி மற்றும் பிற வெளிநாட்டுத் தலைநகரங்களைத் தளமாகக் கொண்ட மற்றும் இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர அதிகாரிகள் மெய்நிகர் நிலையில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

வரவேற்புரை ஆற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ, 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பில் உள்ள BMICH-இல் நடைபெறவுள்ள EXPO – 2027, சமீப ஆண்டுகளில் இலங்கையில் நடைபெறும் மிகப் பெரிய சர்வதேச வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், உலக நாடுகளுடனான கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இலங்கை – EXPO 2027 ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது  என்றார்.
வர்த்தக சமூகங்கள், வர்த்தக சபைகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் முதலீட்டாளர் குழுக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தூதரகங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கையும் அமைச்சர் ஹேரத் வலியுறுத்தியதுடன், கொழும்பில் நடைபெறும் இலங்கை – EXPO 2027இல் கலந்துகொள்ளுமாறு அரசாங்கங்கள், நிறுவகங்கள் மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈ​ரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானது அல்ல. ஒழுங்​காக நடந்துகொள்​ளா​விட்​டால் அந்த நாட்​டின் மீது மீண்​டும் குண்டு மழை பொழி​வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்​டுள்​ளது. நாளை சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெறும் ஜி7 உச்சிமாநாட்​டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றுள்​ளார்.

பிரான்​சில் கால் பதித்​தது முதலே ஈரானுட​னான தனது ஒப்பந்தத்தைப் பற்​றிப் பெரு​மை​யாகப் பேசி வரும் ட்ரம்ப், சில ‘முட்​டாள் மனிதர்​கள்’ பரிந்​துரைத்த ‘உல​களா​விய அழுத்​தத்​தை’ தான் தடுத்து நிறுத்​தி​ய​தாக உரிமை கோரி​னார். ஆனால், முட்டாள் யார் என்​பதை தெரிவிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்​போது, ‘‘ஈரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானதல்ல. இது ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மட்டுமே. இது எனக்​குப் பிடிக்​க​வில்லை என்​றாலோ அல்​லது அவர்கள் (ஈரான்) ஒழுங்​காக நடந்து கொள்​ள​வில்லை என்றாலோ, நாங்​கள் மீண்​டும் அவர்​களின் தலைக்கு நேராக குண்​டு​களை வீசத் தொடங்​கி​விடு​வோம். ஏனென்​றால் அவர்​கள் கடந்த 47 ஆண்​டு​களாகத் தவறாகவே நடந்து கொண்​டுள்​ளனர்’’ என்​றார்.

ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கெனவே ஓரளவு திறக்கப்பட்டுவிட்டது என்றும், அடுத்த ஒன்று அல்லது 2 நாளில் அது முழுமையாகத் திறக்கப்பட உள்ளது என்றும் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

 

திருகோணமலை : ஆக்கிரமிக்கப்படும் குளங்கள் குறித்து கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் பாசன அமைப்புகள் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.

குளங்கள் வெறும் நீர்நிலைகள் அல்ல. அவை விவசாயம், உணவு பாதுகாப்பு, கிராமிய வாழ்வாதாரம் மற்றும் மக்களின் பாசன உரிமையுடன் நேரடியாக இணைந்துள்ள அடிப்படை வளங்களாகும்.

குளங்களை அவற்றின் உண்மையான கொள்ளளவுக்கு மீளமைத்தல், உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணுதல், பாசன அணுகலை மீண்டும் உறுதி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பெருவெளி, கங்குவெளி, மேன்காமம், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் குளங்கள் மற்றும் பாசன அமைப்புகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குளங்கள், கால்வாய்கள், ஒதுக்கீட்டு நிலங்கள் மற்றும் பாசனத்துடன் தொடர்புடைய ஏனைய பொது நிலங்களில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் எந்தவித சமரசமும் இல்லாத கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட செயலாளர் /அரசாங்க அதிபர் ஹேமந்த குமார, மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், வனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குளங்களை பாதுகாப்பது என்பது விவசாயிகளை பாதுகாப்பதாகும். அது உள்ளூர் உணவு உற்பத்தியை வலுப்படுத்துவதோடு, கிராமிய சமூகங்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவாக, பொது வளங்களை பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்தியாவசியமான பாசன மற்றும் விவசாய அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக, சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் சந்தோசம்.! : பா.அரியநேத்திரன்

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இம்மாதம் முதல்வாரம் 2026, யூன்,02, ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பல்துறைசார் விஜயமொன்றை மேற்கொண்டார். நிலை யானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில் அவருடைய பயணமும் பார்வையும், அபிவிருத்திக்கான திட்டங்களும் அமைந்திருந்ததை காணலாம்.
ஏற்கனவே சில தடவைகள் குறிப்பாக இலங் கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். குறிப்பாக இந்திய உயர்ஸ்தானிகராக பதவியேற்ற பின்னர், 2024 பெப்ரவரி 15 ,16, 17,யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திற்கான தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
2025 ஜனவரி 17,ல்,யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வடக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி யிருந்தார். தற்போது இந்த மாதம் முதல்வாரம் 2026, யூன், 02, ம் திகதி யாழ் சென்ற இந்திய தூதுவர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, காங்கேசன்துறைமுகம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டதுடன், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும்
வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்திய தூதுவரின் யாழ். விஜயத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
காங்கேசன்துறைமுகத்தில் இயக்கப்படும் பயணி கள் கப்பல் சிவகங்கை சேவைகள் கப்பல் போக்கு வரத்து குறித்து அதிகாரிகளுடனும் பயணிகளுடன் கலந்துரை யாடியதுடன் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் சென்று அங்கு இடம்பெற்றுவரும் உற்பத்தி மற்றும் தொழில் சார் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டதை அறியமுடிந்தது. யாழ்ப் பாணத்தின் அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தின் முன்னேற்றப் பணிகளை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெடுந்தீவில் அமைந்துள்ள புதுப்பிக்கத்தக்க வலு சக்தித் திட்ட தளத்திற்கு நேரடியாக விஜயம் மேற் கொண்டு, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
யாழ்ப்பாணத்துக்கு அப்பாலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இத்திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கலச் சேமிப்பு ஆகியவற்றுடன், அவசரத் தேவைக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகளையும் உள்ளடக்கியதாக, 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுமை யான செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாண்டின் இறுதிக் குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பங்களிப்பானது, பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணையாத இத்தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை உறுதி செய்யும்.
சூரிய சக்தி, காற்றாலை, டீசல் மற்றும் பேட்டரி சேமிப்பு ஆகியவற்றின் மூலம் 4.3 மெகாவோல்ட்  மின் சாரத்தை உற்பத்தி செய்தல்.  தேசிய மின் இணைப்புடன் தொடர்பில்லாத இத்தீவுப் பகுதிகளுக்குத் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குதல். இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளும், முழுமையான செயல்பாடுகள் 2026 இறுதிக்குள்ளும் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை, நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற் காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ரயில் பாதை சீரமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டதாக சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயம் -இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி இந்திய உயர்ஸ்தானிகர் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
அமெரிக்க டொலர் 5 மில்லியன் இந்திய நிதியுதவி யின் கீழ் புனரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் தற்போதைய நிலவரங்களை நேரில் ஆராய்வதற்காக, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கண் காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
‘தித்வா’ சூறாவளிப் பாதிப்புக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பாரிய மறுசீரமைப்புப் பொதியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக் கும் இந்த பிரதான போக்குவரத்துப் பாதை, கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இப்பாதையிலுள்ள ஐந்து பாலங் களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் மூலம் இலங்கையுடனான உறவு களை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், மீள்வளவாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என இந்திய தூதுவர் தனது உத்தியோகபூர்வபக்கத்தில் பதிவிட்டுள்ளதை காணமுடிந்தது.
2026 யூன் 02, ல்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்திய நிதியுதவி வழங்கும் நிகழ்வி லும் பங்குபற்றி பல்கலைக்கழக மாணவர்களின் நலனிலும் அக்கறை காட்டியும் இருந்தார் கடந்த காலங்களில் போரினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் வடகிழக்கு பகுதிகள் பாதிக்கபட்டன. போர் முடிவுற்று 17, ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழர்களுடைய நிலங்களில் முழுமை யான அபிவிருத்திகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை இவ்வாறான நிலையில் இந்திய அரசினால் சில திட்டங்கள் இலங்கை ஆட்சியாளர்களின் அனுமதி யூடாகவே மேற்கொள்ளப்பட்டுவருவதை பார்க்கலாம். யாழ்ப்பாணத்துக்கு இதுவரை தற்போதைய இந்திய தூதர் சந்தோஷ் ஜா மூன்றுதடவை சென்று பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பது ஓரளவேனும் அப்பகுதி மக்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.
அதேபோல் தற்போதைய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மட்டக்களப்புக்கு ஒரு முறை உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், 2024 ஆம் ஆண்டு மே 01 முதல் மே 04 வரை அவர் மேற்கொண்ட கிழக்கு மாகாண சுற்றுப்பயணத்தின் போது மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளாக இந்தியா வழங்கிய நிதியுதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப் பட்டு வந்த புதிய சத்திரசிகிச்சைப் பிரிவின் முன்னேற்றத்தை பார்வையிட்டார். அதனை விட இந்திய அரசாங்கத்தால் வீடற்ற குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பூர்த்தி செய்யப்படாமல் உள்ள மாதிரி கிராம வீட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அபிவிருத்திக்காக இந்திய அரசு ஈழத்தமிழர்களுக் காக பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டா லும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் நெகிழ்வுத்தன்மையை கடைப் பிடிப்பதையே காணமுடிகிறது.

இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தல்

தற்போதைய அரசாங்கம் மத்திய கிழக்கு போரை காரணமாகக் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது எனக் கூறி இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை கூட்டியது. ஆனால் இன்றைய நிலரவரப்படி போருக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.

சர்வதேசத்தில் எண்ணெய் விலை கூடும்போது இலங்கையிலும் விலை கூடும் என்றால், உலகில் எண்ணெய் விலை குறையும்போது இலங்கையிலும் குறைய வேண்டும். ஆகவே அரசாங்கம் அதிகரித்ததைப் போலவே, உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டில் எண்ணெய் மீது அதிக வரி விகிதம் விதிக்கப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக்கு வரும்வேளை இந்த வரிகளை நீக்கி விட்டு, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலைக்கே எரிபொருட்களைத் தருவோம் என்று பெரிதாக பிரஸ்தாபித்தனர்.

இருந்த போதிலும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலையிலோ அல்லது உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் மட்டத்திற்கு ஏற்ப ஏனும், குறைந்த விலையில் எரிபொருட்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவே இன்றுவரையில் இருந்து வருகின்றனர். இதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தில் காணப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய் அரசியலையே செய்து வருகின்றது. உருட்களை செய்து வருகின்றது. மக்களை இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது போலும். நாட்டின் 220 இலட்சம் மக்களையும் முட்டாள்கள் என கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்தின் வழிக்கு ஆடுவார்கள் என்ற கீழ்தரமான கருத்துடன் இந்த அரசாங்கம் தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

ஈரானும் அமெரிக்காவும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த தருணத்தில், விலைகளை கூட்டியதற்கு பயன்படுத்திய சுலோகத்தை அவ்வாறே பிரயோகித்தி, நாட்டில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டும். அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய்கள், உருட்களை மட்டுமே செய்து வரக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பொய்யால் மக்களை ஏமாற்றிவிட்டது. இதனை நன்றாகவே செய்துள்ளது. இதனாலேயே மக்கள் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையிழந்துபோயுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் விற்பனை பொருள் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளை பணத்திற்கு வாங்க முடியாது.

பணத்துக்கு விலை போக மாட்டனர். மக்கள் துயருக்காக எப்போதுமே குரல் கொடுப்போம். ஆகவே உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்பதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக ‘செம்மணி’!

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித எச்சங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “செம்மணி மனிதப் புதைகுழியில் மிகக் குறுகிய நாள்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியான மனிதப் பேரவலம் அரங்கேறிய ஒரேயொரு புதைகுழியாகவும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியமாகவும் இந்தச் செம்மணித் தளம் இன்று மாறியுள்ளது.

இங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், உலகத்தினுடைய மனச்சாட்சியையே உலுக்கிக் கிளறிவிடுகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களமாக இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி அமையப் போகிறது.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தங்களின் மேலான கரிசனையைச் செலுத்த வேண்டும்.

எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து, இன்றுவரை ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஓர் அணையாத சுடராகவும், தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு பிரதான திறவுகோலாகவும் இந்தச் செம்மணி அமைய வேண்டும் என்பதே எங்களின் பலத்த எதிர்பார்ப்பாகும் என்றார்.

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!

மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட தேசிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மந்தாரினா ஹோட்டலின நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதார, சமூக சவால்கள் குறித்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் களப்பணி ஆய்வுகளின் விரிவான அறிக்கை மற்றும் அதற்கான பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் பிரதான அம்சமாக, மலையகத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் சார்பில் விரிவான களப்பணி ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களான சட்டத்தரணி பாலசந்திரன் கௌதமன் மற்றும் எஸ். பிரபாகரன் ஆகியோரால் விசேட விளக்கக்கட்சியொன்று முன்வைக்கப்பட்டது. கல்வி, தொழிலாளர் உரிமைகள், வறுமை ஒழிப்பு, மொழி உரிமைகள் மற்றும் அரச சேவைகள் ஆகிய ஐந்து பிரதான துறைகளை உள்ளடக்கி அவர்களால் இதன் போது பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் இதன் போது நிலம் மற்றும் ‘வீட்டுரிமை – மூலோபாயக் கொள்கை தலையீடுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள்’ மற்றும் ‘அரசு சேவைகள், சுகாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கான அணுகலை வலுப்படுத்துவதற்கான கொள்கை தலையீடுகள்’ ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஆணையாளர்களான நிமால் ஜி. புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி ஜெஹான் குணதிலக்க ஆகியோரின் நெறியாழ்கையில் இடம்பெற்றது.

இதேபோன்று ‘தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை மட்ட தலையீடுகள்’ மற்றும் ‘பெருந்தோட்ட சமூகங்களில் தரமான மற்றும் சமத்துவமான கல்வியை மேம்படுத்தல்: கொள்கை முன்னுரிமைகள் மற்றும் தலையீடுகள்’ என்ற தலைப்புக்களிலான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான பேராசிரியர் பர்சானா ஹனீபா மற்றும் பேராசிரியர் டி. தனராஜ் நெறியாள்கையில் நடைபெற்றது.

கலந்துரையாடல்களின் போது அதில் கலந்து கொண்ட ஏனைய கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.