Home Blog Page 10

கடற்கரையின் 75% பகுதியை வெளிநாட்டு அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சி!

எமது கடற்கரையின் 75 சதவீதமான பகுதியை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படுவது பற்றி கவலை வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மீளமுடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கனியமணல் அகழ்வு மனிதர்களுக்கும் சூழற்தொகுதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராகவும், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து நேற்று புதன்கிழமை (17) காலை 8.30 மணியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போராட்டத்தில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் ‘பிள்ளைகளின் சொத்துக்களை நாசமாக்காதீர்கள்’, ‘இலங்கை வர்த்தக சம்மேளனமா அல்லது கள்ளர்களின் கூடாரமா?’, ‘எமது பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வது என்ன? கடற்கரைகள் இல்லாத தீவா?’, ‘சுனாமி மற்றும் தித்வா அனர்த்தத்திலிருந்து நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லையா?’, ‘எமது கரையோரம், எமது எதிர்காலம்’, ‘கனியமணல் அகழ்வினால் ஏற்படும் பாதிப்பை மீளவும் சீர்செய்யமுடியாது’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அதேவேளை அங்கு கருத்துரைத்த செயற்பாட்டாளர்கள், ‘எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படுவது தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. எமது கடற்கரைகள் பொதுப்பயன்பாட்டுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ அன்றி, அகழ்வாராய்ச்சி நிறுவனங்கள் எமது வளங்களை சூறையாடுவதற்கும், மாசுபடுத்துவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினர்.

அத்தோடு மீளமுடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும், எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை எமக்கு உண்டு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்டுத்தியுள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒரு பிரதியில் கையெழுத்திட்டார் என்ற செய்தி குறித்து கேட்கப்பட்டபோது, ​​”கையெழுத்திட்டதை உறுதிப்படுத்த முடியும்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தினார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்!

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கடந்த ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை இவ்விஜயத்தின்போது நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர், சகல சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தியதுடன், அண்மையகாலங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழியையும் பார்வையிட்டார்.

அத்தோடு பொருளாதார நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்நெருக்கடியைக் கையாள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பவற்றின் விளைவாக மனித உரிமைகள் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்களையும் உயர்ஸ்தானிகர் அடிக்கோடிட்டுக் காண்பித்தார்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக் குழுக்களான சிறுவர் உரிமைகள் தொடர்பான உபகுழு, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான உபகுழு, விசேட தேவையுடையோர் உரிமைகள் தொடர்பான உபகுழு என்பவற்றுக்கான அறிக்கைகள் தாமதமாகவே சமர்ப்பிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி உலகளாவிய காலாந்தர மீளாய்வின்போது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அரசாங்கம் தாமாகவே ஒரு இடைக்கால அறிக்கையைத் தயாரித்தது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உபகுழு, வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான குழு ஆகியவற்றின் மீளாய்வுக் கூட்டங்களில் இலங்கையிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கலந்துகொண்டனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி

அம்பாறை – சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று (17) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலத்தில் குறித்த காணியில் விடுதலைப் புலிகள் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக அம்பாறை விசேட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த அகழ்வு பணி நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை நீதவான், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அகழ்வுப் பணி இடம்பெற்றது.

எனினும் குறித்த பகுதியில் எந்தவொரு தடயப் பொருளும் மீட்கப்படாமையால் அகழ்வுப் பணிகளை நிறுத்திவிட்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

தமிழரசு கட்சியின் நிர்வாக தெரிவுகள் யாப்புக்கு முரணானது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு, யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டி யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கான வலுவான காரணங்களையும் நிர்வாக தெரிவுக் கூட்டத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களையும் சுட்டிக்காட்டி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் முக்கிய விடயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கேசன் துறைத் தொகுதிக்கான நிர்வாக தெரிவு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் ஏற்கனவே இயங்கு நிலையில் இருக்கும் தொகுதி நிர்வாகத்திற்கும் தெரியாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினரை அழைத்து புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றமை யாப்பு விதிமுறைகளுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தொகுதிகிளை நிர்வாகிகள் கட்சியில் முறையிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்கு வட்டுக்கோட்டைத் தொகுதியில் இடம்பெற்ற வெற்றிடம் நிரப்புதல் எனும் பெயரில் புதிதாக நிர்வாக தெரிவுக்கு மாவட்ட தலைவர் செயலாளருக்கு அறியப்படுத்தாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களை இணைத்து தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கந்தசாமி பிருந்தாபன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் யாழ். மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இன்றி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தலைமை தாங்கி நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐனநாயக கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களை கேளாது அராஜகமான முறையில் கூட்டங்களை தலைமை தாங்கி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நடாத்தியதாகவும் அவர் விமர்சித்தார்.

தலைமை பீடத்தில் இருந்து தெரிவு செய்தால் மறு தெரிவு இருக்க கூடாது என மிரட்டி கூட்டத்தை தலைமை தாங்கிய பதில் பொது செயலாளரால் எச்சரிக்கையாக கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்யாது தவறவிட்டதாக குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரிதாரியான சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து கருத்துக்களும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன”.

“அசாத் மௌலானா தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது” என்று அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டு சஹ்ரான் உள்ளிட்ட குழு குறித்து முறைப்பாடுகள் மற்றும் உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அப்போது காவல்துறை உயர் பணியில் ஷானி அபேசேகர, மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் இருந்தனர்.

“இதன்படி அவரை கைது செய்திருந்தால் இந்த கொடிய தாக்குதலை தடுத்திருக்கலாம். இங்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? ரணில் விக்ரமசிங்கவா, கோட்டாபயவா? அல்லது சுரேஷ் சலேவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுணதீவு சம்பவம் குறித்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்வாங்கப்பட்டனர். இவை அனைத்தும் உண்மையை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்டவை.

இது குறித்து கூட சரியான விசாரணையை முன்னெடுத்திருந்தால் சஹ்ரானை கைது செய்திருக்கலாம் என்றும் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய விசாரணைகளிலும் சஹ்ரான் குழுவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த விசாரணைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை நாளை…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுத் தொடர்பில், எதிர்மனுதாரர்களிடமிருந்து தமக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (17) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்காக நாளை (18) அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம்செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடுசெய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026இன்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும், தண்ணிமுறிப்புக் கிராமமும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் ஏ.சி.பாம் கிராமமும் இதுவரைமில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்த கிராமங்கள் தமிழ்மக்களின் பூர்வீக கிராமங்களாகும். கடந்தகாலத்தில் இக்கிராமங்களில் எமது தமிழ் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள்.

அங்கு அந்த மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போதும் காணப்படுகின்றன.

எனவே அந்த மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பதிலளிக்கையில்,

நாம் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனினும் அந்தக் கிராமங்களில் எவரும் மீள்குடியேறுவதற்குத் தயாராக இல்லை. அங்கு மீள்குடியேறுவதற்கு தமது பெயர்விபரங்களைத் தருவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்துளம் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தயாராக உள்ளவர்களின் பெயர்விபரங்களை தாங்களாவது பெற்றுத்தருவீர்களெனில் அவர்களை மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களிடம் யாரும் பெயர்விபரங்களைத் தரவில்லை எனக் கூறவேண்டாம். இதற்கு முன்பு இருந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடம் அந்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர்.

அதேபோல் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றம்செய்யுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மீள்குடியேறத் தயாராக உள்ள மக்களின் பெயர்விபரங்களும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.

எனவே அந்துமக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தினார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் வலியுறுத்தியதையடுத்து, இந்த தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் மீள்குடியேற்றம்தொடர்பாக விசேட கூட்டமொன்றை ஒழுங்குசெய்யுமாறு இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் உத்தரவிட்டதுடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள ஏ.சி.பாம் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கவனஞ்செலுத்தவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

வடமராட்சி கடலில் காணாமல் போன மீனவரின் இரு பிள்ளைகளின் கல்விச் செலவை முன்னணி பொறுப்பேற்பு!

Unknown 1 வடமராட்சி கடலில் காணாமல் போன மீனவரின் இரு பிள்ளைகளின் கல்விச் செலவை முன்னணி பொறுப்பேற்பு!

வடமராட்சி கடலில் அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள பருத்தித்துறை – முனை பகுதியை சேர்ந்த சுமியோம்பிள்ளை சுஜிக்குமாரின் இரு பிள்ளைலகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது.

பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடந்த மே மாதம் 27 ஆம் திகதி இரவு இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.

பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை.

இந்நிலையில் அவர்களில் ஒருவரான முனையை சேர்ந்த சுமியோம்பிள்ளை – சுஜிக்குமாரின் இரண்டு பிள்ளைகளான க.பொ.த. சாதரண தரம் மற்றும் நான்காம் ஆண்டு கல்வி கற்றுவரும் இரு மாணவர்களும் கல்வியை தொடரும் வரை முழுமையான கல்வி செலவினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பேற்றுள்ளது.

பருத்தித்துறை கோரியடி பகுதியில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று , சான்று பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.