சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்யாது தவறவிட்டதாக குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரிதாரியான சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து கருத்துக்களும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் அதிகாரபூர்வ விசாரணை ஆவணங்களின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன”.

“அசாத் மௌலானா தொடர்பான விடயங்களும் அந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சஹ்ரான் உள்ளிட்ட குழுவை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு இருந்தும் அது தவறவிடப்பட்டது” என்று அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டு சஹ்ரான் உள்ளிட்ட குழு குறித்து முறைப்பாடுகள் மற்றும் உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அப்போது காவல்துறை உயர் பணியில் ஷானி அபேசேகர, மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் இருந்தனர்.

“இதன்படி அவரை கைது செய்திருந்தால் இந்த கொடிய தாக்குதலை தடுத்திருக்கலாம். இங்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? ரணில் விக்ரமசிங்கவா, கோட்டாபயவா? அல்லது சுரேஷ் சலேவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுணதீவு சம்பவம் குறித்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்வாங்கப்பட்டனர். இவை அனைத்தும் உண்மையை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்டவை.

இது குறித்து கூட சரியான விசாரணையை முன்னெடுத்திருந்தால் சஹ்ரானை கைது செய்திருக்கலாம் என்றும் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய விசாரணைகளிலும் சஹ்ரான் குழுவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த விசாரணைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.