கோட்டாபயவின் மனு மீதான விசாரணை நாளை…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுத் தொடர்பில், எதிர்மனுதாரர்களிடமிருந்து தமக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (17) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்காக நாளை (18) அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.