Home Blog Page 11

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க யோஷித ராஜபக்ஷ இன்று (17) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (17) புதன்கிழமை  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்   சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணை  பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின்  முன்னாள் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். மேலும், 3 ஆம் சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதுக்கும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழில். காணியற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு – இளங்குமரன் எம்.பி

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது , அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மீள் குடியேற்ற அமைச்சசினால் 10இலட்சமாக இருந்த வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் 15 லட்சமாக அதிகரித்து பின்னர் மீளவும் தற்போது 5 இலட்சம் அதிகரிக்கப்பட்டு 20 இலட்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது 125 வீடுகளுக்கான காசோலைகள் கையளிக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு தேவையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளோம்.

காணி இல்லாதவர்களுக்கு பொறிமுறை ஒன்றின் ஊடாக அவர்களுக்கும் வீட்டு திட்டத்தை வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அமைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடங்களின் அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

அத்துடன் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுகிறது, அதற்குரிய பொறிமுறையை ஏற்படுத்தி அதனை நிவர்த்தி  செய்வோம்,

தற்போது வழங்கப்படவுள்ள  வீட்டுத் திட்டத்துக்கான காசோலையை மக்கள் பெற்று வீட்டினை துரிதமாக நிர்மாணிக்க வேண்டும். அதற்கு அரச உத்தியோத்தர்கள் பிரதேச செயலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் கைது

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இதன் பின்னணியில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில்  ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)’  நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையின் 300க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த மே 4 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இலங்கை இராணுவத்துக்கு இலவச இராணுவப் பொருட்களை வழங்கிய இந்தியா!

அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு இணங்க, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு இருப்புகளிலிருந்து 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்து, அதனை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது.

இராணுவத்திடம் காணப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசரத் தேவையை ஒரே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய இந்திய அரசு உடன்பட்டிருந்தது. இதற்கமைய, ‘ஐ.என்.எஸ் சாரதா’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் மூலம் இப்பொருட்கள் விசேடமாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுக் கையளிக்கப்பட்டன.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிர் செவ்வாய்கிழமை (16) நடைபெற்ற உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இராணுவத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இராணுவப் பொருட்கள், இந்தியாவின் அயல் நாட்டிற்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்தியப் பிரதமரின் மகாசாகர் – பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்புறவையும் தடையற்ற கூட்டுச் செயல்பாட்டையும் மீள உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

சுரேஷ் சலே சார்பான முறைப்பாடு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்வு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடம் குறித்து விசேட பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சிறைக்கூடத்திற்குள் முறையான காற்றோட்டம் இல்லாதது உள்ளிட்ட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்கு அருகில் இருந்த ஏனைய கைதிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலும் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிற்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் மாத்திரம் இடம்பெறும் அநீதி மீண்டுமொரு முறை அம்பலம்!

இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை மேற்கொண்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

யுத்தக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் கட்டாயமாக்கப்பட்டு வருவது, அம்மக்களுக்கு எதிரான ஒரு பாகுபாடு எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

கிராம அலுவலர்களிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குடும்ப அட்டை கட்டாயமாகக் கேட்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐபென் (IBen) நிறுவனம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

“அரசின் உதவித்திட்டங்கள், சமுர்த்தி, வீட்டுத் திட்டங்கள் மற்றும் கிராம அலுவலர் சான்றிதழ்களைப் பெற குடும்ப அட்டை அவசியம். தேசிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போலவே இதையும் கொண்டு செல்ல வேண்டும்.

பிறப்பு, இறப்பு தகவல்களைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்பு மன்னார் நகரைச் சூழவுள்ள பகுதிகளுக்கு மட்டுமே கட்டாயமாக இருந்த இந்த நடைமுறை, இந்த ஆண்டு முதல் மாவட்டம் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த குடும்ப அட்டை யாருடைய உத்தரவின் பேரில், எந்தச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகிறது எனத் தேடி, 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

“குடும்ப அட்டை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” எனப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பதிலளித்துள்ளது.

அத்துடன் எந்தவொரு அரச சேவைக்கும் இத்தகைய ஆவணம் கட்டாயமில்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்கள் இது கட்டாயமில்லை. நிர்வாக வசதிக்கான ஆவணம் மட்டுமே எனக் கூறுகின்றன.

ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது பொது நிர்வாக அமைச்சின் திட்டம் அல்ல, மாவட்ட மட்டத்திலான முடிவு என முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் இந்த அட்டைகளைப் புதுப்பிப்பதற்கோ அல்லது அச்சிடுவதற்கோ ஒரு குடும்பத்திடம் இருந்து 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டக் கணக்கின் அடிப்படையில் மட்டும், இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 23 இலட்சத்து 72 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

அமைச்சின் முறையான அனுமதி அல்லது சட்ட ரீதியான பின்னணி இல்லாமல் மாவட்ட மட்டங்களில் வசூலிக்கப்படும் இந்தப் பணம் எங்குச் செல்கிறது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் மூலம், குடும்ப அட்டை என்பது முறையான சட்ட ரீதியான அதிகாரமின்றி, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்ட வகையில் தன்னிச்சையாகச் செயற்படுத்தப்படும் ஒரு நடைமுறை என்பது உறுதியாகியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தை முடக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முயற்சி!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கம் மேலும் கூறுகையில்,

அரசியல் எதிர்ப்புக் கொள்கை கொண்டுள்ளவர்களை முடக்குவதற்கு பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது  கவலையளிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.