Home Blog Page 12

எல்-நினோ நிலைமை குறித்து நலிந்த விளக்கம்

எல்-நினோ காலநிலை நிலைமை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்கு முகம்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் என்ற ரீதியில், ஜனாதிபதியின் தலைமையில் இது தொடர்பாக பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் மட்டத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் எல்-நினோ நிலைமை குறித்து சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளதாகவும், அது குறித்து அவதானம் செலுத்தி, அடுத்த வருடத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்  “அரசாங்கம் என்ற ரீதியில், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, குறிப்பாக விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி மற்றும் நமது நீர் வளங்கள் போன்ற பல துறைகள் குறித்து ஏற்கனவே அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூலை – ஓகஸ்ட் காலப்பகுதியிலும், மறுபுறம் அடுத்த வருடத்திலும் ஏற்படக்கூடிய இத்தகைய சூழ்நிலைகள் குறித்து அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் ஊடாக முழுமையாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடி திட்டங்களை தயாரித்து வருகின்றனர்.

குறிப்பாக, அடுத்த போக விவசாயச் செய்கையின் போது இந்த நிலைமைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தே ஆராயப்படுகிறது. ஏனெனில், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட இது சார்ந்த குழுக்கள் இந்த சாத்தியமான நிலைமை குறித்து சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன. இவற்றையும் கருத்திற்கொண்டே எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதன் பாதிப்பைக் குறைத்து, தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதி கோரி,  கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடித் தீர்வு காண கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் தற்போதைய அறுவடைக்கால சவால்கள், நெல் கொள்வனவுப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் முழுநேர விவசாயியுமான சந்துருலிங்கம் கிருஷ்ணசந்திரன் அவர்கள் இன்று (16) செவ்வாய்க்கிழமை விசேட கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அரசாங்கத்தின் சாதகமான நடவடிக்கைகள் சிலவற்றை வரவேற்ற அதேவேளை, உள்ளூர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரத்தியேக சவால்களுக்கு அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசு விவசாயிகளுக்குப் பெரும் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியுள்ளது.

முன்னர் ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபாய் உர மானியத்தை, இந்த அரசாங்கம் இரண்டு மடங்காக அதிகரித்து ஹெக்டயருக்கு 30,000 ரூபாயாக வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் யுத்த சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் நிறுவனங்கள் உர விலையை உயர்த்த முயன்றபோதும், அதனை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 10,100 ரூபாய் என்ற நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கியதை சிவில் சமூக செயற்பாட்டாளர் பாராட்டினார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுநீர்ப்பாசனக் குளங்களின் கீழ் பரவலாக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 125 முதல் 135 ரூபாய் வரை செலவாகிறது.

தற்போது சந்தையில் ஈரநெல் மூடை ஒன்று 4,500 முதல் 4,700 ரூபாய் வரையிலும், காய்ந்த நெல் 6,000 ரூபாய் வரையிலும் கொள்வனவு செய்யப்படுகிறது.

அரசாங்கம் அறிவித்துள்ள நெல்லுக்கான நிர்ணய விலையை இடைத்தரகர்களின் சுரண்டல்களுக்கு இடமளிக்காது முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த ஜூன் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ விலை நிர்ணயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நெல் அறுவடை முழுமையாக நிறைவடைந்த பின்னரே அரசாங்கம் நெல் நிர்ணய விலையை அறிவிக்கிறது. இதனால் மட்டக்களப்பு விவசாயிகளுக்குப் பலன் கிடைப்பதில்லை. மாறாக, அதன் பின்னரே அறுவடையைத் தொடங்கும் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்ட விவசாயிகளுக்கே இதன் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பெரும் சொத்தாகக் கருதப்படும் ‘தேவாபுரம் அரிசி ஆலை’ 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் செயலிழந்தது. இன்றுவரை எந்தவொரு அரசாங்கமும் இதனைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு தனது ஆட்சிக்காலத்திற்குள் இந்த ஆலையை மீள இயங்கச் செய்வதன் மூலம், மாவட்டத்தின் நெல் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

நெல் கொள்வனவுச் சபை கடந்த காலங்களில் ஒரு நெற்காணி ஆவணப் படிவத்திற்கு (PLR) 5,000 கிலோ நெல்லைக் கொள்வனவு செய்தது. ஆனால், கடந்த பெரும் போகத்தின் போது அது 2,500 கிலோவாக (37 மூடைகள்) பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வீடுகளில் முடக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்போதைய இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் அல்லது ஏனைய அமைப்புகள் (ஏற்கட்சிகள்) சுயலாப அரசியலுக்காக கவடா நாடகங்களை அரங்கேற்ற முயன்று வருகின்றன. அரசாங்கம் இதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது.

விவசாயிகளின் நெல்லுக்கு முறையான நியாயமான விலையையும், உரிய மானியங்களையும் தங்குதடையின்றி வழங்கி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பாதுகாக்க வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளர் சந்துருலிங்கம் கிருஷ்ணசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிட்வா சூறாவளிக்கு பின்னரும் நீடிக்கும் மலையக மக்களின் அவலம்: அரசாங்கத்தின் உத்தரவாதம் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பகுதிகளை கடுமையாகப் பாதித்த டிட்வா சூறாவளி தாக்கம் இடம்பெற்று ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக மீளாத நிலை தொடர்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து, இன்னும் தற்காலிக முகாம்கள், வாடகை வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள், நிலைமை இன்னும் சீரடையவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, இந்த அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்களும் இடம்பெற்றுள் ளன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள நிலையில், அரசாங்கம் தனது திட்டங்களை யும் எதிர்கால நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளின் படி, டிட்வா சூறாவளி தாக்கத்திற்குப் பின்னரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது நிரந்தர குடி யிருப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். தற்போது நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மற்றும் பாதுகாப்பு முகாம்களில் 465 குடும்பங்களைச் சேர்ந்த 1,337 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் இயங்கும் இரண்டு மத்திய நிலையங்களில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் தங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மத்திய நிலையத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் வசித்து வருகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு மத்திய நிலையங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இன்னும் தற்காலிக வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது பதுளை மாவட்டமாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் மட்டும் 1,003 பேர் தங்கியிருப்பது அனர்த்தத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. பல ஆயிரக் கணக்கான மக்கள் வாடகை வீடுகள், உறவினர்களின் வீடுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரு வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த அனர்த்தத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்படி, டிட்வா சூறாவளி பாதிப்புகளுக்குப் பின்னான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சூறாவளி தாக்கி ஏழு மாதங்கள் கடந்திருந்தாலும் 35,000-க்கும் அதிகமான மக்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மலையகப் பகுதிகளில் ஆபத்தான நிலச்சரிவு அபாயம் கொண்ட இடங்களில் வாழும் மக்களுக்கு மாற் றுக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்னும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சாடினார். பல பகுதிகளில் நிலச்சரிவால் வீதிகளில் தேங்கியுள்ள மண்குவியல்கள் இன்னும் அகற்றப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சேத மடைந்த பாலங்களுக்கு பதிலாக அமைக்கப்பட்ட தற்காலிக மணல் மூடைப் பாலங்கள் கூட பின்னர் பெய்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்ச தனது உரையில், டிட்வா சூறாவளி பாதிப்புகளுக்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவியையும், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடனுதவியையும் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வளவு பெரியளவிலான நிதியுதவி கிடைத் திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க் கையில் கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் விமர்சித்தார். அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நட்டஈட்டுத் தொகைகளையே முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக மெதுவாக நகர்வதாகவும் இதன் விளைவாக பாதிக் கப்பட்ட மலையக மக்கள்  இன்னும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது உரையில் மலையக மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் குறித்து முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக டிட்வா சூறாவளி தாக்குவதற்கு முன்னரே மலையகத்தில் நடை முறையில் இருந்த இந்திய வீட்டுத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக அவர் சாடினார்.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தலா 4,500 வீடுகள் வீதம் மொத்தம் 9,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை ஒரு வீடு கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். அத்துடன், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1,300 வீடுகளை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப் பட்டிருந்த போதும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் காரணங்களால் பயனாளிகள் மாற்றப்பட்டு திட்டம் கைவிடப் பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். “இது முந்தைய அமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம்” என்ற காரணத்தி னால் திட்டம் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதாக வும் அவர் கூறினார்.
ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 550 சதுர அடி பரப்பளவுள்ள வீடொன்றின் ஆரம்ப மதிப்பீடு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட கலந்து ரையாடல்களின் காரணமாக அந்த மதிப்பீடு 28 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு செலவு அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டினார். இதனால் மலையக மக்க ளின் நீண்டகால வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்பு இழக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பதில்: புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபாய் வீடு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அரசாங்கம் மலையக மக்களுக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிலான வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்ற திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை 2026 ஏப்ரல் 6ஆம் திகதியன்று எடுத்த விசேட கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 650 சதுர அடி பரப்பளவுள்ள புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன், தலா 10 பேர்ச் காணியும் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
லயன் குடியிருப்பாளர்களுக்கும் முழுமையான நட்டஈடு
மலையகத்தின் பாரம்பரிய லயன் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வீட்டு உரிமையோ காணி உரிமையோ இல்லாத நிலை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சொந்தக் காணி இல்லாத காரணத்தால் அவர்கள் நட்டஈடுகளை இழக்க நேரிடாது என அமைச்சர் உறுதியளித்தார். காணி உரிமை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்குச் சமமாக, லயன் குடியிருப்பாளர்களுக்கும் 50 இலட்சம் ரூபாய் பெறும் உரிமை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது மலையக மக்களின் வரலாற்று குறைகளை நிவர்த்தி செய்யும் முக்கியமான கொள்கை மாற்றமாகக் கருதப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல லயன் குடியிருப்புகள் 150 முதல் 200 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டடங்களாகும். பல கட்டடங்கள் முழுமையாக இடிந்து விழாத போதிலும் வாழத் தகுதியற்ற நிலையில் இருப்பதாக நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, அனர்த்த முகா மைத்துவ அதிகாரிகளால் வாழத் தகுதியற்றது என சான்றளிக்கும் குடியிருப்புகளுக்கு பழுது பார்க்கும் திட்டத்திற்கு பதிலாக புதிய வீடுகள் கட்டுவதற்காக நேரடியாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். இது பல தலைமுறைகளாக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக சேதமடையாத வீடுகளுக்கும் நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு நிதியம் மற்றும் பிரதேச செயலாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நிதி உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை மீளமைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் சமந்த வித்யாரத்ன தனது உரையில் வீடமைப்பை மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் முக்கியமாக எடுத்துரைத்தார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், பெருந்தோட்டத் துறையை கவனமாக நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார். இத்துறையின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துடனும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடனும் நேரடியாகப் பிணைந்துள்ளது என அவர் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன்படி, தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 400 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் அரசாங்கம் தினசரி 200 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்குகிறது. மீதமுள்ள 200 ரூபாயை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை ஓரளவு குறைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
காணி உரிமைகளை வழங்கும் புதிய கொள்கை
மலையக மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் முக்கிய மானது காணி உரிமை தொடர்பானதாகும். முன்னர் நெடுங் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை 10 பேர்ச் வரை உயர்த்தியுள்ளது. மேலும், காணி உரிமப் பத்திரங்களை விரைவாக வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இது மலையக மக்களின் சமூக மற்றும் பொரு ளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா கக் கருதப்படுகிறது. இதேவேளை, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அழுத்தங்கள் குறித்து அண்மையில் சர்வதேச மனித உரிமை அமைப் பான சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விமர்சனங்களுக்கும் விடயத்து க்கு பொறுப்பான அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலளித் துள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டத் துறையைப் பற்றிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் சில விமர்சனங்கள் முழுமையாக துல்லியமானவை அல்ல என அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான உண்மைத் தகவல்களை எதிர்காலத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். டிட்வா சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள் ஒரு இயற்கை அனர்த்தத்தின் விளைவாக மட்டுமல்லாமல், மலையக மக்களின் பல தசாப்த கால சமூக மற்றும் பொரு ளாதார பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.
வீடமைப்பு, காணி உரிமை, அடிப்படை உட்கட்ட மைப்பு, பாதுகாப்பான குடியிருப்புகள், தொழிலாளர் நலன் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இன்னும் பல சவால்கள் நிலவுகின்றன.
அரசாங்கம் அறிவித்துள்ள 50 இலட்சம் ரூபாய் வீடமைப்பு திட்டம் மற்றும் காணி வழங்கும் திட்டங்கள் நடைமுறையில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டால், அது மலையக மக்களின் வாழ்க் கையில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அறிவிப்புகள் மட்டுமே போதுமானதல்ல. அவை காலதாமத மின்றி, வெளிப்படையாக, அரசியல் தலையீடுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
டி.ட்வா  சூறாவளி மலையக மக்களின் வாழ்க்கையில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
பல குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றன. பலர் நிரந்தர வீடுகளை இழந்துள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றனர். ஒருபுறம் எதிர்க்கட்சிகள் மீட்பு நடவடிக்கைகளின் மந்த நிலையை சுட்டிக்காட்டுகின்றன. மறுபுறம் அரசாங்கம் முன்னெப் போதும் இல்லாத அளவிலான வீடமைப்பு, காணி உரிமை மற்றும் நட்டஈடு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த விவாதங்களின் மத்தியில்  பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் தங்கியுள்ளது. அந்த மக்கள் பாதுகாப்பான வீடுகளிலும் நிலையான வாழ்வாதாரத்துடனும் மீண்டும் வாழத் தொடங்கும் வரை டிட்வா சூறாவளியின் கதை முடிவடையாது.

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” – இஸ்ரேல் தூதர் வெளிப்படை

நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் திகதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில் இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக உள்ளது. இதற்கு முன்னதாக இருதரப்பு இணையவழியில் விர்ச்சுவலாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானை நம்புவதில்லை என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் ஏற்கெனவே எனது பல்வேறு நேர்காணலில் இதை சொல்லி உள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை.

பாகிஸ்தானின் அணுகுமுறை, யூதர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் என அவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு இஸ்ரேல் அப்போது எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், ருவன் அசார் இந்த கருத்தை இப்போது சொல்லியுள்ளார்.

கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் (16) கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோருக்கு கையளித்திருந்தனர்.

தற்போது அரசாங்கமானது ஒரு கிலோ நெல்லை 120ரூபாகொள்வனவு செய்கின்றது. இது உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை எனவும் 135 ரூபாவுக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி, இருவர் விடுதலை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது.

அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் புங்குடுதீவு மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது 07 பேரைக் குற்றவாளிகளாகக் கண்ட ‘ட்ரயல் அட் பார்’ (Trial-at-Bar) தீர்ப்பாயம், அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணை முடிவில், இருவரை உயர் நீதிமன்றம் விடுவித்ததுடன், ஏனைய ஐவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது.

எனினும், வழக்கு விசாரணைக் காலத்திலேயே மரண தண்டனைக் கைதி ஒருவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

ஏனைய நால்வரின் தண்டனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி அந்நால்வரில் ஒருவர் சிறைக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனால், தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாததால், சிறையில் உள்ள ஏனைய மூவருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் வாசித்துக் காட்டி உறுதிப்படுத்தியது.

அதேநேரம், உயர் நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய இருவரையும் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

சித்திரவதை விவகாரம்: ஐ.நா உபகுழு பிரதிநிதிகள் இலங்கை வருகை

தமது வருகை,  சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது’ என ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தெரிவித்துள்ளார்.

இலங்கையில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், சித்திரவதைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் திங்கட்கிழமை (15) சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

‘நாம் இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் அரசாங்கம் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக தேசிய தடுப்புப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சித்திரவதைகளைத் தடுப்பதை இலக்காகக்கொண்ட பயணத்தில் முக்கிய நகர்வாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது, ‘எமது தற்போதைய விஜயமானது சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு பிரதியமைச்சர்- சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டினார்.

மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை முன்னெடுத்து வரும் தற்போதைய மூலோபாய மாற்றத்தை விளக்கியதுடன், நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கான நாட்டின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்தினார்.

எதிர்கால ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகளாக போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்ளும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க (Simulation) நிகழ்ச்சிகள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை இரு தரப்பினராலும் அடையாளம் காணப்பட்டன. இந்த சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.