Home Blog Page 13

பாதுகாப்பு பிரதியமைச்சர்- சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டினார்.

மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை முன்னெடுத்து வரும் தற்போதைய மூலோபாய மாற்றத்தை விளக்கியதுடன், நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கான நாட்டின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்தினார்.

எதிர்கால ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகளாக போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்ளும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க (Simulation) நிகழ்ச்சிகள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை இரு தரப்பினராலும் அடையாளம் காணப்பட்டன. இந்த சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிடத் திட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகப் பிரதிநிதிகள் இந்த பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த விஜயத்தை மேற்கொள்வதற்கு கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆவது நாள் பணிகள் நேற்று (14) நடைபெற்றன.

இதன்போது மேலும் 7 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 355 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 341 எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– உள்ளிட்டோருக்கு எதிராக தீவிர விசாரணை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விபரங்கள் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (15) சமர்ப்பிக்கப்பட்டன.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண ஆகியோரே இவ்வாறு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் முக்கிய புள்ளிகளாவர்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட குறித்த அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியது.

எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான், இந்த விவகாரத்தில் தனது நீதிமன்றத்தின் ஊடாக அழைப்பாணை அனுப்பத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

மாறாக, நீதிமன்ற அவமதிப்புடன் தொடர்புடைய இந்த விபரங்களை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் நேரில் சென்று கண்காணிக்குமாறு சி.ஐ.டி.யினர் விடுத்த கோரிக்கையையும் நீதவான் பரிசீலித்தார்.

தேசிய மருத்துவமனை அமைந்துள்ள பகுதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வருவதால், அங்குள்ள நீதவானுக்கு இது குறித்து அறிவித்து, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரான சுரேஷ் சலேயின் நிலையை நேரில் சென்று கண்காணிக்குமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை

திறைசேரியின்  மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற  தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

 

காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளைத் தமது மனுவில் முன்வைத்துள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டதன்படி,

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்படவேண்டும்.

மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டத்தின் பின்னர் ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து அக்குழுவினர் ஒப்படைத்தனர்.

மக்களின் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டு: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை

நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தின் 250 எண் கொண்ட நீதிமன்ற அறையில் இருந்த மூன்று நீதிபதிகள், அவர் மீதான மற்ற இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தனர்.

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பிற குற்றச்சாட்டுகள் பலவற்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஹோய்பி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுடன், காணொளி வாயிலாக வழக்கு அமர்வில் இணைந்திருந்தார்.

எல் நினோ பாதிப்புகள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு தகவல்

பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் ‘எல் நினோ’ நிலைமை காரணமாக சுற்றாடல் வெப்பநிலை அதிகரிப்பதன் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த எல் நினோ நிலைமையினால் இலங்கைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவானதாக காணப்படுகிறது என சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

எல்- நினோ தாக்கம் குறித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் தொடர்ந்து சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா–இலங்கை உறவு குறித்து இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  கருத்து

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டாண்மை என்பது பகிரப்பட்ட விழுமியங்கள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நமது மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய  தூதுவர் சந்தோஷ் ஜா  தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்று வரும் மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையின் அடிப்படையில், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வேகமாக மாறிவரும் உலகில் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களை வளர்க்கவும் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது  என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு: தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட  மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மூன்று அவதானிப்புக்களை முன்வைத்துள்ளோம். அவற்றை செயற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமைஇதேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளோம்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசியல் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களை முழுமையாக நிராகரிக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. பொருளாதார பாதிப்புக்கு பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம்.அந்தத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் காணப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை விசேட தீர்மானங்களை வழங்கியுள்ளது.

ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.