உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விபரங்கள் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (15) சமர்ப்பிக்கப்பட்டன.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன, மஹிந்த பத்திரண ஆகியோரே இவ்வாறு சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் முக்கிய புள்ளிகளாவர்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட குறித்த அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியது.
எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான், இந்த விவகாரத்தில் தனது நீதிமன்றத்தின் ஊடாக அழைப்பாணை அனுப்பத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.
மாறாக, நீதிமன்ற அவமதிப்புடன் தொடர்புடைய இந்த விபரங்களை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் நேரில் சென்று கண்காணிக்குமாறு சி.ஐ.டி.யினர் விடுத்த கோரிக்கையையும் நீதவான் பரிசீலித்தார்.
தேசிய மருத்துவமனை அமைந்துள்ள பகுதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வருவதால், அங்குள்ள நீதவானுக்கு இது குறித்து அறிவித்து, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபரான சுரேஷ் சலேயின் நிலையை நேரில் சென்று கண்காணிக்குமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.



