ஈழத் தமிழர் விவகாரத்தை கையாள குழு ஒன்றை நியமிக்குமாறு விஜய்யிடம் கோரிக்கை

ஈழத் தமிழர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தரப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர் விவகாரங்களைக் கையாள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் கருத்தை உள்வாங்கி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாகவும், தமிழர்களுக்கு எதிரான அநீதிக்குரிய சர்வதேச குற்றவியல் விசாரணை குறித்தும் விசேடமாக வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களை வைத்து முரண்பாடின்றி சமூக மட்டத்தில் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான களம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரப்பட்டதுடன் ஈழத் தமிழர்களின் அகதிகள் பிரச்சினை மற்றும் அது தொடர்பான குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.