2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறிய குற்றச்சாட்டுகளுக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான மரண தண்டனை தீர்ப்பை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு வழங்கியது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குத் தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் கருத்துரைத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, புலனாய்வுத் தகவல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை அரச புலனாய்வுச் சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் தாக்குதல் அபாயம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் முப்படையினரை ஒன்றிணைத்துப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிப்பதற்கு ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
“எனக்குப் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்குக் கௌரவ தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றி.
நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை. ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ‘பாதுகாப்புச் செயலாளர்’ என்று தனிப்பட்ட பதவி எதுவும் கிடையாது; இருப்பது ‘பாதுகாப்பு அமைச்சுக்கான செயலாளர்’ பதவியாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்ந்து கருத்துரைக்கையில் “அப்பதவியும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளைப் போன்றதுதான். செயலாளர் ஒருவர் அமைச்சரின் பணிப்புரைகளுக்கு இணங்கவே செயற்பட வேண்டும். அமைச்சர் இல்லாவிட்டால் செயலாளரால் எதையும் தனித்துச் செயற்படுத்த முடியாது.
பாதுகாப்பு அமைச்சு என்பது ஒரு விசித்திரமான அமைச்சு. அதிலுள்ள செயலாளர் பெரும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். அந்த அமைச்சின் கீழ் சுமார் 20 நிறுவனங்கள் உள்ளன, அவற்றுக்குத் தலைவர்கள் உள்ளனர். நிலந்த ஜயவர்தன, நான் பொறுப்பேற்கும் போது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
முக்கியமற்ற புலனாய்வுத் தகவல்களையே கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் என ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டிருந்தார். ‘நீங்கள் புலனாய்வுத் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம், நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்துச் செல்லுங்கள்’ என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னிடம் கூறினார். நானும் அதையே செய்தேன்” என்று தெரிவித்தார்.



