யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகப் பிரதிநிதிகள் இந்த பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த விஜயத்தை மேற்கொள்வதற்கு கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆவது நாள் பணிகள் நேற்று (14) நடைபெற்றன.
இதன்போது மேலும் 7 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 355 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 341 எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



