ரவி செனவிரத்னவுக்கும் சானி அபேசேகரவுக்குமே தண்டனை வழங்கப்பட வேண்டும் :உதய கம்மன்பில

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அந்த தாக்குதலையும், உயிரிழப்புக்களையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தீர்ப்பளித்து மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் இருவருக்கும் தண்டப்பணமும் விதித்துள்ளது.

மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இவ்விருவரும் உயர்நீதிமன்றத்தில் நேரடியான மேன்முறையீடு செய்யலாம். அதற்கான சட்ட இயலுமை காணப்படுகிறது.

பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தவுடன் அப்போதைய காவல்துறைமா அதிபரும், பாதுகாப்புச் செயலாளரும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சானி அபேசேகர ஆகிய இருவருமே ஆச்சரியமடைய வேண்டும் என்று உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

வனாத்தவில்லு வெடிப்பொருள் மீட்பு மற்றும் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சஹ்ரான் பாரதூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு வாக்குமூலமளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் போதுமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தும் தாக்குதல்களை தடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர்களாக பதவி வகித்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

ஆகவே பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் விட இவ்விருவரும் பொறுப்பில் இருந்து மிக மோசமாக விலகியுள்ளார்கள் என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.