இலங்கை இராணுவத்துக்கு இலவச இராணுவப் பொருட்களை வழங்கிய இந்தியா!

அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு இணங்க, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு இருப்புகளிலிருந்து 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்து, அதனை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது.

இராணுவத்திடம் காணப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசரத் தேவையை ஒரே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய இந்திய அரசு உடன்பட்டிருந்தது. இதற்கமைய, ‘ஐ.என்.எஸ் சாரதா’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் மூலம் இப்பொருட்கள் விசேடமாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுக் கையளிக்கப்பட்டன.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிர் செவ்வாய்கிழமை (16) நடைபெற்ற உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இராணுவத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இராணுவப் பொருட்கள், இந்தியாவின் அயல் நாட்டிற்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்தியப் பிரதமரின் மகாசாகர் – பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்புறவையும் தடையற்ற கூட்டுச் செயல்பாட்டையும் மீள உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.