தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில்  ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)’  நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையின் 300க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த மே 4 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதே இதன் பிரதான நோக்கமாகும்.