எமது கடற்கரையின் 75 சதவீதமான பகுதியை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படுவது பற்றி கவலை வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மீளமுடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் கனியமணல் அகழ்வு மனிதர்களுக்கும் சூழற்தொகுதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டு, அதற்கு எதிராகவும், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து நேற்று புதன்கிழமை (17) காலை 8.30 மணியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போராட்டத்தில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் ‘பிள்ளைகளின் சொத்துக்களை நாசமாக்காதீர்கள்’, ‘இலங்கை வர்த்தக சம்மேளனமா அல்லது கள்ளர்களின் கூடாரமா?’, ‘எமது பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வது என்ன? கடற்கரைகள் இல்லாத தீவா?’, ‘சுனாமி மற்றும் தித்வா அனர்த்தத்திலிருந்து நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லையா?’, ‘எமது கரையோரம், எமது எதிர்காலம்’, ‘கனியமணல் அகழ்வினால் ஏற்படும் பாதிப்பை மீளவும் சீர்செய்யமுடியாது’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அதேவேளை அங்கு கருத்துரைத்த செயற்பாட்டாளர்கள், ‘எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படுவது தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. எமது கடற்கரைகள் பொதுப்பயன்பாட்டுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ அன்றி, அகழ்வாராய்ச்சி நிறுவனங்கள் எமது வளங்களை சூறையாடுவதற்கும், மாசுபடுத்துவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டினர்.
அத்தோடு மீளமுடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும், எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை எமக்கு உண்டு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



