ஆரம்பமாகியுள்ள டிரம்பின் 60நாள் ஆட்டக்காலத்தில் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 396

அமெரிக்க ஈரான் 60நாள் இடைக்கால அமைதி உடன்படிக்கை பிரான்சில் 52 வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகைபுரிந்திருந்த அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பினால் 1919 இல் யேர்மனியுடன் நேசப்படைகள் மேற்கொண்ட அமைதி உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்ட வரலாற்றுத் தன்மையுடைய வேர்சாய் அரண்மனையில் பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோன் அருகிருக்க ஈரானியத்தலைவர்களுடன் 17.06. 2026இல் கையெழுத்து இடப்பட்டது. 19.06. 2026 முதல் இந்த இடைக்கால உடன்படிக்கை உத்தியோக பூர்வமாக நடைமுறைக்கு வந்து 20.06.2026 இல் இந்த உடன்படிக்கை லெபனானையும் உள்ளடக்குகிறது என அமெரிக்க அளித்த விளக்கத்தை அடுத்து இஸ்ரேலுக்கும் கிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்துள்ளது.       1919 ம் ஆண்டின்  வேர்சாய் உடன்படிக்கை 2ம் உலகப்போராக பரிணாமடைந்தது போல இந்த இடைக்கால உடன்படிக்கையும் தொடங்கி விட்ட மறைமுகநிலை 3ம் உலகப்போரை வெளிப்படையான போராக மாற்றிவிடுமா என்கிற அச்சம் அனைத்துலக போரியல் ஆய்வாளர்களால்  எழுப்பப்பட்டதை உறுதியாக்குவது போல அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஈரானிய உச்சத்தலைவர் மொஜ்தபா அல் கமெனி அவர்கள் கூற்றுக்கு தனது ‘ட்ருத்’ பதிவில் அளித்துள்ள பதில் அமைகிறது.
“ஏமாற்றத்தின் காரணமாகவே அமெரிக்கா ஈரானுடன் அமைதிப்பாதையில் நுழைந்தது” என்ற ஈரானிய உச்சத்தலைவர் மொஜ்தபா அல் கமெனி அவர்கள் கூற்றுக்கு  தனது “ட்ருத்” கணக்கில் “ அவர்கள் முடித்துவிட்டார்கள். இந்த 60நாள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம்” என அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் அவர்கள் பதிவிட்டுள்ளமை அமெரிக்கா இந்த காலக்கட்டத்தை ஈரானின் இறைமையை மதிப்பதாக உடன்படிக்கையில் எழுதிவிட்டு அதற்கு எதிர்மாறாக ஆயுதபலத்தினால் அமெரிக்க முடிவுகளைத் திணிக்கும் முறையில் செயற்படப்போகிறது என்பதைக் கூறாமல் கூறியுள்ளது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தை அமெரிக்க யுத்த அமைச்சகமாகப் பெயர் மாற்றம் செய்திருப்பது அமெரிக்க காங்கிரசின் செனட்டின் வழமையான அமெரிக்க அரச அதிபர் தான் நினைத்ததைச் செய்வதைத் தடுக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புக்களில் இருந்து விடுபட்டு நாடு யுத்த சூழலில் உள்ளதென அரசஅதிபரின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் செயற்படுத்தும் முயற்சியாகவும் அமைவதால் அமெரிக்க தொடர்ந்து போர்களை; சந்திப்பதற்கான முன்ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
மேலும் ட்ரம்ப் அவர்கள் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில 2018 இல்  1948 இல் அக்கால அமெரிக்க அரசத்தலைவர் ட்ரூமன் அவர்கள் உருவாக்கிய பசுபிக் கடல் பிராந்திய கட்டளைப் பணியகத்தை இந்தியாவையும் உள்ளடக்கி பசுபிக் இந்தோ கடல் பிராந்தியக் கட்டளைப் பணியகமாக மறுபெயரீடு செய்தார். எட்டு ஆண்டுகளில் இன்று மீளவும் இந்தியாவை விலக்கும் நோக்கில் மீளவும் பசுபிக் கடல் பிராந்தியக் கட்டளைப் பணியகமாக பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவுகள் குறித்த சந்தேகமும் அச்சமுமே இவ்வாறான போக்குகளுக்குக் காரணமாகின்றது. மாநாட்டில் பங்கேற்ற இத்தாலியப் பிரதமர் மெலானி தன்னுடன் நிழற்படமெடுக்க தன்னிடம் மற்றாடியதாக ட்ரம்ப் கூறியதை அவர் மறுத்ததும் அல்லாமல் அமெரிக்காவுக்கான இத்தாலிய வெளிவிவகார அமைச்சின் பயணத்தையும் இத்தாலி ரத்து செய்துள்ளது. இந்தியப் பிரதமருக்கும் “ மோடி அமைதியானவர் – இனிமையானவர் – கூட்டு மொத்தமாகக் கொல்பவர்” எனவும் “ இனி மோடியுடன் நெருங்க மாட்டேன்” எனவும் கூறிவிட்டு “ஆனால் இந்தியாவை யாரும் தாக்கினால் அமெரிக்கா உடனுதவும் “ என உத்தரவாதமும் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குள் “ மோடி யுத்தங்களில் ஈடுபடாததினால் தலைசிறந்த தலைவர். அமெரிக்க இந்திய வர்த்தகம் தொடரும்” இவைகள் எல்லாம் உலக அரசியல் தலைமைகளின் பதற்ற அரசியலின் வெளிப்பாடாக உள்ள நிலையில் சிறிலங்கா அமெரிக்க ஈரான் 60 நாள் அமைதி உடன்படிக்கையை வரவேற்று அறிக்கைவிட்டு அமெரிக்காவுக்கு அருகில் சென்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் இலக்கு இந்த காலகட்டத்தை சிறிலங்கா ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்தை வேகப்படுத்தப் பயன்படுத்தினால் அனைத்துலக நிலையில் அது கவனம் பெறாது என்கின்ற எச்சரிப்பையும் ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் அமெரிக்க அரசத்தலைவர்  52வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் குறிப்பாக பிரான்ஸ் யேர்மன் இத்தாலி ஆகியவற்றுக்கும் இடையில் நேட்டோ பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக ஏற்பட்டு வந்த விரிசல் நிலைகளை ஓரளவுக்குச் சீராக்கி எதிர்வரும் யூலை மாத முதல்வாரத்தில் அங்கோராவில் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் அமெரிக்காவின் நேட்டோ 3வது வேர்சனை அதாவது அமெரிக்க நேட்டோ நாடுகள் எந்த அளவுக்கு நேட்டோ உறுப்புரிமைக்கான அமெரிக்கா எதிர்பார்க்கும் நிதிப்பங்களிப்பைச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத்தான் அமெரிக்காவின் பாதுகாப்பு வழங்கப்படுதலையும் உறுதிப்படுத்தல் என்கிற முற்திட்டத்தைச் சந்தைப்படுத்துவதற்கான வர்த்தக முன் மாநாடாகவே வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளாரென்பது ஆய்வாளர்க ளின் எதிர்வு கூறலாக உள்ளது.
இறைமை என்பது கூட்டாண்மை பங்காண்மைகள் இடையிலான வர்த்தகத்தால் பாதுகாப்புப் பெறும் காலமாக இன்றைய காலகட்டம் உள்ளதென்பதை இது உறுதியாக்கியுள்ளதென்பதை எடுத்துரைக்க விரும்பும் இலக்கு ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக ( Nation Without State)  22.05. 1972 முதல் இன்று வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் நடைமுறையரசு செயற்பட்ட 1978 முதல் 2009 வரையான 31 ஆண்டுகள் தவிர்ந்த 23 ஆண்டுகளும் சிறிலங்காவின் படைபல ஆட்சி ஏற்படுத்தும் இனங்காணக்கூடிய அச்சத்துள் வாழும் நிலையில்  தங்களுக்குள் தேசிய ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தி மக்கள் இறைமைக்குப் பலமளித்து மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் ஈழத்தமிழர் தாயகத் தேசத்தை மீளவும் மக்களாகக் கட்டியெழுப்பும் பணியில் (Nation Building Process) முழுமையான அர்ப்பணிப்புடன் சனநாயக வழிகளில் மண்ணின் வளத்தையும் மக்களின் மனித வலுவையும் உலகில் உள்ள ஈழத்தமிழர்களின் மூலதனப்பலத்தையும் பயன்படுத்த வல்ல வர்த்தக அணுகுமுறையிலான செயற்திட்டங்களில் ஈடுபட்டே தங்கள் தேசத்திற்கான அனைத்துலக கூட்டாண்மைகளையும் பங்காண்மைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் இன்றைய உலகில் அதிக அளவில் நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் காணப்படுவதற்கு உலக அரசியலின் நிசச்யமற்றதன்மை, பொருளாதாரம், சுற்றுச் சூழல் அச்சம் மட்டுமல்ல அதைவிட முக்கியமானதாக நிறுவனங்களிலும் நாளாந்தச் செய்திகளிலும் நம்பிக்கை இழக்கப்பட்டு வருவது உள்ளதென உலகின் மீக நீண்டகால செய்தி முகவராக உள்ள ரொயிட்டர் தனது ஊடகத்துறை குறித்த தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதென பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழ்  த கார்டியன் உடைய பத்தி எழுத்தாளர் யேன் மார்ட்டின்சன் தனது 19.06. 2026ம் திகதிய “பி பி சி ட்ரம்புக்கும் எலன் மஸ்க்குக்கும் போலிச் செய்திக்கும் தலைசிறந்த ஆயுதமாக அமையலாம் “ என்னும் அவரது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தவறான தகவல்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் வழி பரப்பப்படுகிறது. உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது எதனைச் செய்யக் கூடாதோ அதனை செய்வது ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் உலக வழக்காக்கப்பட்டு வருகிறது. இதனால் செய்யப்பட வேண்டியன செயலிழக்க சனநாயக ஆட்சிமுறைமைகள் தனிமனித ஆட்சி முறைமையாக மாறுவது இன்றைய உலகில் நாளாந்த நிகழ்வாக உள்ளது. சனநாயத்தில் உள்நுழைவுகளும் வெளியேறுதல்களும் சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி. பரிணாமம் என்றால் முன்பிருந்த அமைப்பியல்கள் தொடர்புகள் எல்லாமே மாறுபட்டு புதிய அமைப்பு புதிய தொடர்பாடல் தோன்றுவதாகும். இதனை சமுகவலைத்தளங்கள் பிரிதல் பிளவுபடுதல் என்ற அணுகுமுறையில் செயற்படுவதை ஏன் பிரிந்தார்கள் எதற்குப் பிரிந்தார்கள் எப்படிப் பிரிந்தார்கள் எனச் செயற்படுவதை விடுத்து ஏற்படும் புதிய நிலையில் எப்படி மக்களுக்குச் சக்தியளித்தல் நடைபெறலாமென்பதை நெறிப்படுத்தினாலே மக்களுடைய பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வை வளர்ச்சிகளை உறுதி செய்ய மக்களுக்குச் சத்தியளிக்கும் முறையில் ஊடகங்கள் செயற்படும்-செயற்பட வேண்டுமென்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்த விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News
இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 395

Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026