Home Blog Page 3014

ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் – ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்

யாழ். மாநகரசபை மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07.09) நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் யாழ். மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த அடிக்கல்லை  நாட்டி வைத்தார்.

2ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகரசபை மண்டபத்திற்கு 2019ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலர். நா.வேதநாயகன், யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசுகையில்,

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் ஏனைய இரு அமைச்சர்களின் வழிகாட்டலில் (காமினி திஸநாயக்க, உட்பட சிங்கள அமைச்சர்கள்) யாழ்ப்பாண பொது நூலகம் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டது. (01.06.1981இல் எரிக்கப்பட்டது) ரணில் விக்கிரமசிங்க முன்னிலையிலேயே சுமந்திரன் பேசினார்.

இந்றைய தினம் யாழ். நகருக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நாளாகும். இந்தக் கட்டடம் எப்படி அழிந்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இந்த மாநகரசபை மண்டபம் கோட்டையிலிருந்த இராணுவத்தினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சினாலேயே அழிக்கப்பட்டது.  இதே கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி வைத்ததென்பது யாழ். மக்களுக்கான ஒரு முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரத்திலே எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை பிரதமர் நன்கு அறிவார். எனவே இந்தப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு அவர் விசேட முக்கியத்துவம் செலுத்தியதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

ranil sumi4 ஐ.தே.காவின் தேர்தல் நாடகம் - ரணிலை குற்றஞ்சாட்டும் சுமந்திரன்நாங்கள் இந்த முயற்சிகளுக்கு எங்களது முழுமையான ஆதரவை கொடுப்போம். நான்கரை ஆண்டுகளில் என்ன நடந்தது என்று கேட்போருக்கு இந்தக் கட்டடங்கள் சான்றாக அமையும். இந்த மாற்றங்கள் எப்படியான உண்மையான மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன என்ற பாடம் எங்களின் மக்களின் மனங்களிலேயே ஆழமாக பதிகின்றது.  என்று கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி கூறினார்.

மேலும் யாழ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார். யாழ். மாநகரசபையால் யாழ். நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தைச் சென்று பார்வையிட்டுள்ளார்.

சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வை

சந்திராயன் – 2 ஜுலை 22ஆம் திகதி முதல் இன்று வரை (07.09) நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

978கோடி ரூபா செலவில் தயாரான சந்திராயன் – 2 3,850 கிலோ எடை கொண்டதாகும். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரம் மற்றும் அய்வூர்தி பிரக்கியான் ஆகிய 3 அங்கங்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஜுலை 22ஆம் திகதி பிற்பகல் 2.43இற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 றொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திராயன் – 2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் சுற்றுப் பாதை நிலவிற்கு நெருக்கமாக அமையும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. செப்டெம்பர் 2ஆம் திகதி பகல் 12.45 மணியிலிருந்து 1.45 மணிக்குள் சந்திராயன் – 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக, ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி செப்டெம்பர் 2ஆம் திகதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது. நிலவிலிருந்து அதிக பட்சம் 128 கிலோமீற்றர், குறைந்தபட்சம் 114 கிலோமீற்றர் தொலைவு என்ற சுற்றுப் பாதையில் லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. இதன் பிறகு பிரக்யானுடன் கூடிய லேண்டர் விக்ரமின் சுற்றுப்பாதை, அதிகபட்சம் 100 கிலோமீற்றர், குறைந்தபட்சம் 30 கிலோமீற்றர் என மாற்றப்பட்டு சுற்றியது.

Chandrayan3 சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வைஇந்நிலையில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்த போது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது. இதை  விஞ்ஞானிகளுடன் காண்பதற்காக, பெங்களுரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடியும் வந்திருந்தார். படிப்படியாக திட்டமிட்டபடி வெற்றிகரமாக லேண்டர் விக்ரம் இறங்கிய நிலையில், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நிலவின் தரையிலிருந்து 2.1 கிலோமீற்றர் உயரத்தில் லேண்டர் விக்ரம் இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைப்பதற்காக விஞஞானிகள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல பரபரப்பு அதிகரித்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்ற விபரத்தை இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். கடைசியாக கிடைத்த தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை என்ற விபரத்தை பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் எடுத்துரைத்தார். அப்போது தைரியமாக இருங்கள், நம்பிக்கை இழக்க வேண்டாம் என விஞ்ஞானிகளிடம் கூறிய பிரதமர் மோடி, ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்புதான் என்றும், இதுவரை சாதித்திருப்பதே மிகப் பெரிய சாதனைதான் என்றும் குறிப்பிட்டார்.

கவலையடைந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை பிரதமர் மோடி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.

Chandrayan1 சந்திராயன் – 2 நடந்தது என்ன? ஒரு பார்வைலேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில், அது வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் இஸ்ரோ வெளியிடவில்லை.

 

 

 

புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது – பரணி கிருஸ்ணரஜனி

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது.

நாம் அதற்குள் போக வேண்டாம்.

நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம்.

திருகோணமலைதான் தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிர்வாகத் தலைநகராகவும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும், வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிழீழத்தைக் கட்டியெழுப்பப் புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

அந்த வகையில் தான் வன்னியை மையப்படுத்தி அறிவியல் நகரை வடிவமைத்தனர்.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பெருநகர்களுக்கிடையில் இந்த அறிவியல் நகர் தமிழீழத் தனியரசின் திட்டமாக முழு வடிவம் பெற்றது.

இந்த அடிப்படையில் மல்லாவிப் பகுதியில் தமிழீழ விண்வெளி ஆய்வு மையத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

தலைவரின் தூர நோக்கும், முழு செயல் வடிவமும் இது.

இதை சமாதான காலத்தில் புலிகளினுடைய உரையாடல்கள், திட்டமிடல்களினூடாக உலகம் அறிந்து பிரமித்தது மட்டுமல்ல அச்சமும் கொண்டதன் விளைவே தமிழீழ நடைமுறை அரச, தமிழின அழிப்பில் தம்மைப் பங்காளிகளாக்கிக் கொண்டன.

CHANDRAYAAN2 புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது - பரணி கிருஸ்ணரஜனிஇண்றைய நில ஆக்கிரமிப்பும், அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்களும் தமிழீழ நடைமுறை அரசின் முன்னைய நிர்வாக அடுக்குகளை இலக்கு வைத்து, அதைக் குலைப்பது போல் நிகழ்வதை உன்னிப்பாக அவதானித்தால் புரியும்.

இதை முன்பு வடிவமைத்துக் கொடுத்ததே பிராந்திய, மேற்குலகக் கூட்டணிகள்தான்.

தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

புலிகளின் படைத்துறை ஆளுமை பீதி ஏற்படுத்தியதை விட அவர்களின் அறிவியல் ஆளுமையும் பரிணாமத்திற்கு ஏற்ற வகையில் எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் உத்தியும்தான் இவர்களைப் பீதியடைய வைத்தது.

இந்த அடிப்படையில்தான் தமிழீழம் உருவாகினால் அது இஸ்ரேலின் வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளியிருக்கும் என்பது புலிகளை முறையாக ஆய்வு செய்தவர்களின் மதிப்பீடு.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் சேதுசபார் ஒரு முறை குறிப்பிட்டது போல் புலிகள் இன்று இருந்திருந்தால் அவர்களின் கற்கும் வேகத்திற்கும், பரிணாம உத்திக்கும் ஒரு செயற்கைக் கோளைக்கூட விண்ணில் ஏவியிருப்பார்கள்.

அறிவியலில் கற்பனைக்கெட்டாத சாதனைகளையும், அறிவையும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் புலிகள்தான்.

இதனாலேயே புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது.

பலருக்கு தெரியாத ஒரு கதை இருக்கிறது.

பல் குழல் எறிகணகளை முதன் முதலில் புலிகள்தான் பாவித்தார்கள். அதன் பிறகே அதையும் விட பல குழல்கள் உள்ள எறிகணைச் செலுத்திகளை பிராந்திய, மேற்குலக வல்லரசுகள் சிங்களத்திற்குக் கொடுத்தது மட்டுமல்ல புலிகளுக்கு எறிகணைகள் கிடைக்காமல் கடல் வழி வழங்கல் பாதையையும் தடை செய்தன.

MBRL02 புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது - பரணி கிருஸ்ணரஜனிபுலிகள் அதற்கு மாற்று வழி தேடுவதற்குள் அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் அழிக்கப்பட்டார்கள். சந்தர்ப்பம் வழங்கினால் அதை விட வேகமாக மாற்று யுக்திகளுடன் வருவார்கள் என்பதை மேற்குலகம் கணித்தே வைத்திருந்தது. கடைசி வரை யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வாய்ப்பளிக்காததற்கு இதுதான் காரணம்.

புலிகளின் பாணி என்பதே ஆயுதங்களை அப்படியே பயன்படுத்தாமல் தமது வசதிக்கு ஏற்றமாதிரி மாற்றி அமைத்தே பயன்படுத்துவார்கள். எதிரிக்கு இது தலையிடி.

குறிப்பாக கடற்புலிகள் வடிவமைத்த சண்டைப் படகு இஸ்ரேலின் டோராப் படகுகளுக்கு சவால் விட்டது மட்டுமல்ல அதைத் தோற்கடிக்கவும் செய்தன.

கடலில் கடைசி வரை கடற் புலிகளை வெல்ல முடியவில்லை. இறுதியில் வான் வழியாக தாக்குதல் நடத்தியே கடற்புலிகளை முடக்கினர்.

அதுவும் வான் புலிகளை அறிமுகம் செய்த தலைவர் அவற்றை வான் வழி யுத்த விமானங்களாக மாற்றி கடற்புலிகளுக்கான வான்வழி சூட்டாதரவை வழங்க முற்பட்டபோதுதான் முழு உலகமும் அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன விலை கொடுத்தாவது புலிகளை அழிப்பதென்று முடிவுக்கு வந்து சிங்களத்திற்கு உதவினார்கள்.

புலிகளின் காலம் என்பது தமிழர் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு பிரளயம்.

அதை என்றாவது ஒரு நாள் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்.

அது வெகு தூரத்தில் இல்லை.

சீனாவில் முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பூனைக்குட்டி

சீனாவில் முதன்முறையாக பூனைக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹூவாங் யூ என்பவர், ஆசை ஆசையாக ‘கார்லிக்’ என்ற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். உரிய பராமரிப்புடன், மிகுந்த அன்பு காட்டி ஹூவாங் வளர்த்து வந்த ‘கார்லிக்’ அண்மையில் உயிரிழக்கவே, மனமுடைந்த அவர், குளோனிங் முறையில் பூனைக் குட்டியை உருவாக்க நிறுவனங்களை நாடினார்.

இந்த முயற்சியை கையில் எடுத்த சினோஜீன் என்ற நிறுவனம், வெற்றிகரமாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலான பூனைக்குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இந்த பூனையானது அச்சு அசலாக தன்னிடம் இருந்த கார்லிக் பூனையை போல் இருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ள அதன் உரிமையாளர் ஹூவாங், இதற்கென சுமார் 25 லட்சம் ரூபாயை($35,000) செலவிட்டுள்ளார்.

குளோனிங் முறையில் பூனைக்குட்டியை உருவாக்கிய சினோஜீன் நிறுவனம், இதற்கு முன் 40க்கு மேற்பட்ட நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் உருவாக்கியதாகவும், பூனைக்குட்டியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செல்லப்பிராணிகளின் தோற்றம் எதுவாக இருந்தாலும், உரிமையாளர்கள் அவற்றை குடும்பத்தின் ஒரு அங்கமாக பார்ப்பதால், அதிக பணம் கொடுத்தும் அவற்றை குளோனிங் முறையில் உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்தது.

செல்லப்பிராணிகளை குளோனிங் முறையில் உருவாக்குவது பல நாடுகளில் சட்டவிரோதமாக கருதப்படும் நிலையில், சீன நிறுவனம் ஒன்று பாண்டா கரடி குட்டிகளையும், பூனைகள் உதவியுடன் உருவாக்கும் ஆராய்ச்சியும் கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாதாம் – மஹிந்த

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப் படவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு  நேற்று பத்தர முல்லையில் உள்ள ‘அபே கம’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள் எனவும் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என்றார்.

மேலும் தமிழ் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசியலமைப்பு உருவாக்கம் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எனவே தமது ஆட்சி அமையுமிடத்து அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட மக்க ளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படுகின்றன – தமிழ் மக்கள் கூட்டணி உபதலைவர்

தமிழ்மக்கள் கூட்டணியின் உபதலைவர் சோமசுந்தரம் (நேர்காணல்)

‘கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்பட்டு அவற்றினை தமிழர்களுடன் தொடர்பற்ற பகுதிகளாக அடையாளப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன’

என  தமிழ் மக்கள் கூட்டணியின் உபதலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கு மாகாண நிருவாகச் செயலாளருமான சி.சோமசுந்தரம் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அந்தச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு…

கேள்வி: சமகாலச் சூழலில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலைமை கள் எவ்வாறு உள்ளன?

பதில்: கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அண்மைக்காலமாக அதிகரித்தவண்ணமுள்ளன மிகவும் சிக்கல்கள் நிறைந்த இப்பிரச்சினைகள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றமையானது பல்வேறு அச்சங்களையே முதலில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற நிலங்கள் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதனைவிடவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், வரலாற்று இடங்கள் போன்ற அனைத்தும் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்பட்டு அவற்றினை தமிழர்களுடன் தொடர்பற்ற பகுதிகளாக அடையாளப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும், தமிழர்கள் தமது நிருவாகச் செயற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நிருவாக அலகுகளை கோருகின்றபோது சொற்ப விடயத்தினைக் கூட பூதாகாரமாக்கி ஒருபிரதேசத்தில் கூட அதிகாரத்தினை கோருவதற்கு தகுதியற்றவர்கள் என்று அடிமைப்படுத்த விளைகின்ற மனநிலை போக்கு அதிகரித்துச் செல்கின்றது.

இதனைவிடவும் ஒருமொழிபேசுகின்ற இருசமூகங்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் பகிரங்கமாக கூறமுடியாத பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். எல்லைக்கிராமங்களை பறிகொடுப்பது முதல் எம்முறவுகளையும், அடையாளங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் தோற்றம்பெற்றுவருகின்றன.

இதனைவிடவும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற பிளவுகளை சாதுரியமாக பயன்படுத்தி எமது இருப்பையே கேள்விகுள்ளாக்குகின்ற செயற்பாடுகளும் செவ்வனே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே கிழக்கில் எமது அடையாளங்களை வெளிப்படுத்தி எமது இருப்பினை திடகாத்திரமாக உறுதிப்படுத்துவதற்கான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் அணிதிரள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. இல்லாது விட்டால் முக்கால்வாசியை பறிகொடுத்த நாம் முழுமையாக அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைமைக்கே தள்ளப்படுவோம். இதனால் கிழக்கில் தமிழினம் முற்றாக அழிந்துவிடும் நிலை ஏற்படும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

கேள்வி : வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களுக்கான நீதிகேட்டு அவர்களின் உறவுகளால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற நிலையில் அதற்கான தீர்வினை எவ்வாறு பெறமுடியும் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்:-  எமது உறவுகள் அசாதாரண சூழலிலும், இறுதி யுத்தத்தின்போதும் தமது உறவுகளைப் பறிகொடுத்து இற்றைக்கு ஒரு தசாப்த காலமாக தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் இந்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

உள்நாட்டில் இந்த விடயத்திற்குரிய தீர்வினை வழங்குவதாக மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள, பௌத்த பேரின அரசாங்கங்கள் வாக்குறுதிகளை வழங்கி ஆணைக்குழுக்களையும் அலுவலகங்களையும் நியமித்தாலும் அவையெல்லாமே வெறும் கண்துடைப்பு செயற்பாடுகளே.

உள்நாட்டில் உறவுகளைப் பறிகொடுத்த மக்களின் அழுத்தங்களை நீர்த்துப்போகச் செய்து அவர்களை திசைதிருப்புவதற்கான செயற்பாடுகளாகவே அவை அமைகின்றன. ஆனால் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புறுக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்போம் என்று கூறி அதற்காக கால அவகாசத்தினைப் பெற்றுள்ள சூழலிலும் அவர்களும் இந்த விடயத்தில் கண்கட்டிவித்தையே செய்கின்றார்கள்.

அவர்கள் உறவுகளை மட்டுமன்றி முழுச் சர்வதேசத்தினையும் ஏமாற்று வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளார்கள். இதற்காக காணாம லாக்கப் பட்டவர்களுக்கான அலுவலகங்களை ஸ்தாபித்து அவ்வப்போது பிராந்திய காரியாலங்களையும் திறக்கின்றார்கள். இவை அனைத்துமே சர்வதேசத்தினை ஏமாற்றி தொடர்ந்தும் பொறுப்புக்கூறலை தாமதப்படுத் துவற்கான நாடகமாகும். இதனை சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் சர்வதேச காணாமலாக் கப்பட்ட தினமன்றும் கல்முனையிலும், தமது உறவுகளை படையினரிடத்தில் கையளித்த ஓமந்தையிலும் பாரிய கனவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே இந்த விடயம் ஆறிப்போன பழங்கஞ்சியாக என்றுமே கொள்ளமுடியாது என்பதை சர்வதேசம் புரிந்துகொண்டு உணர்வுகளுடன் தொடர்புடைய இவ்விவகாரத்தினை சர்வதேச தலையீட்டுடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றாவது எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் சற்றேனும் கூட சர்வதேசம் தாமதிக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு தாமதிக்கின்றபோது தங்களது உறவுகளுக்காக ஏங்கிப் போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் தமது இறுதி ஆசைகளைக் கூட நிறைவேற்றாது உயிர்களை மாய்க்கின்ற நிலைமைகளே அதிகரித்துச் செல்லும் பேராபத்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: பேரினவாத அரசாங்கங்கள் தமது மனநிலையில் எள்ளவும் மாற்றத்தினைக் கொள்ளவில்லை என்பதையே இந்த நியமனம் வெளிப்படுத்தி யுள்ளது. ஆயுத ரீதியிலான எமது உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாத மாகச் சித்தரித்து ஆயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்த ஒருவருக்கு அதியுயர் பதவி வழங்கப்படுகின்றது என்றால் தமிழர்கள் குறித்து தென்னிலங் கை தலைவர்களின் கரிசனையை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. தற்போது இராணுவத்தளபதி நியமிக்கப்பட்டி ருக்கின்றார். அடுத்துவரும் காலத்தில் சனாதிபதியும் அத்தகைய மனநிலை கொண்ட ஒருவர் வருவாரானால் தமிழர்கள் நாடற்ற அநாதைகளாக்கப் பட்டுவிடும் ஆபத்தே உள்ளது.

கேள்வி: செப்டம்பர் 16இல் நடைபெறும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கிழக்கு தமிழர்களின் வகிபாகம் எவ்வாறு அமையப்போகின்றது?

பதில்:- தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அதன் இணைத்தலைவரும், எமது கட்சியின் பொதுச்செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் நிகழ்வானது தாயகத்தின் எட்டுமாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தாயகத்தின் அனைத்துப்பிரதேசத்திலும் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் தாயகம் தற்போது சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் பிடிக்குள் வெகுவாக சிக்கியுள்ளது. எமக்கு பாரம்பரியங்கள் பறிபோகின்றன. எமது இழைக்கப்பட்ட எந்தவொரு அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதாக இல்லை. பொறுப்புக்கூறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது.

ஆயுதப்போராட்டத்தினை மௌனித்து விட்டோம் என்ற மமதையில் சிங்கள பேரினவாதம் தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமைகளை நாம் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பேரினவாத ஆட்சி முதல் நல்லாட்சி வரையில் தமிழர்களுக்கு எந்தவிமோசனமும் கிடைக்கவே இல்லை என்பதை சர்வதேசத்திற்கு உரத்துக் கூறவேண்டும். இதற்கான கிழக்கு மாகாண தமிழர்கள் முழுமையாக தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள்.

இது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பு சம்பந்தமான பிரச்சினை. ஆகவே தான் இந்த எழுச்சிப்பேரணியில் அனைவரும் பேதமின்றி கலந்து சர்வதேசத்திற்கு அழுத்தமாக எமது நிலைமையை உரத்துச் சொல்ல தலைப்பட்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கிழக்கின் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் தமது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

கேள்வி : ஆணைபெற்ற தமிழ்த்தலைவர்கள் தமிழ் மக்களின் விடயங்களை கையாளுகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் நான் தந்தை செல்வாவின் பாசறையில் உருவான தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவே ஆரம்பகாலத்தில் இருந்தேன். தற்போது அந்தக்கட்சியி லிருந்து வெளியேறிவிட்டேன். அந்தக்கட்சியின் தலைவர்களைப் பொறுத்த வரையில் அவர்களால் இயலுமான விடயங்களையே செய்கின்றார்கள். அவற்றால் தமிழ் மக்கள் எவ்விதமான விமோசனத்தினையும் பெறவில்லை.

ஆகவே அவர்களை விமர்சிப்பதால் எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை. அவர்களை விமர்ச்சித்துக்கொண்டிருப்பதால் எம்மால் முன்னெடுத்துச் செய்ய வேண்டிய கடமைகளே தாமதமடைந்துவிடும். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆகவே இருக்கின்றவற்றை பாதுகாக்க வேண்டும். அதற்காகவே தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

அதன்மூலம் எமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளதோடு தீர்வு தொடர்பிலும் தெளிவான நிலைப்பாட்டினை குறிப்பிட்டோம். ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தந்தை செல்வா காட்சிய அஹிம்சை வழியில் மக்கள் எழுச்சிப்போராட்டங்களை முன்னெடுப்பது தான் எமக்குள்ள ஒரே வழியாகும்.

யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்தே 260 பேரின் உயிர்களை பலியெடுத்தது

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் முஸ்லீம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 260 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா இராசாயணவியல் பகுப்பாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிமருந்து உலகில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேலில் இடம்பெறும் தாக்குதல்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுவதுடன், அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலின் போதும் இது பயன்படுத்தப்பட்டிருந்தது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டதாகவும், எல்லா குண்டு வெடிப்புக்களிலும் ஒரே வெடிமருந்தே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் வலிநன்கே தெரிவித்துள்ளார்.

சகரான் கசீம் தலைமையிலான தேசிய தௌகீத் ஜமாத் என்ற அமைப்பே இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

பலாலி விமானநிலைய விரிவாக்கம்;உரிமத்தை உறுதிசெய்தால் இழப்பீடு – அர்ஜுன

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்கத்தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட  அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன. 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை.இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார் எனவும் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டதும் இவர்களுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்பை இழந்த சந்திராயன்; சரிந்துபோகும் இந்தியாவின் விண்வெளி நம்பிக்கைகள்

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த நிலையில் விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார். விக்ரம் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில்,

சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

காஸாவில் இரு பாலஸ்தீனிய இளையோர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொலை

காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் 76 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயங்களை அவதானிக்கும்போது கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றமை புலனாகியுள்ளது என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 5000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் என பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை காஸா எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது படையினர் 6000ற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது சிலர் வெடிபொருட்களையும் குண்டுகளையும் வீசினார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் எல்லையை கடந்து உள்ளே நுழைந்த பின்னர் திரும்பிச்சென்றனர் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தமது படையினர் கலகம் அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் தாங்கள் தப்பியோடிய பகுதிகளிற்கு மீண்டும் திரும்புவதற்கான உரிமையை கோரியும்  பொருளாதார தடைகளை விலக்குமாறு கோரியும் கடந்த 18 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் வாராந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2018 மார்ச்சில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.