Home Blog Page 3015

இந்திய – சிறீலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

சிறீலங்கா மற்றும் இந்தியா கடற்படையினர் கூட்டாக பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதால் சிறீலங்கா கடற்படையினர் இரண்டு போர்க் கப்பல்கள் இந்தியாவுக்கு நேற்று முன்தினம் (05) புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (07) ஆரம்பமாகும் சிலிநெக்ஸ்-2019 என்ற இந்த கடற்படை ஒத்திகையானது எதிர்வரும் 12 ஆம் நாள்வரையிலும் இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கையில் 323 சிறீலங்கா கடற்படையினரும் பெருமளவான இந்திய கடற்படையினரும் பங்குகொள்வதுடன், உலங்குவானூர்திகளும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

மன்னாரில் அழிவடைந்து வரும் தமிழர் வரலாறு

இராவணன் கட்டிய கோட்டை மன்னாரின் அடையாளச் சின்னம் என பல சாதனைகளை உள்ளடக்கியது தான் அல்லிராணி கோட்டை

கம்பீரத்தின் அடையாளம் போல நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், அல்லிப்பூக்களின் வாசனைக்கு மத்தியில் குறித்த கோட்டை அமைந்திருப்பதனால் அல்லிராணி கோட்டை எனப் பெயர் வந்ததாக வரலாறு உள்ளது.

மன்னார் முசலிப் பிரிவிற்குட்பட்ட அரிப்புக் கிராமத்தின் கடலோரப் பகுதியில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் பெரும்பாலான பாகங்கள் அழிவடைந்து எஞ்சியுள்ள மிகுதி பகுதிகளைக் கொண்டு நிலைத்து நிற்கிறது.

இப்பகுதி மக்களால் இராவணன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை என்றே அல்லிராணிக் கோட்டை அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் வரலாறு கூறும் உண்மைகளையும் ஆராய வேண்டும்.

இலங்கைத் தீவின் முதல் பிரித்தானிய ஆளுநர் பிரட்ரிக் நோர்த்தால் உருவாக்கப்பட்ட வாஸ்தலமே இக்கோட்டை எனவும் கூறப்படுகின்றது.

ஆவரால் உருவாக்கப்பட்ட வீடு எனவும் 4 அறைகளைக் கொண்டிருந்ததாகவும் இரண்டு தட்டுக்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவின் அழகிய கட்டடமாகவும், நிர்மாணக் கலைக்கு அமைவாக கட்டப்பட்ட ஒரேயொரு கட்டடம் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

ஆனால் உண்மையில் இக்கோட்டை இராவணனால் உருவாக்கப்பட்டதா? அல்லது பிரட்ரிக் நோர்தினால் உருவாக்கப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவியவண்ணம் உள்ளது.

உண்மையில் இக்கோட்டை இராவணனால் கட்டப்பட்டதாக இருந்தால் பல யுகங்களைத் தாண்டி பரிணமிக்கும் உலகின் ஒரேயொரு கோட்டை என்ற சிறப்பை பெறும்.

தனித்த கடற்பகுதி, அலைகளின் சத்தம், அமைதியான காற்று என அல்லிராணி கோட்டையின் சிறப்பம்சம் வேறெங்கும் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

கடல் அலையின் தாக்கத்தால் கோட்டையின் பகுதிகள் சில கடலில் மூழ்கிப் போய்விட மிகுதி பாதியும் சுனாமியின் தாக்கத்தால் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

யுத்தகாலத்தில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் யுத்தத்தின் பின் பெரும்பாலானோர் படையெடுக்கும் ஓரிடமாகவும் அல்லிராணி கோட்டை மாறி வருகின்றது.

முறையான புனரமைப்பு பணிகள் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இக்கோட்டை, எதிர்காலத்தில் புனரமைக்கப்படுமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.

mannar ford3 மன்னாரில் அழிவடைந்து வரும் தமிழர் வரலாறுபெயருக்கேற்ற பிரமிப்பும் அழகும் அடியோடு அழிந்து போய்விட இன்று செங்கல் சுவர் மட்டுமே இக்கோட்டையின் அடையாளச் சின்னமாகத் காணப்படுகின்றது.

தனிமையின் அடையாளமாக திகழ்ந்த அல்லிராணிக் கோட்டை இனியும் தனிமையில் அழியவிடாமல் காப்பது எம்மவரின் தலையாய கடமையும் அதேவேளை உணர்ச்சிபூர்வமான செயற்பாடும் ஆகும்.

எதிர்காலத்தில் எமக்கு தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு இன்னுமொரு கோட்டை அமையப் போவதில்லை. மீண்டும் உயிர் கொடுத்து அழிந்த சுவடுகளை எடுப்போமானால் கம்பீரமாக தலைநிமிர்ந்து சொல்லலாம். நிர்மாணக் கலைக்கு அமைவாக இலங்கையில் கட்டப்பட்ட ஒரேயொரு கோட்டை அல்லிராணிக் கோட்டை என்று பெருமையாகக் கூறலாம்.

 

ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

ஜிம்பாப்பே விடுதலைக்குப் பின்னர் அந்த நாட்டின் முதல் தலைவரான றொபேட் முகாபே தனது 95ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

1924ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி றோடேசியாவில் (ஜிம்பாபேயின் முன்னய பெயர்) பிறந்தார். 1980இல் ஜிம்பாபே சுதந்திரம் பெற்றதிலிருந்து 2017 வரை 37 ஆண்டுகள் முகாபே அதிபராக இருந்தார்.

ஆட்சியின் ஆரம்பத்தில்  நாயகனாக பார்க்கப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாக மாறினார்.

மிஷன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற றொபேட் கபிரியேல் முகாபே. நெல்சன் மண்டேலா கல்வி கற்ற ஃபோர்ட் ஹாரே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஆசிரியராக பயிற்சி பெற்று, 1958இல் பணியின் நிமித்தம் அவர் கானா சென்றார்.

Mugabe4 ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்அங்கு சால்லி ஹாஃபிரோனை சந்தித்த முகாபே, 1961இல் அவரை திருமணம் செய்து கொண்டார். கறுப்பு தேசியவாதிகளின் தேர்வாக அவர் மாறும் முன்பு முகாபேயை விட சால்லி ஹாஃபிரோன் அதிக அரசியல் நாட்டம் கொண்டவராக திகழ்ந்தார்.

1974ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஜோசுவா நகோமோடு மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக கெரில்லா போர் தொடுக்கும் தலைவராக மாறினார். இதனால் அவர் பிரபலமானார்.

பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை களைய அவர்கள் ஒப்புக் கொண்டனர். நாட்டுப்பற்று முன்னணி கட்சியை உருவாக்கிய அவர்கள் 1980 பெப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

Mugabe5 ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்10 ஆண்டுகள் நாடுகடந்து வாழ்ந்த பின்னர், தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்னர் தான் றொபேட் முகாபே ஜிம்பாப்வே வந்தடைந்தார். ஒருங்கிணைந்த அரசை உருவாக்கிய அவர், நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

அவர் பிரதமர் பதவி வகித்த தொடக்க ஆண்டுகளில் உலக நாடுகளின் தலைவர்கள் அவரை சந்தித்தனர். 1986இல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட கியுபா அதிபர் பிடல் கஸ்ரோவும் அவரை சந்தித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரெட் தட்சருடனும் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தொடக்கத்தில் தன்னுடைய வெள்ளையின எதிரிகளின் பொருளாதார செல்வத்தை அவர்களே வைத்திருக்க அனுமதிக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.

தன்னுடைய முதல் மனைவி இறந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் 1996இல் தன்னுடைய தட்டச்சுப் பணியாளரான கிரேஸ் மாருஃபுவை முகாபே திருமணம் செய்து கொண்டார். முகாபேவுக்கும் கிரேஸ் மாருஃபுக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

1997அம் ஆண்டு சர்ச்சைக்குரிய நில சீர்திருத்தத்திற்கு நிதி ஆதரவு அளிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து டோனி பிளேயர் தலைமையிலான பிரிட்டன் அரசு விலகிக் கொண்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் முகாபே தோல்வியடைந்த பின்னர் வெள்ளையர் வைத்திருந்த பண்ணைகளை முகாபே ஆதரவு ஆயுதப்படையினர் கைப்பற்றத் தொடங்கினர்.

Mugabee castro ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்இதே நேரத்தில் முகாபே சாவில்லி ரோ உடையையும், சஃபாரி உடையையும் கைவிட்டு, பரப்புரை பயணத்தின் போது தமது முகம் பொறித்த பிரகாசமான வண்ண உடையணிந்து வலம் வந்தார்.

அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஆளும் ஸானுபிஎஃப் கட்சியால் பெரிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றில் ஆடம்பரமான கேக்குகளும் அடங்கின. வெள்ளையின விவசாணிகளுக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் ஆபிரிக்கர் மத்தியில் கதாநாயகனாக திகழ்ந்தார்.

இருப்பினும் அவருடைய புகழ் குறிப்பாக நகர்ப்புறங்களில்   குறைந்தது 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். வன்முறை நடைபெறுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான எம்.டி.சி. கட்சி பின்வாங்கிய பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் அவர் வெற்றியடைந்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளால் முதலீட்டிற்காக சீனா எதிர்நோக்கும் கிழக்கத்திய பார்வை கொள்கைக்கு முகாபேயை வழிநடத்தியது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்வதுண்டு. அவரது மகள் போனா ஹொங்கொங்கிலும், சிங்கப்பூரிலும் கல்வி கற்றார்.

நான்கு ஆண்டுகளாக நடத்திய ஓர் அதிகார பகிர்வு அரசாங்கத்திற்கு பின்னர் கறுப்பின ஜிம்பாப்வே மக்களுக்கு பொருளாதாரத்தைக் கட்டுப்படுது்தும் உரிமையை வழங்குவது என்ற உள்நாட்டு கொள்கையை மையமாக வைத்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸானு பிஎஃப் கட்சி வெற்றி பெற்றது.

நீண்டகாலம் பதவியில் இருந்ததாக விமர்சிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு 91ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர விடுதியில் நடைபெற்றது. கேக் வெட்டி கொண்டாடியதுடன், யானைகள் பலவும் பலியிடப்பட்டன.

முதலாளித்துவம் மற்றும் காலனித்துவத்தை எதிர்த்து போராடுவதாக அக்கட்சி கூறி வந்தது. எனினும் அந்நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அக்கட்சியின் ஆதரவாளர்களையும் தாக்கியது.

தம் புரட்சி முடிந்தால் பதவி விலகுவேன் என முகாபே அடிக்கடி கூறுவார். ஆனால் தனக்கு பின்னர் யார் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தார்.

முகாபேக்கு உறுதுணையாக பாதுகாப்பு படைப்பிரிவுகள் இருந்தன. அவருடைய மனைவி கிரேஸ் முகாபே நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே 2017 நவம்பர் 15இல் ஜிம்பாபேயில் இராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

மக்கள் பெருங்கூட்டமாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பின்னர் பதவியை நீக்க நாடாளுமன்றம் நடைமுறைகளைத் தொடங்கிய நிலையில் 93 வயதாகி இருந்த தலைவர் பணிந்தார் 37 வருடங்கள் பதவியில் இருந்த முகாபே தானாகவே பதவி விலகினார்.

 

 

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை

போர்க்குற்ற விசாரணையை நடாத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019ம் திகதி (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில்
நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக நாளைய 07.09.2019 தினம் காலை-9.00 மணியளவில் வவுனியா வாடிவீட்டில் பொது அமைப்புக்களின் உடனான சந்திப்பை தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளன.

இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று அனைத்து பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ கட்சிகளும் அழைப்புவிடுத்துள்ளது.

ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர்  ராபர்ட் முகாபே தனது 95 வயதில் காலமானார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.
“ஜிம்பாப்வேயின் நிறுவன தந்தையும் முன்னாள் அதிபருமான சி.டி. ராபர்ட் முகாபே காலமானதை மிகுந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் என அதிகாரப்பூர்வ அதிபர் எம்மர்சன் ட்விட்டரில் கூறப்பட்டு உள்ளது.
முகாபே சிங்கப்பூரில் இறந்தார், அங்கு அவர் சமீபத்தில் அடிக்கடி மருத்துவ  சிகிச்சை பெற்று வந்தார் என  இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த  ஆதாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறி உள்ளது.

நீர்க்காகம் கூட்டுப்படை பயிற்சி மீட்பு ஒத்திகை திருமலையில்

நீர்க்காகம் கூட்டுப்படைப் பயிற்சியில் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையிலுள்ள அஸ்ரப் துறைமுகத்தில் இடம்பெற்றது.

7 பெண்கள், 15 ஆண்கள் பணயக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம், கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

212 விமானப்படையின் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி இராணுவ கொமாண்டோ, விசேட படையணி, இராணுவப் புலனாய்வுப் படையணி மற்றும் கடற்படை விசேட கடற்படைப் பிரிவினர்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டுப்படைப் பயிற்சிகள் மத்திய பாதுகாப்புப் படைத் தளபதியும் கூட்டுப்படைப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே தலைமையில் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி செருப்படி  

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்  இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

thumbnail PHOTO 2019 09 06 12 28 10 வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி செருப்படி  வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.

thumbnail PHOTO 2019 09 06 12 28 20 வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி செருப்படி  வரதராஜ பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட படத்தை தாங்கியவாறு  விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் ‘தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.
thumbnail PHOTO 2019 09 06 12 28 31 வரதராஜ பெருமாளுக்கு சாணி ஊற்றி செருப்படி  

தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தேடிச் சென்ற அமெரிக்க முக்கியஸ்தர்

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமாருக்கும், அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது கொழும்பில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் மலையக அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் முன்பள்ளி கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக நிதி வழங்கவும் அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவனம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் அழைப்பின் பேரிலேயே  நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த விஜயத்தின் போது எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே நேற்றைய சந்திப்பில் அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவன உயர்மட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஒக்ரோபர் 16இல் பலாலி விமான சேவை!

ஒக்டோபர் 10ஆம் திகதியளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். ஒக்டோபர் 16ஆம் திகதி இங்கிருந்து விமான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து இந்தியாவுக்கு ஆரம்பிக்கப்படும் விமான பயண சேவைகளை வழங்கும் போது தேசிய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை தவிர்த்து, மத்தள, இரத்மலானை, மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக தரமுயர்த்தப்படும்.

இந்த விமான நிலையங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, பிராந்திய மற்றும் சர்வதேச விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படும். ஒக்டோபர் 10ஆம் திகதியளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். 16ஆம் திகதி விமான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

பலாலி விமான நிலையத்தை சார்ந்த தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது, வட பகுதி மக்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படும். என தெரிவித்தார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாக இன்று பிற்பகல் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27வயதுடைய வாழைச்சேனை,சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.