யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்தே 260 பேரின் உயிர்களை பலியெடுத்தது

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் முஸ்லீம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 260 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு யூரியா நைற்ரேட் என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா இராசாயணவியல் பகுப்பாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிமருந்து உலகில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேலில் இடம்பெறும் தாக்குதல்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுவதுடன், அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலின் போதும் இது பயன்படுத்தப்பட்டிருந்தது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டதாகவும், எல்லா குண்டு வெடிப்புக்களிலும் ஒரே வெடிமருந்தே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் வலிநன்கே தெரிவித்துள்ளார்.

சகரான் கசீம் தலைமையிலான தேசிய தௌகீத் ஜமாத் என்ற அமைப்பே இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.