சீனாவில் முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பூனைக்குட்டி

சீனாவில் முதன்முறையாக பூனைக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹூவாங் யூ என்பவர், ஆசை ஆசையாக ‘கார்லிக்’ என்ற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். உரிய பராமரிப்புடன், மிகுந்த அன்பு காட்டி ஹூவாங் வளர்த்து வந்த ‘கார்லிக்’ அண்மையில் உயிரிழக்கவே, மனமுடைந்த அவர், குளோனிங் முறையில் பூனைக் குட்டியை உருவாக்க நிறுவனங்களை நாடினார்.

இந்த முயற்சியை கையில் எடுத்த சினோஜீன் என்ற நிறுவனம், வெற்றிகரமாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலான பூனைக்குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இந்த பூனையானது அச்சு அசலாக தன்னிடம் இருந்த கார்லிக் பூனையை போல் இருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ள அதன் உரிமையாளர் ஹூவாங், இதற்கென சுமார் 25 லட்சம் ரூபாயை($35,000) செலவிட்டுள்ளார்.

குளோனிங் முறையில் பூனைக்குட்டியை உருவாக்கிய சினோஜீன் நிறுவனம், இதற்கு முன் 40க்கு மேற்பட்ட நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் உருவாக்கியதாகவும், பூனைக்குட்டியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செல்லப்பிராணிகளின் தோற்றம் எதுவாக இருந்தாலும், உரிமையாளர்கள் அவற்றை குடும்பத்தின் ஒரு அங்கமாக பார்ப்பதால், அதிக பணம் கொடுத்தும் அவற்றை குளோனிங் முறையில் உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்தது.

செல்லப்பிராணிகளை குளோனிங் முறையில் உருவாக்குவது பல நாடுகளில் சட்டவிரோதமாக கருதப்படும் நிலையில், சீன நிறுவனம் ஒன்று பாண்டா கரடி குட்டிகளையும், பூனைகள் உதவியுடன் உருவாக்கும் ஆராய்ச்சியும் கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருவது குறிப்பிடத்தக்கது.