ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடந்த பதற்றமான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கோபமடைந்தார் என்று இந்த விவகாரம் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் புதன்கிழமை(20) செய்தி வெளியிட்டது.
இந்த உரையாடல் குறித்து அறிந்த ஒரு அமெரிக்க வட்டாரம், ஈரான் மீதான “மிகப் பெரிய தாக்குதலை”ட்ரம்ப் தாமதப்படுத்திய பின்னர் இந்த உரையாடல் நடந்ததாகவும், மேலும் இராஜதந்திரத்திற்கு அதிக அவகாசம் அளிக்குமாறு வளைகுடாத் தலைவர்கள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறியது.
அதன்பிறகு, அமெரிக்காவும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்திற்கும் மீண்டும் போர் தொடங்குவதற்கும் இடையிலான “சரியான எல்லைக்கோட்டில்” இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
“ஒன்று ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது நாங்கள் சில மோசமான காரியங்களைச் செய்வோம்,” என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார். மேலும், அமெரிக்காவுக்கு “100% நல்ல பதில்கள்” கிடைக்காவிட்டால், போர் “மிக விரைவாக” மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் குறித்து நெதன்யாகு “மிகுந்த சந்தேகத்துடன்” இருப்பதாகவும், ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் சீர்குலைக்கவும், முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்தவும் போரை மீண்டும் தொடங்க விரும்பு வதாகவும் ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு “நான் விரும்புவதை எல்லாம் செய்வார்” என்று கூறிய ட்ரம்ப், இஸ்ரேலியத் தலைவருடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக வலியுறுத்தினார்.



