கன்னியா வெந்நீரூற்றின் வரலாறு மாற்றியமைக்கப்படுவதற்கு இந்து மாமன்றம் எதிர்ப்பு

“கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்” என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும்.

கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் தற்போது கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்.

ஏற்கனவே இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரிடம் இவ்விடயம் தொடர்பாக முறையிட்டுள்ளோம். தயவுசெய்து சைவத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்காதீர்கள்” என்று குறித்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

“தொல்லியல் திணைக்களம் சைவ அடையாளங்களை மாற்றி வேற்று மதத்தவரின் அடையாளங்களை நிலைநிறுத்த முனைவதும் மகா துரோகமான விடயம்.

இலங்கையின் ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் அக்கறை செலுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சைவ மக்கள் சார்பில் நாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.