Home Blog Page 3013

அமெரிக்காவில் தாலிபன்கள் உடனான சந்திப்பை ரத்து செய்தார் – டிரம்ப்

தலிபான்களின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சந்திக்கவிருந்ததாக” டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட அண்மையில் இடம்பெற்ற காபுல் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றதை அடுத்து தமது கேம்ப் டேவிட் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை (இன்று) கொள்கை அளவில் தலிபான்களுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவது குறித்த அறிவிப்பை அமெரிக்க பேச்சுவார்த்தையாளரான சல்மே கலில்சாத் குறிப்பிட்டிருந்தார்.

கட்டார் தலைநகர் டோஹாவில் தலிபான்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.

“துரதிருஷ்டவசமாக, எமது சிறந்த படையினர் கொல்லப்பட்ட காபுல் தாக்குதல் ஒன்றுக்கு (தலிபான்கள்) பொறுப்பேற்றது தவறான எண்ணத்தை கட்டியெழுப்புகிறது” என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இந்த சந்திப்பையும் அமைதி பேச்சுவார்த்தைகளையும் உடன் ரத்துச் செய்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு அமெரிக்க படை வீரர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ படையில் இருந்த ருமேனிய வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தாலிபன் அமைப்புடன் செய்துகொள்ள முன்மொழியப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.

எனினும் அமெரிக்க துருப்புகளை முன்கூட்டியே வாபஸ் பெறுவது குறித்து ஆப்கான் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் நிர்வகாத்தில் சில உறுப்பினர்களிடம் இருந்து அமெரிக்க ஜனாதிபதி அழுத்தத்திற்கு முகம்கொடுத்திருந்தார்.

2001 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆப்கானின் அதிக நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள் வடக்கு நகரான குந்துஸ் மற்றும் புலே கும்ரி மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியதோடு தலைநகர் காபுல் மீது இரு தற்கொலை தாக்குதல்களை நடத்தினர்.

அமெரிக்க CIA ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழுவொன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்துல் காதர் சித்தீக்,அப்துல் காதீர் பகார் ஜெகான்சீப் ஜாகீல்வால் சபூர் சாஹீல்வால் ஆகிய சகோதரர்களே சிஐஏயின் ஆதரவுடன் இயங்கும் 02 யுனிட்  எனப்படும் புலனாய்வு பிரிவினரால்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்து அவர்களை தாக்கிய  புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர் என கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மோதலின் போது கொல்லப்பட்டனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அதனை வாபஸ் பெற்றுள்ளனர்

கொல்லப்பட்ட சகோதரர்களிற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதை மறுத்துள்ளதை உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இந்த கொலைகள் குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைகள் யுத்த குற்றங்களிற்கு சமமானவை என ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் ஒமார் ஜஹில்வால் தெரிவித்துள்ளார்.

இரவு பத்துமணிக்கு வீட்டிற்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கைகயை மேற்கொண்ட 02 பிரிவினர்  வீட்டிற்குள் புகுந்து கைகளை கட்டி வீட்டிலிருந்த ஆண்களை விசாரணை செய்த பின்னர் நான்கு சகோதரர்களையும் சுட்டுக்கொன்றனர் இவர்களில் இருவர் அரச ஊழியர்கள் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த படுகொலைகள் குறித்து  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தேசிய  புலனாய்வு பணியக இயக்குநர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரவ் கானி பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

சி.ஐ.டி விசாரணையில் கோத்தாபய

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது  ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம் மற்றும்  தற்போது அவர் இலங்கை கடவுச் சீட்டொன்றினை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனயவுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள இருவேறு முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இரட்டை பிரஜா உரிமையை அகற்றிக்கொண்டதாக, இந்த இலங்கை கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக கோத்தாபய ராஜபக்ஷவினால் ஆவணங்கள் சில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளவும், மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவும் உள் நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடமும் விசாரணை செய்து விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்ய  சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதில் சுமந்திரனும், சுரேனும் தீவிரம்

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சிறீலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை சிறீலங்காவின் அரச தலைவர் வேட்பாளராக நிறுத்துவதுடன் அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ரணில் அங்கு மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களில் பங்குபற்றிய இவர்கள் ரணிலை வெற்றிபெறவைப்பதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ரணில் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ள சுமந்திரன் தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையில் அதிகாரங்களை பகிரும் தீர்வு ஒன்றை 2005 ஆம் ஆண்டு ரணில் முன்வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அதனை நிறைவேற்ற ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும், தற்போது வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் ரணில் விரைவில் அரசியல் அதிகாரங்களை வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடக்கில் ஜனநாயத்தை நிலைநாட்ட ரணில் அரச தலைவராக வரவேண்டும் என சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் – 2 விக்ரம் லான்டரை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லான்டரை கண்டுபிடித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சுற்றுவட்டக் கலன், விக்ரம் லான்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை லான்டருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றோம். விரைவில் தொடர்பு கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். சந்திராயன் – 2 திட்டம் முழுமையாக தோல்வியடையவில்லை. அடுத்த 14 நாளில் (நிலவில் இது ஒரு நாள்) விக்ரம் லான்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சந்திராயன் – 2 திட்டம் இரு விடயங்களை உள்ளடக்கியது. ஒன்று அறிவியல், மற்றொன்று தொழில்நுட்ப செயற்பாடு. ஆர்ப்பிட்டர் என்பது அறிவியல் சார்ந்தது. லான்டரின் தரையிறக்கம் என்பது மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் தொழில்நுட்ப செயற்பாட்டை சார்ந்தது.

chandrayan 34 சந்திராயன் – 2 விக்ரம் லான்டரை கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்இதற்கு முன்பு இந்தியா அனுப்பிய ஆர்ப்பிட்டர்களைவிட இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வித்தியாசமானது. இது நமக்கு அதிகப்படியான தகவல்களை அளிக்கும்.

செப்டெம்பர் 7ஆம் திகதி அதிகாலை 1.30 தொடக்கம் 2.30 மணியளவில் சந்திராயன் – 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லான்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், நிலவின் மேற்பரப்பிற்கு 2.1 கிலோமீற்றர் உயரத்தில் இருந்த போது லான்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.  எனவே, லான்டரின் நிலை குறித்து பலதரப்பட்ட கேள்விகள் எழுந்தன. மீண்டும் லான்டரை தொடர்பு கொள்ள முடியுமா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சந்திராயன் குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், சந்திராயன் 2 திட்டம்  மிகவும் நுட்பமான பணித்திட்டம். இதற்கு முன் இஸ்ரோ முன்னெடுத்த திட்டங்களுடன் ஒப்பிடும் போது, இது ஒரு பெரிய படிக்கல். ஜுலை 22, 2019இல் சந்திராயன் 2 ஏவப்பட்டதில் இருந்து இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே ஆர்வத்துடனும் பெரிய எதிர்பார்ப்புகளுடனும்,  இதன் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து வந்தது. இது நிலவின் ஒரு பகுதியை மட்டுமல்ல, மொத்த நிலவையும் ஆராய்வதற்கான நோக்கம் கொண்ட வித்தியாசமான திட்டம் இது.

சரியான சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் ஆர்ப்பிட்டர், நிலவில் ஏற்படும் மாற்றங்கள், துருவங்களின் நீர் மற்றும் கனிமங்கள் எங்கு இருக்கின்றது என்பது குறித்து நாம் அதிகம் புரிந்து கொள்ள உதவும். இத்திட்டம் 90-95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

”ராஜீவ் காந்தி கொலை இந்தியாவிற்கு எதிரான குற்றம் அல்ல” என்று வாதாடிய வழக்கறிஞர் காலமானார்

மூத்த வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக் குறைவால் இன்று (08.09) காலமானார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வரும் போதும்  அதனை எதிர்த்து வாதாடும் திறமை கொண்டவர்.

கடந்த 2017 செப்டெம்பரில் தனது வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார்.

வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐவரின் வழக்கிற்காக, கொளத்தூர் மணி, ஹென்றி உட்பட ஐவருக்கும் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய கட்டணம் எதுவுமின்றி வாதாடி வென்றார்.

ஈழப் படுகொலை குறித்து வை.கோபாலசாமி எழுதிய “Genocide of Eelam Tamils Hearts bleed” நூலை இந்திய தலைநகர் டெல்லியில் வெளியிட்டு உரையாற்றும் போது, தான் உயிரோடு இருக்கும் வரை வைகோவிற்காக, ஈழத் தமிழர்களைக் காக்க அனைத்தையும் செய்வேன் என்று சபதம் பூண்டார்.  இதே நூலை, மராட்டியில் மொழிபெயர்த்து, மும்பை செம்பூர் தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட்ட போது, ஈழத் தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவேன் என்றார்.

வார்த்தைகளால் மட்டுமல்ல இதை செயலிலும் காட்டினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரது (பேரறிவாளன், முருகன், சாந்தன்) தூக்குத் தண்டனையை இரத்துச் செய்வதற்காக வாதாடினார்.  அந்த வழக்கின்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில்    உரையாற்றினா். 2014ஆம் ஆண்டு இந்த வழக்குத் தொடர்பாக வாதாடும் போது ராஜீவ் காந்தி கொலை நாட்டிற்கு எதிரான குற்றமல்ல. மேலும், இவர்களுக்கு இந்தக் கொலையில் நேரடியான தொடர்பு இல்லை. 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள். இந்த வழக்கை கருணை அடிப்படையில் அணுக வேண்டும் என்று கூறினார்.

ஏறத்தாழ இரண்டரை வருட காலமாக உச்சநீதிமன்றத்தில் மூவர் தூக்கு வழக்கில், அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றார். அவரது வாதத் திறமை தான் தூக்குக் கயிற்றை பலமிழக்கச் செய்தது. அதன் பின்னர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் வாதிட்டவர்.

கடந்த ஒரு வருடமாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், இன்று இயற்கை எய்தினார்.

 

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இந்தியப் பிரதமர் மோடி கையிலேயே உள்ளது – சீ.யோகேஸ்வரன்

இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இவர், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தமிழ்நாட்டில்  கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர். அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் படித்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. தமிழக அரசும், இந்திய அரசும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விருப்பப்படி இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின் இலங்கை அகதிகள் 15 இலட்சம் பேர் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கை தமிழ் மக்களுக்கும், இந்திய தமிழ் மக்களுக்கும் உறவு நீடிக்க வேண்டும் எனில் இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது நாங்கள் கப்பல் போக்குவரத்து தொடங்குமாறு கேட்டோம். அவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்துக் கொடுப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவது பிரதமர் நரேந்திரமோடி கையில் தான் உள்ளது. அவர் நினைத்தால் இலங்கை மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்கலாம்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஓரளவிற்கு அமைதி நிலவியது. கடந்த ஏப்ரல் 21 இலங்கையில் உள்ள தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களில் அதிகம் பேர் தமிழர்கள்தான் என்றார்.

 

 

 

சம்மாந்துறையில் காட்டு யானைகள் தாக்குதல்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஒடங்கா-2 பகுதியில்  தனியான் காட்டு யானை ஒன்று   பொதுமக்கள்  வசிக்கும் பகுதிகளில் அதிகாலை  திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது.

அதிகாலை இவ்வாறு   உள்நுழைந்த பெரிய தனியான் யானை   அங்குள்ள  வீடுகளின் சுவர்களை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன் நெற்களஞ்சியத்திற்கும் கடும் சேதங்களை ஏற்படுத்தி தப்பி சென்றுள்ளது.

மேலும்   கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கல்லிரைச்சல் பகுதியில் யானை
தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  ஏ.அமீர் என்ற நபரும் இன்று உயிரிழந்தள்ளார்.

elepha samanthurai6 சம்மாந்துறையில் காட்டு யானைகள் தாக்குதல்மேலும்  இவ்வாறு யானையின்  தாக்குதலுக்கு உள்ளான  வீட்டு   மதில்கள்
சேதமடைந்த நெற்களஞ்சிய  பகுதிகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இது தவிர   தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களை சுற்றி 50க்கும் அதிகமான யானை கூட்டங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பாக பொதுமக்கள்   கருத்துக்களை தெரிவிக்கையில்

elepha samanthurai3 சம்மாந்துறையில் காட்டு யானைகள் தாக்குதல்குறிப்பாக இவ் யானை அடிக்கடி எங்கள் பிரதேங்களுக்கு வருகின்றன.இதனால் எங்களுக்கு அச்ச நிலை காணப்படுகிறது  சொத்துக்களுக்கு சேதங்கள் இடம்பெறுகின்றது   .இது விடயத்தில் உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த   வேண்டும் என்றனர்.

இது தவிர கடந்த சில தினங்களுக்கு முன்னரும் நிந்தவூர் பகுதிகளிலும் யானைகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கவுள்ள மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகமானவர்கள் ட்ரம்ப் இற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என அதிர்ச்சியான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார் இவருக்கு போட்டியாக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது என அமெரிக்கர்களிடம் ராஸ்மூசன் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியதில் 52 சதவீதம் பேர் ட்ரம்ப் இற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் வேளையில் இந்த சதவீதம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இதனால் அடுத்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

 

மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்று அப்பகுதிக்கு சென்று பாடசாலையின் சேதமாக்கப்பட்ட சுற்றுமதிலை பார்வையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பிலும் பிரதேச மக்களுடன் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் இது தொடர்பில் தொடர்புகொண்டு பேசியதுடன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

batti korapalayam2 மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுவருவதன் காரணமாக குறித்த பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று இப்பிரச்சனை தொடர்பாகப் பிரதேசச் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரைகளை பாரளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ளார்.

batti korapalayam மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்