ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதில் சுமந்திரனும், சுரேனும் தீவிரம்

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சிறீலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை சிறீலங்காவின் அரச தலைவர் வேட்பாளராக நிறுத்துவதுடன் அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுப்பதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ரணில் அங்கு மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களில் பங்குபற்றிய இவர்கள் ரணிலை வெற்றிபெறவைப்பதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ரணில் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ள சுமந்திரன் தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையில் அதிகாரங்களை பகிரும் தீர்வு ஒன்றை 2005 ஆம் ஆண்டு ரணில் முன்வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அதனை நிறைவேற்ற ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும், தற்போது வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டுவரும் ரணில் விரைவில் அரசியல் அதிகாரங்களை வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடக்கில் ஜனநாயத்தை நிலைநாட்ட ரணில் அரச தலைவராக வரவேண்டும் என சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.