சி.ஐ.டி விசாரணையில் கோத்தாபய

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது  ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம் மற்றும்  தற்போது அவர் இலங்கை கடவுச் சீட்டொன்றினை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனயவுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள இருவேறு முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இரட்டை பிரஜா உரிமையை அகற்றிக்கொண்டதாக, இந்த இலங்கை கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக கோத்தாபய ராஜபக்ஷவினால் ஆவணங்கள் சில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளவும், மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவும் உள் நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடமும் விசாரணை செய்து விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்ய  சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.