”ராஜீவ் காந்தி கொலை இந்தியாவிற்கு எதிரான குற்றம் அல்ல” என்று வாதாடிய வழக்கறிஞர் காலமானார்

மூத்த வழக்கறிஞரும், பாஜக மூத்த தலைவருமான ராம்ஜெத்மலானி, உடல்நலக் குறைவால் இன்று (08.09) காலமானார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பெரிய இடத்தில் ஊழல் நடைபெற்றாலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வரும் போதும்  அதனை எதிர்த்து வாதாடும் திறமை கொண்டவர்.

கடந்த 2017 செப்டெம்பரில் தனது வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார்.

வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐவரின் வழக்கிற்காக, கொளத்தூர் மணி, ஹென்றி உட்பட ஐவருக்கும் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய கட்டணம் எதுவுமின்றி வாதாடி வென்றார்.

ஈழப் படுகொலை குறித்து வை.கோபாலசாமி எழுதிய “Genocide of Eelam Tamils Hearts bleed” நூலை இந்திய தலைநகர் டெல்லியில் வெளியிட்டு உரையாற்றும் போது, தான் உயிரோடு இருக்கும் வரை வைகோவிற்காக, ஈழத் தமிழர்களைக் காக்க அனைத்தையும் செய்வேன் என்று சபதம் பூண்டார்.  இதே நூலை, மராட்டியில் மொழிபெயர்த்து, மும்பை செம்பூர் தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட்ட போது, ஈழத் தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவேன் என்றார்.

வார்த்தைகளால் மட்டுமல்ல இதை செயலிலும் காட்டினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரது (பேரறிவாளன், முருகன், சாந்தன்) தூக்குத் தண்டனையை இரத்துச் செய்வதற்காக வாதாடினார்.  அந்த வழக்கின்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில்    உரையாற்றினா். 2014ஆம் ஆண்டு இந்த வழக்குத் தொடர்பாக வாதாடும் போது ராஜீவ் காந்தி கொலை நாட்டிற்கு எதிரான குற்றமல்ல. மேலும், இவர்களுக்கு இந்தக் கொலையில் நேரடியான தொடர்பு இல்லை. 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள். இந்த வழக்கை கருணை அடிப்படையில் அணுக வேண்டும் என்று கூறினார்.

ஏறத்தாழ இரண்டரை வருட காலமாக உச்சநீதிமன்றத்தில் மூவர் தூக்கு வழக்கில், அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றார். அவரது வாதத் திறமை தான் தூக்குக் கயிற்றை பலமிழக்கச் செய்தது. அதன் பின்னர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் வாதிட்டவர்.

கடந்த ஒரு வருடமாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், இன்று இயற்கை எய்தினார்.